Sunday, September 30, 2018

பீமனும் கடோத்கஜனும்



அன்புள்ள ஆசிரியருக்கு,
     
இன்றைய (26.9.18)வெண்முரசில்      கடோத்கஜனை பல வருடங்களுக்குப் பிறகு    பார்க்கும்போது  பீமன் அமைதியாக இருப்பது, அரவானை பார்த்தபோது அர்ஜுனன் இருந்த மனநிலையை நினைவுபடுத்தியது.பீமனுக்கு மிகவும் பிரியமானவன் அல்லவா கடோத்கஜன்.போருக்கு வராமல் இருந்திருக்கலாம் என்றே தந்தையின் உள்ளம் எண்ணும். தீபத்தை நோக்கி விட்டில்கள் என இளையவர்கள் அனைவரும் குருசேத்திரத்தை அடைந்துவிட்டார்கள்.
               
             கா.சிவா

கடோத்கஜனின் உருவம்




அன்புள்ள ஜெ

கடோத்கஜனின் உருவமும் அவன் படைகளின் தனிச்சிறப்பும் ஒரு மேஜிக்கலான தன்மையுடன் இருந்தன. மூலக்கதையிலேயே அவர்கள் பறக்கும் ஆற்றல்கொண்ட படைவீரர்கள் என்பது உண்டு. அதை இப்போது ஒரு ரியாலிட்டியாகச் சொல்லியிருந்தீர்கள். அவர்களின் கால்களின் அமைப்பு பிரயாகையிலேயே வந்துவிட்டது. இடும்பனை அந்தக்காலின் பலவீனத்தை வைத்துத்தான் பீமன் கொல்கிறான். கடோத்கஜனின் அன்பும் பெருந்தன்மையும் மனநிறைவை அளிப்பவையாக இருந்தன. அற்புதமான கதாபாத்திரம் அவன்

ஜெயராஜ்

ஐவரின் சக்தி




ஜெ


அவளை அறியா அமரரும் இல்லை
அவளன்றி செய்யும் அருந்தவம் இல்லை
அவளன்றி ஐவரால் ஆவதொன்றுமில்லை
அவளன்றி ஊர்புகும் ஆறு அறியேனே

தற்செயலாக திருமந்திரத்தில் இந்த வரிகளை வாசித்தேன். பாஞ்சாலி என்ற உருவகத்தை துர்க்கையின் வடிவமாகவும், சாக்த மதத்தின் நோக்கிலும் நீங்கள்தான் அமைத்திருக்கிறீர்கள் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஏற்கனவே அந்த மரபு இங்கே இருந்திருக்கிறது. அது இங்கே சாக்தம் வழக்கொழிந்தபோது மறைந்து ஃபோக் வழிபாட்டில் மட்டும் இருந்திருக்கிறது. அதுதான் திரௌபதை அம்மன் வழிபாடு என நினைக்கிறேன்

இங்கே திருமூலர் ஐந்து என்பது ஐந்து புலன்களை. அதை ஆளும் ஆத்மாதான் அவள் என்று சொல்லப்படுகிறது. அது பரம்பொருளின் வடிவான சக்தி. ஆனால் ஐந்து புலன்களாக பாண்டவர்களைச் சொல்லும் வழக்கம் உண்டு. வாயுவுக்குரிய மூச்சுதான் பீமன். இந்திரனுக்குரிய கண்கள்தான் அர்ஜுனன். நாக்கு யுதிஷ்டிரன். செவியும் தோலும் நகுலனும் சகதேவனும்.

இந்தப்பார்வை எனக்கு மிக வியப்பை அளித்தது. வெண்முரசு நவீனச்சூழலில் ஒரு பெரிய மீட்ப்புப்பணியைச் செய்கிறது

சந்தானம்

திசைதேர்வெள்ளம்



Dear Jeyamohan
 
“Dhisai Ther Vellam”, another “sol vellam” where differences are forgotten with the word "kill". Focusing only on the revenge for some, why "am I" in the warfront for others, yet all of them marching with a unified rhythm to kill, win, and protect a belief which many do not understand fully!.  You bring additional dimensions to the story with your exhaustive research on the names and political landscape of that era.  Anther noteworthy feature is when you bring a character for example Asangan, you magically bring that connection with the earlier episodes and also provide a synopsis and fill the gap between then and now. This is where as a writer you stand on top of the Everest. You are providing a mini Wikipedia for those characters and immortalize them however small the role may be.

Royals, Nobility, Nishadas, Arakars, warriors from different parts of India come together in unison to protect their belief in Kurukshetra.  The focus is getting sharper on both sides motivated by words, actions, and dreams. The chapter where Ma Ambai reiterating her vengeance including her siblings is so real as if one is witnessing the anger of Ma.  Amazing imagination that one cannot but believe “Yes, this is how it should have happened”, the great war is now increasing its momentum. It is also sad that eventually all the warriors will die stoically or jubilantly. War is both rivalry and revelry!
Looking forward to the next chapters.  Also enjoyed reading about your travels to the waterfalls in Karnataka. My bucket list to visit places in India is increasing exponentially!. Thank you.

Warm regards

Sobana Iyengar

Saturday, September 29, 2018

சொற்பெயர்த்தல்




அன்புள்ள ஜெ

இந்த இணைப்பிலுள்ள கட்டுரையை வாசித்தேன். கடோத்கஜன் என்ற சொல் சரியானதா?


ராஜ்

அன்புள்ள ராஜ்,

இதுபற்றி பிரதி சரிபார்க்கும் ஸ்ரீனிவாசன் எழுப்பிய கேள்வியும் பதிலும் கீழே.

ஜெ,

கட + உத்கச - கடோத்கச என்பதுதான் அவன் பெயரென்றால்
கடோத்கசன் என்று சொல்வதுதானே சரியாக இருக்கும்?

ஸ்ரீனிவாசன்

அன்புள்ள ஸ்ரீனிவாசன் சார்,

அதை உத்தேசித்தேன்


ஆனால் கடோத்கசன் என்றால் kad0thkasan என தமிழ் உச்சரிப்பு வருகிறது கடோத்கஸன் என்பதுபோல


சரியான படி எழுதினால் ஹ்கட்டோத்கச்சன் என்று எழுதவேண்டும்
ஒலி வரக்கூடாது. என நினைத்தேன். ஆகவே போட்டேன்


உச்சரிப்பு ஏறத்தாழ சம்ஸ்கிருத உச்சரிப்பை நெருங்குகிறது. ஆகவே இருக்கட்டும்


ஜெ

*

முதலில் இக்கட்டுரையிலுள்ள மேட்டிமைநோக்கு, அதன் விளைவான எள்ளல் ஏகத்தாளம் ஆகியவற்றைக் பாருங்கள். இவை எங்கிருந்து வருகின்றன என்று நோக்குக. நான் எழுதத் தொடங்கிய நாள் முதல் இது வந்துகொண்டே இருக்கிறது. இதைக்கடந்தே இந்நூலை எழுதிக்கொண்டிருக்கிறேன்.  

ஆயினும் இக்கட்டுரையில் மிக ஆழத்திலேனும் ஒரு மெல்லிய நல்லநோக்கம் இருக்கக்கூடும் என நம்புவதனால் இந்த விளக்கம்

இதேபோல முன்பும் பிழைசுட்டுதல் எள்ளல் பலரிடமிருந்தும் என வந்துகொண்டிருந்தன. அனைத்துக்கும் பலமுறை விரிவான விளக்கம் அளித்துள்ளேன். ஆனால் அது அவர்களை மேலும் சீண்டி மேலும் மேலும் தாக்குதலையும் எள்ளலையும் உருவாக்கியது. வெண்முரசின்மீதான ஒரு போராகவே அதை ஆக்கிக்கொண்டார்கள். எழுதுவதைவிட பெரிய வேலையாகப் போய்விட்டது அவர்களுக்கு விளக்குவது. ஆகவே நிறுத்திக்கொண்டேன்.
*

சம்ஸ்கிருதம் எனக்குத்தெரியும் என சொல்லிக்கொள்ளவில்லை. அது பல அடுக்குகள் கொண்ட மிகத்தொன்மையான மொழி. அதை அறிவேன் என்று சொல்லிக்கொள்வதும் சரி, அதைச்சார்ந்து ஆணித்தரமான சொல்லாடல்களுக்கு இறங்குவதும் சரி, ஒருவகை துணிச்சலாலேயே இயல்வது. எனக்கு அத்துணிச்சல் இல்லை. பெரும்பாலும் நான் நம்பும் சம்ஸ்கிருத அறிஞர்களிடம் கலந்தாலோசித்தே எழுதுகிறேன். தவறுகள் நிகழும், நிகழாமல் இதை எவராலும் எழுதமுடியாது. தொடர்ச்சியாகத் திருத்திக்கொண்டே செல்லவேண்டியதுதான்.

தமிழில் சம்ஸ்கிருதத்தை எழுதுவதில் உள்ள சிக்கல்கள் தமிழிலக்கியம் தோன்றிய நாள்முதல் பல தலைமுறைகளாக நீடித்து வருபவை. தமிழ் சம்ஸ்கிருதத்திற்கு வேறான உச்சரிப்பு முறை கொண்ட மொழி. சம்ஸ்கிருதத்தின் ஒலிகள் பல நம்மிடம் இல்லை, நம் மொழிக்கு அவை தேவையுமில்லை.

ஆகவே முற்காலங்களில் சொற்களை ஒலிமாற்றம் செய்து பயன்படுத்தினார்கள் மணிமேகலை  ‘வேத வியாதனும் கிருதகோடியும் ஏதமில் சைமினி எனுமிவ் ஆசிரியர்’ என்கிறது. வியாசன் வியாதனும் ஜைமினி சைமினியும் ஆகியிருக்கிறார்கள்.

அதன்பின் கம்பராமாயணம் சொற்களை ஒலித்திரிபு செய்து பயன்படுத்தியதைக் காண்கிறோம். ஏராளமான வடமொழிச் சொற்களை கம்பன் உச்சரிப்பை மாற்றி அப்படியே தமிழாகப் பயன்படுத்துகிறான்

இது எதற்கென்றால் தமிழுக்கு ஓர் ஒலியமைவு உண்டு. சம்ஸ்கிருதத்தை அப்படியே பயன்படுத்தினால் அந்த ஒலியமைவு அழிகிறது. குறிப்பாக இசையொழுங்குக்கு முதன்மை இடமுள்ள செய்யுளில் அது எழுந்து தெரியும்.

ஏறத்தாழ கம்பனின் காலகட்டத்திலேயே கிரந்த எழுத்துக்கள் வந்துவிட்டன. அவை இங்கே சம்ஸ்கிருதத்தை எழுத பயன்பட்டன. அதிலிருந்து சில எழுத்துக்கள் தமிழில் புகுந்தன. அவற்றில் ஸ ஜ ஷ ஆகியவை சாதாரணமாகப் புழக்கத்திலுள்ளன. தமிழின் ஒலியமைவுக்கு அணுக்கமானவையாக காலப்போக்கில் மாறிவிட்டன. க்ஷ போன்றவை அயலாக ஒலிக்கின்றன. நான் கூடுமானவரை க்ஷவை தவிர்க்கிறேன். ஆகவேதான் ஷத்ரியர் என எழுதுகிறேன். ஏனென்றால் அது நிறைய வரும் சொல்.

கிரந்த எழுத்துக்களைத் தவிர்ப்பது ஒரு பெரிய இயக்கமாக தமிழ்மறுமலர்ச்சிக்காலத்தில் உருவானது. நான் முற்றாக கிரந்த எழுத்துக்களைத் தவிர்க்கமுடியும் என நினைக்கவில்லை.ஆனால் தமிழின் ஒலியிசைவுக்கு உகக்காதபடி கிரந்த எழுத்துக்களை பயன்படுத்துவதை தவிர்க்கிறேன் 

அதன் பின் சம்ஸ்கிருத ஒலிகளை எழுத கீழே கோடுகள் போடுவது, புள்ளிகள் வைப்பது, ஆங்கில எழுத்துக்களுடன் சேர்த்து எழுதுவது என பலவகையான உத்திகள் கையாளப்பட்டன. எவ்வகையிலும் அதை எழுதமுடியாதென்பது பின்னர் கண்டுகொள்ளப்பட்டது. 

சம்ஸ்கிருதச் சொற்களைத் தமிழில் எழுதுவதில் கடைப்பிடிக்கவேண்டிய நெறிகளாக நான் கருதுவன சில உண்டு.

அ. அவை தமிழுக்கான ஒலித்திரிபுடனேயே அமையவேண்டும். கிருஷ்ணன் தானே ஒழிய க்ருஷ்ண அல்ல.

ஆ. அதேசமயம் முற்றாக தமிழ்ப்படுத்தி மூலத்திலிருந்து விலகுவதும் எனக்கு ஏற்புடையது அல்ல. கிருட்டினன் என எழுதமாட்டேன்

இ. சம்ஸ்கிருத ஒலியமைவு தமிழிலும் வந்தாகவேண்டும் என்று முயலக்கூடாது.சம்ஸ்கிருதச் சொற்களின் வேர்ச்சொல், புணர்ச்சிமுறை ஆகியவற்றைத் தமிழில் கொண்டுவர முடியாது. சம்ஸ்கிருதத்தில் கிருஷ்ணன் என எழுதும்போது வரும் கிரு வேறு க்ருஷ்ண என எழுதும்போது வரும் க்ரு வேறு.

இந்த அடிப்படைகளில் பெயர்களை தமிழில் பயன்படுத்தும்போது பல சிக்கல்கள் வருகின்றன. கூடுமானவரை அவற்றை கணித்து ஒருநிலைபாடு எடுத்து கையாள்கிறேன். அதில் பிழைகளும் இருக்கலாம்.

உதாரணமாக துஸ்ஸாஸனன் என்பதே சரியான சம்ஸ்கிருதச் சொல். தீய ஆணைகளைக் கொண்டவன், ஆணைகளிடப்பட இயலாதவன் என்னும் இருபொருள்கொண்ட சொல். [து+ ஸாஸனன்] உண்மையில் இச்சொல்லை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் எழுதவே முடியாது. அது ஸ அல்ல. மென்மையான நாநுனி ஸ. ஸமம் என்பதிலுள்ள ச அல்ல. ஸங்கரன் என்பதிலுள்ள ஸ.

இதை இப்படியே எழுதினால் தமிழின் ஒலியொழுக்குக்கு முரண்பட்டு நிற்கும். வாசகன் சொற்களை உள்ளூர உச்சரித்தபடியேதான் வாசிக்கிறான். அயலான உச்சரிப்பு அவனை மொழியிலிருந்து விலக்கும். நடையொழுக்கு அழியும். ஆகவே துச்சாதனன் என்ற சொல் கையாளப்படுகிறது. அதற்கு தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் எந்தப்பொருளும் கிடையாது. ஆனால் வில்லிப்புத்தூரார் முதல் பாரதி வரை அனைவரும் பயன்படுத்தியது அது.

துரியோதனன் என்ற சொல்லை துர்யோத்தனன் என எழுதவேண்டும். பெரிய த. தீய ஆயுதங்கள்கொண்டவன், வெல்லமுடியா ஆயுதங்கள் கொண்டவன் என இருபொருள். ஆனால் அப்படி எழுதமுடியாது. அதே சமயம் யுதிஷ்டிரன் என்பதை யுதிட்டிரன் என எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை.

இப்படி சொற்களையும் பெயர்களையும் பயன்படுத்துவதிலுள்ள உச்சரிப்புக் குழப்பங்கள் பல. அவற்றை அவ்வப்போது எதிர்கொண்டு அந்தத் தேவைக்கு ஏற்ப ஒரு முடிவு எடுக்கிறேன். அதற்கு தமிழில் இன்று நிலையான முறைமைகள் ஏதுமில்லை.

என் நோக்கம் மகாபாரதத்தை ஒரு தமிழ்நிகழ்வாக ஆக்குவது.மணிப்பிரவாளத்தை உருவாக்குவதல்ல. இன்றைய தமிழ்வாசகன் சம்ஸ்கிருத உச்சரிப்புகளிலிருந்து மிக விலகிவிட்டவன். வெண்முரசு தூயதமிழில் எழுதப்படுவது அதனால்தான். இதிலுள்ள எண்ணிலடங்கா இடர்களால் பிழைகள் உருவாகக்கூடும். அவற்றை மெல்லமெல்லவே களைய முடியும்.

*
கடோத்கஜன் என்னும் சொல். அதை சரியானபடி எழுதினால் க்ஹட்டோத்கச்சன் என எழுதவேண்டும். கடோத்கசன் என எழுதினால் தமிழ் உச்சரிப்பில் kadothkasan என்றே அமையும். ஏனென்றால் தமிழில் கசன் எனும் சொல்லில் உள்ள ச என்னும் எழுத்து ஸ ஆகவே ஒலிக்கும். கசப்பு, கசடு போன்ற சொற்கள் உதாரணம். சொல்நடுவே வரும் ச தமிழில் cha என்ற உச்சரிப்பை அடைவதில்லை.

கடோத்கஜன் என்ற சொல்லில் உள்ள க, டோ ஆகியவை அழுத்தமானவை. அவற்றை விட்டுவிடுவதே வழி. ஆனால் கசன் என எழுதினால் மொத்த உச்சரிப்பே மாறுவதுடன் தமிழில் தவறான பொருளும் அமைகிறது. ஆகவே cha என்ற உச்சரிப்புக்கு அணுக்கமாக ஜவைப் போடலாமென முடிவெடுத்தேன். அதை சம்ஸ்கிருதம் அறிந்த இருவருடன் கலந்து ஆலோசிக்கவும் செய்தேன்.

சம்ஸ்கிருதச் சொற்கள் உச்சரிப்பில் பொருள்மாறுபாடு கொள்பவை. புணர்ச்சிவழியாகவும் மாறுபாடுகள் கொள்பவை. ஆகவே மூலத்திலுள்ள பொருள் அமையும்படி தமிழில் கையாள முடியாதென்பதே என் புரிதல்.

*
பொதுவாக சம்ஸ்கிருதம் அறிந்தவர்கள் சொற்களின் உச்சரிப்பை ஒலிபெயர்ப்பது, சொற்புணர்ச்சி, வேர்ச்சொல் காண்டல் ஆகியவை சார்ந்து மிகைச்சொல்லாடல்களில் ஈடுபடமாட்டார்கள். ஏனென்றால் மிகச்சிக்கலான விரிவான இலக்கணநெறிகள் கொண்ட அம்மொழியில் சொற்களைப் பலவாறாகப் பிரிக்கமுடியும். பலகோணங்களில் வேர்ச்சொல் கொள்ளவும் இயலும். இலக்கண அறிஞர்கள் முறைப்படி அதைச்செய்யலாம். மற்றவர்கள் செய்வது வீண்வேலை.

பிறர் வெவ்வேறு தளங்களில் பேசிப்பேசி சொற்களை கூடுமானவரை அறியவே முயல்கிறார்கள். பேரறிஞர்கள் நடுவிலேயே சொல்லாய்வில் பெரும்பிழைகள் சுட்டப்படுவதுண்டு எனும்போது மொழியியல் அறிஞர்களல்லாதவர்களுக்கு எதையும் அறுதியிட்டு உரைக்கவோ எவரையும் எள்ளி நகையாடவோ தகுதி இல்லை என இந்த அறிவுத்தளத்தை அறிந்தவர் உணர்ந்திருப்பர். 

நான் வெண்முரசில் முயல்வது மொழியாக்கம் அல்ல. மறு ஆக்கம். ஆகவே இவற்றுக்கு என்வரையில் பெரிய இடமில்லை.
*
சம்ஸ்கிருதம் சார்ந்து இங்கே எழுந்துவரும் உளவியல்கள் மிகச்சிக்கலானவை. கேரளத்தில் சம்ஸ்கிருதம் ஒரு மொழி மட்டுமே. நான் கலந்துகொள்ளும் நான்கு சம்ஸ்கிருத அறிஞர்களும் மொழி ஆய்வாளர்கள். இங்கே அதை ஒருவகை பற்றாக எடுத்துக்கொள்கிறார்கள். ஆகவே பிறருடன் நிகழும் மிக எளிய சொல்லாடலிலேயே சீண்டப்படுகிறார்கள்.

அந்த தளத்திலேயே நோக்குக. ஒருவர் மகன் என்பதற்கு நந்தனன் என்று சொல்லலாம் என முன்பெப்போதோ ஏதோ ஒரு தளத்தில் சொல்லியிருக்கிறார். நான் அது நந்த எனும் வேர் கொண்டது, மகிழ்விப்பவன் என்று அதற்கு நேர்ப்பொருள் என விளக்கினேன். இன்னொரு சொல்லுடன் இணைகையில் [உதாரணமாக தேவகி நந்தனன் ] அது மகன் என்றாகும். தனியாக மகன் என பொருள் அளிக்காது என்றேன். அவர் புண்பட்டு, நான்காண்டுகளுக்குப்பின்  வந்து என்னை முட்டாள் என்று சொல்லி தலையிலறைந்து சலித்துக்கொள்கிறார். நான் எழுதியது இந்தியாவின் தலைசிறந்த சம்ஸ்கிருத அறிஞர் ஒருவரை கலந்துகொண்டபின்பு.

அதேபோல கடம் என்னும் சொல். சம்ஸ்கிருதத்தில் அச்சொல்லுக்கு கலம்,குடம் என்று பொருள் உண்டு. அரிதாக வண்டி என்றும். மோனியர் விலியம்ஸ் அகராதியிலேயே pitcher என்ற சொல்லுக்கு கடம் என்ற சொல்லும் அளிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். கலம்,குடம் ஆகியவற்றுக்கு ஏறத்தாழ பொதுச்சொல்லே பயன்படுத்தப்படுகிறது.

இது ஒர் எளிய சொல்லாராய்ச்சி. இதற்கு எள்ளல் நக்கல் ஆங்காரம் ஆவேசம் என விவாதம் நிகழுமென்றால் எவர் இங்கே இலக்கியம் எழுதமுடியும்? இந்த உணர்வுகளுடன் எவர் போரிட முடியும்? ஆகவே இவற்றைத் தவிர்க்கவே எண்ணுகிறேன்.

வெண்முரசு தடுத்துநிறுத்தப்படவேண்டும் என ராமசாமி சொல்கிறார். பலமுயற்சிகள் அதற்கு நிகழ்ந்தன. அதைமீறி இப்படைப்பு  கிட்டத்தட்ட முடியவிருக்கிறது. இனி இது ‘authentic’ அல்ல என்ற விவாதம் கொஞ்சநாள் நிகழும். இலக்கியப்படைப்புகள் வேறு ஒரு தளத்தில் வாசிக்கப்படுகின்றன என இவர்கள் அறிவதேயில்லை
   

Friday, September 28, 2018

காவல்




ஜெ

அசங்கன் காவல்மேடையில் காத்திருப்பதைப்பற்றிய பகுதியை தனியாக வெட்டி சேமித்து வைத்து வாசித்தேன். இத்தகைய கதையோட்டத்தில் அதெல்லாம் அப்படியே கவனிக்காமல் போய்விடுவதற்குத்தான் வாய்ப்பு. அவன் கூர்ந்து கவனிக்கக்கூடாது, மூளை களைப்படையும். கவனிக்காமலும் இருக்கக்கூடாது. அனிச்சையாகக் கவனிக்கவேண்டும். அப்போதுதான் சிறந்த காவல் அமையும். அவன் கற்றுக்கொள்ளும் அந்தப்பாடமும் அங்கே அவனுக்குக் கிடைக்கும் அனுபவங்களும் அழகானவை. பொதுவாக வெண்முரசில் குதிரைவளர்ப்போ காவல்வேலையோ அதில் ஈடுபடுபவர்கள் அதன் நுட்பங்களை நன்கறிந்தவர்களாகவே இருக்கிறார்கள்

ராஜசேகர்.எம்

கடோத்கஜனின் வருகை




ஜெ

யுதிஷ்டிரனும் தம்பியரும் கடோத்கஜனை வரவேற்கும் காட்சி அற்புதமானது. அதே காட்சி முன்பு பிரயாகையில் வந்திருக்கிறது.  தருமனின் கால்களைத் தொட்டு வணங்கினான். “அழியாப்புகழுடன் இரு மைந்தா” என்றான் தருமன். “காடுறைத் தெய்வம் என்று கேட்டிருக்கிறேன். உன் வடிவில் பார்த்தேன். என்றும் உன் அன்பு என் குடிக்குத் தேவை.”  என்று யுதிஷ்டிரர் அன்று கடோத்கஜனிடம் சொன்னார். கடோத்கஜன் நகுலனையும் சகாதேவனையும் தூக்கி எறிந்து பிடித்து விளையாடினான். குந்தியை தோளிலேற்றி விளையாடினான். அப்போது அவன் மிகவும் சிறுவன். அந்தக்காட்சியை இப்போதும் மறக்கமுடியவில்லை

சுவாமி


‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 64


இடும்பவனத்தின் கதை




ஜெ

மிகச்சுருக்கமாகச் சொல்லப்பட்டாலும் இடும்பவனத்தின் மாறுதல் ஒரு பெரிய வரலாறாக அமைந்தது. அந்த வரலாற்றின் தொடக்கம் என்பது அந்த ஆள்நுழையாக் கொடுங்காட்டுக்குள் வேறுவழியே இல்லாமல் பீமன் நுழைவது. அவன் இடும்பனைக்கொன்றான். இடும்பியை மணந்தான். இன்றைக்கு இடும்பவனம் ஒரு பெரிய நகரமாக மாறியிருக்கிறது. இன்னும் சிலதலைமுறைக்குள் அது அரசகுடியாக ஆகிவிடும். அந்த மாற்றம் தொடர்ச்சியாக இங்கே நடந்துகொண்டே இருந்தது. அதுதான் இந்தியாவின் வரலாறு. அதை முதற்கனல் முதல் மீண்டும் மீண்டும் வெண்முரசிலே காணமுடிகிறது

ராஜ்  

அசங்கனும் சௌம்யையும்



அன்புள்ள ஜெ

அசங்கனுக்கும் சௌம்யைக்குமான உறவு பற்றி பேசிக்கொண்டிருந்தேன். அப்போது மூத்த நண்பர் ஒருவர் ஒரு விஷயம் சொன்னார். அசங்கன் என்றால் சஞ்சலம் இல்லாதவன்  அல்லது தாழாதவன் என்று பொருள். சங்கா என்றால் சஞ்சலம் அல்லது தாழ்வு. முன்பெல்லாம் நீதிபதிகளை சங்கைக்குரிய என்று சொல்வது வழக்கம். சௌம்யை என்றால் பணிவான, மென்மையான என்று பொருள். சௌம்யை உங்கள் கற்பனைக் காதாபாத்திரம். அந்தப்பெயரை இப்படி யோசித்துத்தான் போட்டிருப்பீர்களா? இல்லை தற்செயலா? தெரியவில்லை. ஆனால் அழகான இணைப்பாக இருந்தது

அரவிந்த்

துயர்



ஜெ

இன்று வந்த அத்தியாயத்தில் இந்த வரிகள் மனதைப் பிசைந்தன


மானுடருடன் கலந்து அரைமானுடராகவே ஆகிவிட்டிருந்தாலும்கூட புரவிகளின் விழிகளில் தனிமையும் துயரும் நிறைந்திருக்கும். யானைவிழிகளுக்குள் அத்துயர் மிகமிக ஆழத்திலென மின்னிக்கொண்டிருக்கும்.

விலங்குகளின் கண்களை அண்மையில் பார்ப்பதைப்பற்றி நீங்கள் முன்னரும் எழுதியிருக்கிறீர்கள். அது ஒரு அகவயமான உணர்வுதான். ஆனாலும் மனம் அதில் ஈடுபட முடிந்தது

ராஜ்

Thursday, September 27, 2018

செவியறியும்போர்



அன்புள்ள ஜெ

அசங்கனின் கதை நடுவே ஏன் வருகிறது என்று யோசித்துக்கொண்டிருந்தேன். அப்போது தோன்றியது, இந்தப்போர் என்பது பெரியதலைகளின் மோதல். இதிலே சின்னமனிதர்கள் ஒரு பொருட்டே கிடையாது. அவர்களைக் கொன்றுகுவிப்பார்கள். அள்ளிப்புதைப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு சாமானியன், மகாபாரதத்தில் பெயர் மட்டுமே உள்ள ஒருவனின், பார்வையில் போர் நிகழ்கிறது. அதுவும் போரை அவன் வெறும் ஓசையாகவே கேட்கிறான். நான் இந்த நுட்பத்தைக் கவனிக்கவில்லை. ஆனால் ஒரு நண்பர் போனில் சொன்னபோதுதான் தெரிந்தது, ஓசையாகவே ஒரு போரை கவனிப்பது எப்படிப்பட்ட அனுபவம் என்று. என் அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தபோது மதுரை மாசித்திருவிழாவை வீட்டுக்குள் ஒரு பெரிய முழக்கமாக கேட்டதைப்பற்றிச் சொன்னார். போர் வெவ்வேறு கோணங்களில் இந்நாவலில் சொல்லப்படுகிறது. ஆனால் வெறும் சத்தமாகவே கேட்பது மிகப்புதியது

சரவணன்

கடோத்கஜன்



ஜெ

கடோத்கஜனின் அறிமுகம் அருமையாக உள்ளது. கடோத்கஜன் பிரயாகை நாவலில் அறிமுகமானவன். அதன்பின் இப்போதுதான் வருகிறான். அவனுடைய கதாபாத்திரம் அந்த அடிப்படை இயல்பு கொஞ்சம்கூட மாறாமல் ஆனால் விரிவடைந்துள்ளது. இன்று அவன் இடும்பவனத்தின் அரசன். அந்த உற்சாகமான பேச்சும் தாவிச்செல்லும் நடையும் அற்புதமானவை. அவன் அனுமனின் கதையைக்கேட்டு பீமனிடம் அவனும் சூரியனை நோக்கி செல்ல விரும்பியதை வாசித்த நினைவு வந்தபோது புன்னகைதான் வந்தது. அற்புதமான கதாபாத்திரம். போர்க்களத்தில் கூட்டத்தோடு கூட்டமாக அவன் அறிமுகமாகாமல் இப்படி ஒரு  ஹிரோ எண்ட்ரி அமைந்ததில் மகிழ்ச்சி

சந்திரகுமார்  

படிநிலைகள்



அன்புள்ள ஜெ

அசங்கன் போரை எதிர்கொள்வதில் உள்ள நுட்பமான படிநிலைகள் ஆச்சரியமானவை. அவன் முதலில் போரை கற்பனையாகவே அடைகிறான். அதன்பின்னர் அது செவிக்கு மட்டும் தெரிவதாக நிகழ்கிறது. அவனுடைய கனவில் அது நிகழ்கிறது. அதன்பிறகுதான் அது யதார்த்தமாக ஆகிறது. ஒவ்வொரு போரும் ஒவ்வொரு வகையாக உள்ளது. கற்பனைப்போர் ஒரு பெரிய கிளர்ச்சியை அளிக்கும் எதிர்பார்ப்பு, கனவில் கண்டபோர் பெரிய ஒரு வதை. நிஜப்போர் ஓர் யதார்த்தம். கிளர்ச்சியும் இல்லை பெரிய பயங்கரமும் இல்லை. அவன் அதை சாதாரணமாகவே எதிர்கொள்ளமுடிகிறது

ஆர்.கிருஷ்ணா

முதல் தாழ்ச்சி



இனிய ஜெயம் 

நண்பன் ஒருவனின் மரணம் . இரு தினங்களின் இரவுகளும் கடும் மனச்சோர்வு . நட்பில்  நினைவுகள் போல சுவர்க்கம் வேறில்லை .நட்பின் பிரிவில் நினைவுகள் போல நரகமும் பிறிதில்லை .  வெண்முரசின் குருஷேத்திர முதல் நாள் இரவில் எஞ்சியவர்களின் வலியின் சாயலில் கொஞ்சத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் . பெரும்பாலான மரணங்கள் போல இதற்கும் நான் செல்லவில்லை . இறுதியாக அவனை கண்ட உயிர்ப்பு அது மட்டுமே உள்ளே இருக்கட்டும்  என்றொரு பேராசை .   இரவுகளில் நட்பின் நினைவை தவிர்க்க மீண்டும் மீண்டும் , குருஷேத்ர இரண்டாம் நாள் போரை மீள மீள வாசித்துக்கொண்டு இருக்கிறேன் . 

அனைத்து அறங்களையும் கைவிடுக  என்னையே சரணடைக என்று சொன்ன நீலனின் சொல் இன்னமும் பார்தனின் அகத்தில் சென்று தைக்கவில்லை .  ஆகவே பீஷ்மரின் அம்பு பார்த்தனை வந்து தைக்கிறது .  அர்ஜுனன் போன்றவன் அல்ல அபிமன்யு . அவன் அறங்களை கைவிட்டு அசுரர் முறையில் போர் செய்கிறான் . ஒரு வேளை அபிமன்யு சாரதியாக நீலன் அமர்ந்திருந்தால் அன்றே பீஷ்மர் சரிந்திருப்பாரோ என எண்ணிய மறு கணம் , அபிமன்யுவின் அசுர நெறி சார்ந்த எந்த அம்புகளும் பீஷ்மரை தொடாத சித்திரம் வருகிறது .  பீஷ்மரை புறமுதுகு காட்ட வைத்ததாக அபிமன்யு சங்கு கொண்டு முழங்குகிறான் . பாவம் அர்ஜுனன் வசம் பீஷ்மர் சொன்ன சொல்லை அவன் கேட்டிருக்க வில்லை 

''சிம்மம் உண்ண விரும்பாத இரைகள் சில உண்டு ''  ஆம்   அபிமன்யுவின்  குருதி குடிக்க பீஷ்மருக்கு எந்த தடையும்  இல்லை  அவன் சத்ரிய போர் நெறி பேணும் வரை .  இன்று பிழைத்தான் அபிமன்யு . பீமன்தான் கொலைவெறித் தாண்டவம் ஆடுகிறான் .  சிறு வயதில் பீமனுக்கு நஞ்சூட்டி அவனை கங்கையில் தள்ள முன் நிற்ப்பவர்களில் முதல்வன் சுஜாதன் . அன்று பீமன் நினைவு தப்பும் முன் சொல்லும் இறுதிச்சொல் ''சுஜாதன் நல்ல குழந்தை '' . இன்று அந்த நல்ல குழந்தையின் மார்பைப் பிளந்து எறிகிறான் பீமன் .

பீஷ்மரின் வில் தாழும் கணம் மிக மிக அந்தரங்கமான சித்திரம் கொண்டது .ஆம் அப்போது அவரது சாரதியாக விச்வசேனர் இல்லை . பீஷ்மர் வேறு ஏதோ ரதத்தின் விளிம்பில் தோற்றி நிற்கிறார் . விஸ்வசேணன் ஓட்டும் தேரே அவரது நிலைபெயராமைக்கு அஸ்திவாரம் .சற்றே நிலை மாறினார் .நிலை பெயர்ந்தார் . பீமனின் பின்னால் அம்பை அன்னையின் வஞ்சம் நின்றிருக்கலாம் .அனைத்துக்கும் மேலாக பீமனின் முன்னாள் நின்றது தந்தையின் கருணை கணம் . முதன் முதலாக பீஷ்மர் பீமனை காணும் சித்திரம் இப்போது உள்ளே வலிமையாக எழுகிறது . கௌரவ ,பாண்டவ மைந்தர் நிறையில் பீமன்தான், நிலைத்த சிலை போல இருக்கும் பீஷ்மரை அசைய வைக்கிறான் .  அன்று அனைவரது பிடிக்கும் சிக்காமல் தப்பி ஓடி ஒளிந்தது பீமன் கொண்டு வந்து விட்ட பாம்பு . இன்றும் அதேதான்  . அன்றுபோலவே கௌரவ சகோதரர்கள் அனைவரையும் சிதறடித்து விட்டான் பீமன் . அன்று போலவே பீஷ்மர் அதை பார்த்து சற்று நிலை பெயர்ந்து விட்டார் .  அன்று தப்பிய அரவம் இன்றும் தப்பி விட்டது

கடலூர் சீனு

அசங்கன் கண்ட போர்



அன்புள்ள ஜெ

அசங்கன் முதலில் என் ஞாபகத்துக்கே வரவில்லை. வந்ததும் ஒரு பெரிய திகைப்பு ஏற்பட்டது. உலகமே தெரியாத ஓர் இளைஞன் போரை எப்படிப்புரிந்துகொள்வான்? போர் என்பது ஒரு பெரிய வெறியாட்டம். அதை இவன் எப்படி புரிந்துகொள்வான்? அசங்கன் காவலில் இருந்து தொடங்கி மெல்லமெல்ல போரை அதன் உக்கிரத்துடன் எதிர்கொள்வது அபாரமான மனப்பதிவு. போர் முன்புறம் நிகழ்கிறது என நினைக்கிறோம். ஆனால் அதன் அதிர்வு பின்புறத்தில்தான் தெரியவரும். அந்த அதிர்வைத்தான் அசங்கன் வழியாகப் பார்க்கிறோம். அசங்கன் போரின் ஓசைகளை மட்டுமே முதலில் காண்கிறான். அதுவே அவனை கொந்தளிப்படையச்செய்கிறது. போதையில் மறந்துதான் தூங்க முடிகிறது. போர் என்பதை அவன் ஒரு அம்புகூட எய்யாமல் ஒரு முறைகூட மரணத்தைப்பார்க்காமல் பின்னாலிருந்தே அனுபவித்துவிட்டான்

மகேஷ்

Wednesday, September 26, 2018

கர்ணனின் கேள்விகள் - இமைக்கணம்




கர்ணனின் கேள்விகள் மிகுந்த முக்கியத்துவம் உடையவை. வேத முடிபு என்றும் தத்துவ தரிசனங்கள் என்றும் தவ முனிவர்கள் கூறுவது யாருக்காக எதற்காக சாமானியன் இதனால் தன் துயரை களைய முடியுமா? கர்ணன் தன் சொந்த வாழ்விலிருந்தே அதற்கான காரணங்களை கண்டடைகிறான். குலத்தால் இழிந்தவனாக கருதப்படுபவன் அதிலிருந்து வெளியேற முடியுமா சிறுமைகளை ஒழித்து தன் சுய மரியாதையை பெற முடியுமா? நம் காலத்திற்கான கேள்விகள் இவை. ஒரு உளக் குமுறல் போன்றே இதைச் சொல்லிவிட்டு இளைய யாதவரிடம் விடைப் பெற்று கிளம்புகிறான் . உடன்குருதியினரை கொல்வது குறித்தான தயக்கம் இங்கே கர்ணனுக்கே அதிகம் பொருந்துகிறது. இங்கே கர்ணனுக்கு அவனுடைய நிகர் வாழ்க்கை காட்டப்படுகிறது. வண்ணக்கடலில் சதசிருங்கத்திலிருந்து குந்தி வரும் வழியில் அவள் கர்ணனை துறப்பது ஒரு மிக முக்கிய திருப்புமுனை. அவ்வாறில்லாமல் அவர் ஏற்றிருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும் என்பது இங்கே சொல்லப்படுகிறது. இந்த நிகர் வாழ்வில் குறிப்பிடத்தக்கது அவன் மட்டுமே திரௌபதியை மணக்கிறான் அவர்களுக்கு மட்டுமே ஐந்து குழந்தைகள் பிறக்கின்றன. திரௌபதியின் உளம் கவர்ந்தவன் என்ற முறையில் மற்ற ஐவரும் அவளுக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை. மேலும் அவர்களை மணப்பதற்கான அரசியல் காரணங்கள் இந்த நிகர் வாழ்வில் இல்லை. இந்த வாழ்வில் கர்ணன் வலி தவிர எதையும் அறியாதவன் ஆனால் நிகர் வாழ்வில் வலி துயர் போன்ற எதையும் அறியாத ஒரு ஒற்றைப்படையான நேர்வாழ்வை பெறுகிறான். நன்மையை சமன் படுத்தும் தீமை எதுவும் அதில் நிகழவில்லை. ஆனால் அதற்கு மாறாக அவன் விண்புகுந்தபின் அவன் கொடி வழியினர் யாரும் நிலைத்த பூசலற்ற ஆட்சியை வழங்கவில்லை. அவர்கள் கொண்ட வஞ்சத்தின் காரணமாக தொடர்ந்து ஒவ்வொரு தலைமுறையிலும் கொலைபாதகங்களைப் புரிகிறார்கள். வசுஷேணனின் பெயர் அந்த பெரும் குரு வம்ச நிரையில் எந்தவித முக்கியத்துவமும் இன்றி காலப்போக்கில் மறைகிறது. 

எதிர்விசையற்ற வாழ்க்கை மேலோட்டமாக பார்த்தால் வரம் போல தெரியலாம் ஆனால் அடிப்படையில் அது கொடியது. மரணமில்லா வாழ்வு எத்தகைய கொடியது என்பதை இதற்கு முன் தியானிகன் கதையில் பார்த்தோம் அதனுடன் வசுஷேணனின் இந்த வாழ்வை ஒப்பிடலாம். கர்ண வம்சத்தில் கடைசியாக எஞ்சிய க்ஷேமகனின் தாய் செளரவை மணமாவதற்கு முன்பு ஒரு முனிவரிடம் பெற்ற மகன் தான் விஸ்ரவன். அவனைக் காட்டிற்கு எடுத்துச் சென்று கொல்லுமாறு சேடியிடம் கூறுகிறாள். ஆனால் சேடி ஒரு இசைச்சூதரிடம் அவனை விட்டுவிடுகிறாள். வளர்ந்து பெரியவனாகும் விஸ்ரவன் தன் பிறப்பைக் குறித்து சந்தேகத்திற்கு இடமின்றி அறிகிறான். தாயின் அருகில் ஒரு முறையாவது இருந்தால் போதுமென அவளிடம் போகிறான். ஆனால் செளரவை முற்றாக நஞ்சு கொண்டவளாகவே இருப்பதை அறிந்து கொதிக்கும் நெஞ்சத்துடன் அலைந்து திரிந்து மயங்கிய நிலையில் நாகர்களால் மீட்கப்படுகிறான். நாகர்களே வியக்கும் அளவிற்கு தன்னுள் புறக்கணிக்கப்பட்டவன் என்னும் நஞ்சை சுமந்து திரிகிறான். வசுஷேணனின் கடைசி கொடிவழியனான க்ஷேமகனையும் கொன்று ஆட்சியை கைபற்றுகிறான். இந்த அகக்காட்சி கர்ணனை சுக்குநூறாக உடைக்கிறது

அனுபவம் மற்றும் புரிதல் இரண்டையும் அறிதலுக்கான கருவியாக முன் வைக்கிறார் இளைய யாதவர். முதலில் ஒரு நிகர் வாழ்க்கை காட்டப்படுகிறது பின்னர் அதற்கு நேர் எதிரான ஒரு வாழ்க்கை தெரிவை கர்ணனிடமே விட்டு விடுகிறார். கர்ணன் இரண்டாவதை தேர்ந்தெடுக்கிறான். உடன் பிறந்தாரை கொல்லும் நிலை ஏற்படினும் அவனே கூட களம் பட்டு மைந்தர்கள் உட்பட அனைத்தையும் இழக்கும் நிலை ஏற்படினும் அவன் அதையே ஏற்கிறான்.

இறுதியில் அவன் பெரும் அனுபவங்களை ஞானமாக முன்வைக்கிறார் கிருஷ்ணர். அவன் இழிவுகள் அனைத்தும் வாய்ப்பாக பயன் படுத்தி மேன்மை அடையத் தான். சாமானிய தளத்தில் உள்ள உண்மைக்கு விசேஷ தளத்தில் தீர்வு அமையாது. கர்ணன் குழம்பித் தேடுவது அதைத்தான். எல்லைக்குட்பட்டு வகுக்கப்பட்ட களத்தில் அவன் அந்த எல்லைகளை ஏற்று ஆம் முடியும் அதில் வெல்லவும் கூடும் // உங்களுக்கு எதிரான ஒவ்வொரு சொல்லும் உங்கள் பெருமையின் விளைவாக எழுந்தவைதான். உங்களை நோக்கிவரும் அத்தனை அம்புகளும் உங்கள் புகழ்ச்சொற்களாக மறுபிறப்பு கொள்ளவிருக்கின்றன. அளிக்கப்பட்டுள்ளது உங்கள் களம் என்பதன் பொருள் அனைத்தும் அளந்தமைக்கப்பட்டுள்ளன என்பதே.

வெல்க, வெல்லும்பொருட்டு களம்நின்று பொருதுக! இழப்பதனால், வீழ்வதனால் எவரும் தோற்பதில்லை, முற்றாக வெளிப்படாமையால் மட்டுமே தோற்கிறார்கள் என்று உணர்க!//

புறக்கணிக்கப்பட்டவனாக தன்னிரக்கம் கொண்டு பெரும் வலிகளை சுமந்து வாழும் கர்ணன் அதற்கான காரணத்தையும் தீர்வையும் சிறப்பு தளத்தில் தத்துவ தரிசனங்களில் தேடுவதை விடுத்து சாதாரண தளத்திலேயே அவன் செயலூக்கம் கொண்டவனாகும் போது அவன் வாழ்வு முழுமைப் பெறுகிறது.. அனுபவம் வாயிலாகவும் புத்திபூர்வமான புரிதலின் வழியாகவும் இளைய யாதவர் சுட்டியதைப் பெற்று விடை பெறுகிறான் ‌கர்ணன்.

சிவராம் ஹரி

அசங்கனின் காதல்



அன்புள்ள ஜெ

வெண்முரசின் காதல்களில் அசங்கந்சௌம்யை காதல் மிகவும் தனித்தன்மையானது. அவள் அவனை விட மனதால் மூத்தவள். அவன் சின்னப்பையன். அவன் சாவான் என அவர்கள் அனைவருக்கும் தெரியும். குலவாரிசு பிறப்பதற்காகவே அவள் அவனுக்கு மணம் செய்யப்பட்டிருக்கிறாள். அதற்காகவே அவள் அவனுடன் அனுப்பப்பட்டிருக்கிறாள். அந்த உறவு மிகமிகச் சங்கடமானது. கள்ள உறவு போல மிக ரகசியமாகவே அது நடக்கிறது.  ஆனால் அதற்குள் முடிந்தவரை மிக இனிமையான தருணங்களை அவர்கள் உருவாக்கிக்கொள்கிறார்கள். அவள் அவனை தன் கையிலெடுத்துக்கொண்டு அதை நடத்துகிறாள்.

ஆனால் என்னதான் பாவனை செய்தாலும் அவர்களுக்குத் தெரிகிறது, அதற்குள் என்னதான் உள்ளது என்று. அதை அவர்கள் மறைக்கவும் முடியவில்லை. அவ்வப்போது எழுந்து வருகிறது. அந்த தத்தளிப்பும் அதிலுள்ள இனிமையும்தான் அபூர்வமான காதலுறவாக அதை மாற்றிவிடுகிறது

ஜெயராமன்

கிருஷ்ணனின் உக்கிரம்



அன்புள்ள ஜெ

வாசகர் மனோகர் எழுதிய வரி: "ஏனென்றால் சததன்வா செய்தவற்றை எல்லாம் இவர்கள் அனைவருமே செய்யக்கூடியவர்கள்தான்". சமூக உளவியலில் மட்டுமல்ல, வைணவ தத்துவத்திலும் இது மிக உண்மை அல்லவா ? சததன்வாவும் கிருதவர்மனும் தண்டிக்கப்பட்டார்கள், சாத்யகியும் அக்ரூரரும் ஏற்றுக்கொள்ளப்பட்டர்கள்.  வெண்முரசில் போருக்கு முந்தைய இரவில் கிருஷ்ணன் எதிர் முகாமை பார்த்துக்கொண்டிருக்கும் காட்சி ஒரு உன்னத சித்திரம், எதிர்காலத்தில் நல்ல ஓவியர்கள் அதை வரைவார்கள்.

இன்றைக்கு மரபான ஸ்ரீவைணவத்தில் தயவு சற்றும் அற்றவனாக பெருமாள் சொல்லப்படுவதில்லை. 'மது கைடபர் என்ற எதிரிகளுக்கும் அருளும் சமஸ்த ஜகன்மாதாவாக' ஸ்ரீயே முன்னணி கொள்கிறாள். நீங்கள் சொல்வதுபோல ஐயனார்களும் காளிகளும் 'அருள்மிகு'வான கதை போல தோன்றுகிறது.

வைணவக் கோயில்களில் சக்கரத்தாழ்வார் விக்கிரகங்களின் பின்புறத்தில் நரசிம்மர் வடிவமைக்கப்பட்டிருப்பார் என்று அறிய நேர்ந்தது. இதை பெருமாளின் மறைந்திருக்கும் உக்கிரம் என்பதற்கான குறியீடு எனலாமா ?

நன்றி 


மதுசூதனன் சம்பத்

விஸ்வசேனர்



அன்பின் ஜெ,

வணக்கம்!

விஸ்வசேனர் களம்பட்ட கணத்தில் சிறு திடுக்கிடல் அன்றி வேறு தேரில் ஏறி நாண்பூட்டி போர்தொடரும் பீஷ்மரை காலையில் கண்டதுமுதல் அலுவலக பணிகளுக்கிடையே அசைபோட்டுகொண்டிருக்கிறேன்.

அச்சாய் அமைந்து நிழலாய் தொடர்ந்தவர், களம்பட்ட கணத்தில் கூட பீஷ்மரையே எண்ணி பரிதவித்தபடி பிரிந்திருக்கும் அவரின் ஆன்மா.

- யோகேஸ்வரன் ராமநாதன்.

Tuesday, September 25, 2018

எல்லைகள்



அன்புள்ள ஜெமோ ,
   
பீஷ்மருக்கென்ற இருக்கின்ற எல்லைகளில் ஒன்றை தான்ட முடிவெடுத்து ஒரு மூத்தவனை இழந்துள்ளார். கடைசி எல்லை சிகண்டியா ?.... அதனை எண்ணி பரபரக்கிறது மனம். மற்ற எல்லைகளை காண காத்துள்ளேன்.
   

 பீமனின் எல்லை மீறுதல் ஒரு உத்வேகத்தை அளிக்கிறது. போரில் பீமனின் முதன்மையான பணி அதுவே என எண்ணுகிறேன்.அபிமன்யூவின் நிலை கூட்டுப் புழு நிலையிலிருந்து பறந்து எழும் பட்டாம்பூச்சியின் நிலை என உணர்கிறேன். வரையறைகளை மீறும் போக்கினாலேயே புகழ் கொண்டவனாகிறான் அபிமன்யூ.
 

அன்புடன்
தே. குமரன்
தருமபுரி

திசைதேர் வெள்ளம் – சுஜயனின் வீழ்ச்சி



அர்ஜுனனும் பீஷ்மரும் பொருதும் இந்த இரண்டாவது நாள் யுத்தத்தின் ஒத்திசைவும்அது குலையும் தருணத்தையும் குறித்த பகுதி அபாரமான ஒன்று. யார் முதலில் சலிப்புறுவார் என்ற விளையாட்டு இது என எண்ணுகிறான் சுஜயன். இளையோரே சலிப்படையவும் கூடும் எனவும் எண்ணத் தலைப்படுகிறான். அவனும் இளையவன் அல்லவா!!! உண்மையில் அங்கு நிகழ்வது தேர்ந்த இரு மல்லர்கள் நிகழ்த்தும் மல்யுத்தம் போன்ற ஒன்றே. யுக்திஅனுபவம்ஆற்றல் அனைத்திலும் சமமானவர்கள். அத்தகைய மல்யுத்தப் பிடி என்பது நுட்பங்களுக்கான ஒரு தேடல் மட்டுமே. அங்கு வெற்றி தோல்வி போன்ற இருமைகள் பொருளற்றவை ஆகின்றன. அர்ஜுனனும் பீஷ்மரும் அத்தகையதோர் தேடலிலேயே இருக்கின்றனர். போரில் வெளிப்படும் பீஷ்மரின் புலன்கள் ஒரு விரிசலுக்காக கூர்ந்திருக்கஒரு கணத்தில் சுஜயன் மீது செலுத்திய அம்பு விடுபட்ட கணத்தில்அது காறும் தன்னைக் கட்டியிருந்த ஒரு சரடு அவிழ்ந்ததை அர்ஜுனன் ஆழம் அறிந்து துவண்டுமீண்ட அக்கணத்தின் கோடியில் ஒரு காலத்துளி அளித்த இடைவெளியில் அவனது கவசத்தைப் பிளக்கிறார் பிதாமகர். இதையே

 “ஒரு துளிதுளியின் துளிகணப்பிசிறுஅணுக்காலம். அவர்கள் அதை உணரும் வரை அதுவே நிகழும். அக்கணம் நிகழ்ந்தால் ஒருவரில் மற்றவர் மட்டுமே அறியும் விரிசல் ஒன்று திறக்க அம்பு அங்கே தைக்கும். ஓர் அம்பு அதன் வால் சூடிய சிறகொன்றின் திரும்பலால் அணுவிடை திசை பெயரக்கூடும். அணுவில் ஆயிரத்திலொன்றுகணத்துளியில் கோடியிலொன்று எக்கணமும் நிகழக்கூடும்.” 

என்கிறது திசை தேர் வெள்ளம். ஆம்சுஜயன் வீழ்ந்த கணமே அர்ஜுனன் மீது அம்பு பாய்ந்த கணமும். உண்மையில் அன்றைய போரில் அர்ஜுனன் தன்னைத் தான் கடக்கத் தேர்ந்தெடுத்த இரையே சுஜயன் தான். எனவே தான் அவனை போர் துவங்கும் முன்பே கண்டு விடுகிறான். போர் முழுமையும் அவன் தன் முழுத் திறனால் சென்று கொண்டிருந்த தருணம் என்பதேதான் மடியிலேற்றிக் கொஞ்சிய ஒரே கௌரவ குமாரனை, தன் காண்டீபம் கண்டு தன்னகங்காரம் உணர்ந்ததன் கதைகள் கேட்டு அச்சம் விட வந்து, தான் கண்டுணர்ந்த அருக நெறியான வீரத்தின் உச்சமெனத் தான் கண்டுகொண்ட கொல்லாமையின் திறமுணர்ந்து வில்லெடுத்த அப்பாலகனை வீழ்த்துவது தான். அதுவே அவன் முந்தைய இரவு அம்பைக்கும்பிற அன்னையருக்கும் அவன் தன் முழுத் திறனோடும் போரிடுவேன் எனக் கூறிய வார்த்தைகளுக்குப் பொருளாகும். இப்போது பாசறை மீளும் பார்த்தன் உற்றோர் என்னும் இறுதித்தளையையும் கடந்தவன். பீஷ்மரிலிருந்து எழுந்து வந்து போரிடும்,போர் மட்டுமே திறன் என்று கொண்ட ஒரு பற்றற்றவனை நோக்கிய உருமாற்றத்தில் அவன் நகர்ந்து சென்ற பேரதிகத் தூரம் சுஜயனின் வீழ்ச்சி.

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்

புதுவை வெண்முரசுக்கூடுகை – 19 (நாள்: 20.09.2018 / வியாழக்கிழமை)


 
அனைவருக்குமென் வணக்கம்

இந்த கூடுகைக்கு சிறப்பு விருந்தினராக நமது குழுமத்தின் தேசிய அடையாளம், முதன்மை வாசகர், சிறுகதை எழுத்தாளர், இலக்கிய விமர்சகர், கட்டுரையாளர், ஊடக பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், காந்தியத்தின் மீது பற்று கொண்டவர், இரு இணைய இதழ்களின் ஆசிரியர் இவற்றுக்கிடையே ஓர் ஆயுர்வேத மருத்துவருமாக பணிபுரிந்து கொண்டிருக்கும் யாவர்க்குமினிய நமதருமை நண்பர் திரு சுநீல் கிருஷ்ணன் அவர்கள் கலந்துகொண்டது எங்களது வெண்முரசுக் கூடுகையின் மீதான ஆர்வத்தையும் உற்சாகத்தையும்  மேலும் மெருகேற்றி அதிகப்படுத்தித் தூண்டும் செயலாக அமைந்ததென்பது மிகையல்ல. 

மேலும் துபாயிலிருந்து விடுமுறைக்கு வந்திருக்கும் ஓவியர் ரமேஷ் சுப்பிரமணியம் நிகழ்வில் பங்கேற்றது எதிர்பாரா ஆனந்தம்.

இம்மாதக் கூடுகையின் பேசுப்பகுதியான இருள்வேழம் பற்றி நானே தொடங்கிப்பேசும்படியாக அமைந்துவிட்டதில் எக்கச்சக்கமான நடுக்கம் கொண்டிருந்தேன்.  பழகியவர்கள் மத்தியில்தானே என மனம் சமாதானம் சொன்னபோது முன்னமிருந்ததைவிட நடுக்கம் ஏனோ இருமடங்காகியது.  நல்லவேளை காலத்தின் பெருங்கருணையாக ஒரு சிறிய சிலபஸ் தான் அளிக்கப்பட்டிருந்தது.  இருந்தாலும் இந்தக் குருவித்தலைக்கு அதுவே பனங்காய்தான்.


இருள்வேழம் எனும் இந்தப் பகுதியை கூடுகையின் பொருட்டு மீண்டும் வாசித்து முடித்தபோது சட்டென்று என் நினைவுக்கு வந்தது TRUTH HAS MANY FACES என்ற புகழ்மிக்க வரியை சாராம்சமாக கொண்ட அனைவருக்கும் பரிச்சயமான பள்ளிநாட்களில் கேட்டறிந்த ஒரு நீதிபோதனைக் கதைதான். 

முன்னொரு காலத்தில் ஒரு வணிகன் வெளியூரில் இருந்து ஒரு யானையை வாங்கிக்கொண்டு அந்தியில் வீடு வந்து சேர்கிறான்.  அது வரையில் அந்த ஊரில் உள்ள ஒருவர் கூட யானை என்ற ஒரு விலங்கைப் பற்றி அறிந்திருக்கவில்லை.  எனவே மிகுந்த ஆர்வத்தோடு அந்த விலங்கு எப்படி இருக்கும் என்பதை உடனே கண்டுவிட வேண்டும் என்பதற்காக அந்த ஊரில் இருக்கக்கூடிய மற்ற வணிகர்கள் ஒரு நாலைந்து பேர்கள் ஒன்று சேர்ந்து அவன் வீட்டுக் கொட்டிலில் இருட்டில் நின்றிருக்கும் அந்த யானையைத் தொட்டுப் பார்த்து தங்கள் கைகளின் மூலம் யானை எப்படிப்பட்டது என்பதை உணர முயல்கிறார்கள். 

ஒவ்வொருவரும் அதன் வெவ்வேறு பாகங்களைத் தொட்டுத் தடவிப் பார்த்து தங்கள் அனுபவத்தின் மூலமாக யானை இப்படித்தான் இருக்க வேண்டுமென்று சிலர் தத்தமது அறிவைக்கொண்டும் கற்பனையைக் கொண்டும் விருப்பத்தைக் கொண்டும் முடிவு செய்து வர்ணிக்கிறார்கள். 

இதில் ஒருவரது தனிப்பட்ட அனுபவம் அவரளவில் உண்மையாக இருந்தாலும்.. முழுமையான உண்மையை உணர்த்த இயலாது என்பதையே இக்கதை சுட்டுகிறது.  ஏனெனில் தனிப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் ஒருவர் எடுக்கும் நிலைப்பாடு பிறர் தரப்பு பார்வைகளையும் உண்மையின் பன்முகத்தன்மையினையும் கணக்கிலெடுக்கத் தவறிவிடுகிறது.


இந்த இருட்டில் நின்ற யானை போலத்தான் காந்தாரி பெற்றெடுத்த வேழக்கருவான துரியோதனனை நான் பார்க்கிறேன் எனத் தொடங்கினேன்.

அச்சம் பேரழிவு வஞ்சம் பொறாமை அரண் பாசம் பெருமிதம் என்று அஸ்தினபுரியின் வெகுமக்கள், அரசியர்கள், சகுனி, திருதராஷ்டிரன், காந்தாரி தீர்க்கசியாமர் ஆகிய அனைவரின் மத்தியில் நிலவும்  துரியனின் பிறப்புப்பற்றிய அனுமானங்களையும் அபிப்ராயங்களையும் மீறி அவனது முழுமுதலாளுமை எவராலும் உணர்ந்து கொள்ளப்படாது எஞ்சி நிற்பதாகவே கருதுகிறேன் என்றேன்.  வேண்டுமானால் காந்தாரியின் எண்ணமான இந்த வரியையே நானும் உடன் மொழிகிறேன்.. துரியன் ஒட்டுமொத்த மானுடதுக்காகவும் பிரம்மம் ஆணையிட்ட மீறலை தான் ஏற்று நடத்துபவன்.. என்று வாதத்தை முன்வைத்தபோதே இதுவொரு தீவிர துரியோதனாதிப் பார்வை என்ற முத்திரை அனைவராலும் என் மீது குத்தப்பட்டது.  அதை மறுப்பதற்கு மனமின்றி மனமுவந்து ஏற்றுக்கொண்டேன்.      

மயிலாடுதுறை பிரபுவின் வரிகளில்..

கம்பராமாயணத்தில் கம்பன் யானையைக் குறிப்பிடும் போது ‘’மத மா கரி’’ என்கிறான். ஜெயமோகன் வெண்முரசில் ’’இருள்வேழம்’’என்கிறார். கருமையான இருளில் நின்றிருக்கும் யானை. கருமையான இருளிலிருந்து நகர்ந்து கொண்டிருக்கும் யானை. கருமையான இருளாய் விரைந்து வரும் யானை. காந்தாரி தன் கருவை வயிற்றில் சுமக்கும் காலம் நீண்டு கொண்டே போகிறது. காந்தார இளவரசிகளாலும் அம்பிகையாலும் நிகழ்வது என்ன என்பதை விளங்கிக் கொள்ள இயலவில்லை. அரச கொட்டிலிலிருந்து சில பிடிகள் காந்தாரி அரண்மனைக்கு வெளியே நின்று அவ்வப்போது பிளிறிக் கொண்டிருக்கின்றன. கர்ப்ப காலம் இருபத்து இரண்டு மாதங்களாகிறது. அவளது ஈற்றரையின் சாளரங்களுக்கு வெளியே காகங்கள் முட்டி மோதுகின்றன. அஸ்தினபுரியிலிருக்கும் ஏரிக்கு மடைவாயிலின் வழியே நரிகள் நுழைந்து பெரும் ஊளையிடுகின்றன. இளவரசன் பிறக்கப் போவது நகர மக்களிடம் பேரச்சத்தை ஏற்படுத்துகிறது. சகுனி பாலைவனத்தின் இளவரசன் இவ்வாறுதான் பிறக்க இயலும் என எண்ணுகிறான். அகாபில நரி கலியால் நோக்கப்பட்டு தன் கூட்டத்துடன் நகருள் நுழைந்த தருணத்தையும்  சத்யவதியை சுயோதனன் காண்பதிலும் தீர்க்க சியாமர் சுயோதனன் தன்னைக் காண்பதை உணரும் அச்சத்திலும் இருக்கும் ஒற்றுமை வாசகனுக்குத் திகைப்பூட்டுகிறது. முதுநாகினி சுயோதனனை நாகங்களின் தலைவன் என உரைத்து விட்டு செல்கிறாள். நாகினி சொற்களால் உந்தப்பட்ட காந்தாரி தன் மகவை தன் விழிக்கட்டை நீக்கிக் காண்கிறாள். திருதராஷ்டிரன் மகன் மீதான பாசத்தை உணரும் இடம் புனைவுரீதியில் உச்சமானது. எப்படி ஒரு குழந்தை தீமையின் வடிவாக முடியும்அது செய்த பாவம் என்னஎன்று அவன் எண்ணும் போது தன் முழு ஆற்றலாலும் அதனைக் காக்க உறுதி கொள்கிறான். சார்வாக முனிவர் துரியனின் பிறப்பு நிகழ்த்தப்போகும் அழிவு குறித்து விதுரனை எச்சரிக்கிறார். கலி கண் திறக்கும் கணத்தில் நிகழும் துரியோதனனின் பிறப்பை திகைப்பூட்டும் விதத்தில் முன்வைக்கிறது ‘’இருள்வேழம்’’.

இருளில் வேழம் என்றே பேசி வருகிறோம் அந்த இருளே வேழம் என்று யோசித்துப் பார்த்தால் அதன் பிரம்மாண்டம் திகைக்கச் செய்யும் என்ற சுநீலின் கோணம் அனைவரையும் விழி மலைக்கச் செய்தது.

கலியின் பிறப்பு நிகழ்ந்தவுடன் ஏற்பட்ட முதல் பலியான தீர்க்கசியாமரின் இறப்பு குறித்தும், சார்வாக ஞானத்தை நிலை நிறுத்தும் பொருட்டு நிகழும் சார்வாகரின் பிரவேசம் பற்றியும் முதுநாகினி வந்து காந்தாரியிடம் மைந்தனுக்கு வழங்கிச் செல்லும் ஆசியுடன் கூடிய செய்தி பற்றியும் கடலூர் சீனு பேசியது ஒரு பெரிய திறப்பாக அமைந்தது.    

கூடுகையின் முடிவில் நமது சுநீல் கிருஷ்ணன் தனது அம்புப்படுக்கை நூலுக்காக யுவபுரஸ்கார் விருது வென்றதையொட்டி எங்களது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டு எங்களது அன்பின் வெளிப்பாடாக ஒரு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.  அவர் அந்த தொகுப்பிலுள்ள சிறுகதைகள் பற்றிய ஒரு சுருக்கமான தனது எழுத்தானுபவத்தை பகிர்ந்து கொண்டார்.  மனநிறைவான கூடுகையாக அமைந்திருந்தது.

மிக்க அன்புடன்
மணிமாறன்.