Monday, July 31, 2017

இளம்வாசகர்கள்





அன்புள்ள ஜெ

கோவைப் புத்தகக் கண்காட்சியில் நான் பார்த்த ஆச்சரியங்களில் ஒன்று மிக இளம் வயதுள்ள வாசகர்கள் பலர் வெண்முரசு வாசிக்கிறார்கள் என்பது. நாலைந்த்பேர் நீர்க்கோலம் வரை தொடர்ந்து வாசித்துக்கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். எனக்கு மிக வெட்கமாக ஆகிவிட்டது. நானெல்லாம் ாண்டீபத்தை இன்னும் தாண்டவில்லை. ஒருவேளை நான் அச்சில் வாசிப்பதனால்தான் இப்படியா என்று தெரியவில்லை. இணையத்தில் அடுத்த தலைமுறையினர் வேகமாக வாசிக்கிறார்களா?

சத்யமூர்த்தி

அன்புள்ள சத்யமூர்த்தி

அப்படி பொதுமைப்படுத்திக் குறைத்துக்கொள்ளவே முடியாது. என் மகள் சைதன்யா, வெண்பா கீதாயன் இருவருக்கும் ஒரே வயது. இருவருமே அச்சில்தான் நாவலை வாசிக்கிறார்கள். தொடர்ந்து… சைதன்யா ஆங்கில இலக்கியம் வெண்பா தமிழிலக்கியம் படிக்கிறார்கள். சைதன்யாவின் நான்கு வகுப்புத் தோழிகள் வெண்முரசை நூலாகவே வாசித்துக்கொண்டிருக்கிறார்கள்

ஜெ

அஜிதன்

 
ஜெமோ,
 
       இன்று நடந்த சென்னை வெண்முரசு விவாதக் கூட்டத்தில் ஒரு இனிய அதிர்ச்சி. முதல் முறையாக அஜிதனை நேரில் சந்தித்தேன்.

எனக்கு அருகாமையில்தான் அமர்ந்திருந்தார். கையில் உடலின் இயங்கியல் கூறுகள் பத்தின ஒரு புத்தகத்தினுடமும், எக்ஸிஸ்டென்சியலிசம் பற்றியும் ஒரு இளமை வெட்கத்துடனும் பேசும்போதே தெரிந்திருக்கனும் எனக்கு. ஆனாலும்  சீனிவாசன் வந்து சொல்லும்வரை எனக்குப் புலப்படவில்லை. அந்த மூக்க பார்த்தாவது கண்டுபிடித்திருக்கணும்.

தன் தந்தையின் படைப்புகளை இவ்வளவு ஆழமாக விவாதிப்பதை நேரில் இருந்து பார்க்கும் பாக்கியம் Celebrityன் வாரிசுகளுக்கு மட்டுமே உண்டு.

சிறிலும், ராஜகோபாலும், காளிராஜும், சௌந்தரும் வெண்முரசின் நுட்பங்களை விவரித்ததை எங்களை போல் உங்களின் ஒரு வாசகராகவே உண்ணிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார்.

அன்புடன்
முத்து

தரிசனம்





ஜெ

என் அடுத்த கேள்விக்கும் ஒருவிதமாக பதில் சொல்லிவிட்டிர்கள் ஜெ !! [அரவுக்காடு]



அதாவது இந்த ஒருமை என்பது இயல்பாக உள்ளதை நீங்கள் கண்டுபிடித்து வெளிக்கொணர்கிறீர்களா அல்லது  நீங்கள் முற்றிலும் புதிதாக உருவாக்குவதா என்று நினைத்துக்கொண்டிருந்தேன். நாகம் என்று மட்டுமல்ல, பல பாத்திரங்களுக்கும் கதைகளுக்கும் உள்ள தொடர்புகள்...வேறு எப்படித்தான் இருக்கமுடியும் என்று யோசிக்கவைக்கின்றன...

ஆனால் அப்படி நினைத்தால் உங்கள் பங்கு என்ன என்று அடுத்து கேட்க தோன்றுகிறது !!
மதுசூதன் சம்பந்த்

அன்புள்ள மது

இந்த ஒருமை வியாசரால் உருவாக்கப்பட்டது அல்ல. அதாவது textuality அல்ல. அப்படி இருந்தால் அதில் எனக்குப் பங்கில்லை. கண்டடைதலின் பங்கே உள்ளது. இது வரலாற்றில் உள்ளியக்கம்.அதாவது historicity . வியாசன் அதை அறிந்ததில்லை. ஏனென்றால் பலகாலமாக பின்னர் சேர்க்கப்பட்ட கதைகளின் தொகுதி இன்றைய மகாபாரதம். இந்த வரலாற்றோட்டத்தை நான் கண்டடைவது என் சொந்த தரிசனம்

ஜெ

Sunday, July 30, 2017

அரவுக்காடும் கரவுக்காடும்






ஜெ
அரவுக்காடும் கரவுக்காடும் ஒன்றுதான் என்று இன்று தோன்றியது. இரண்டுமே மறைந்திருப்பவை. மனித அன்கான்ஷியசில் இருப்பவை. அங்கே இருக்கும் காமமும் ஆசையும் முற்றிலும் வேறு., அங்கேதான் கடல். இங்கே துளிதான் தெறிக்கிறது

சுவாமி

கார்க்கோடகன்






ஜெ

நளதமயந்திக்கிடையே திடீரென்று கார்க்கோடகன் வந்துவிட்டதுபோலத் தோன்றியது. அப்படி இருக்காதே, முன்னாடியே க்ளூ இருக்குமே என்று தேடிப்போனேன். இருக்கிறது. நளன் சாளரம் வழியாக தமயந்தி கார்க்கோடகனுடன் இருக்கும் காட்சியைப் பார்க்கிறான். அதன்பின்னர்தான் அவன் அவளிடமிருந்து விலகி அலைய ஆரம்பிக்கிறான். இந்த காட்சி கரவுக்காட்டில் வருகிறது. சரியாக எத்தனை வாசகர்கள் வாசித்தார்கள் என்று தெரியவில்லை. பலர் வாசிக்கவில்லை என்பதை என் நண்பர்களிடம் பேசியபோது அறிந்தேன்

காளீஸ்

நித்ராதேவி






ஜெ,
மிகப்பெரிய மனநெருக்கடியை மனிதர்கள் எப்படியெல்லாம் சந்திக்கிறார்கள் என்பதற்கு இன்றைய அத்தியாயம் ஒரு அற்புதமான விளக்கம். ஒரு கதைச்சந்தர்ப்பத்தை இந்த அளவுக்கு டீடெயிலாகக் கொண்டுசெல்லமுடியுமா என்பதே ஆச்சரியமாக உள்ளது. என் அப்பா மரணப்படுக்கையில் கிடந்தபோது இதையெல்லாம் அனுபவித்தோம். ஒருபக்கம் அவருக்கு கான்ஸர். மறுபக்கம் அவருடைய பிஸினஸ் வீழ்ச்சியடைந்தது. கையில் ஒரு பைசா இல்லை. அதோடு வேறு பல பிரச்சினைகள். நான்கே வாரத்தில் நடுத்தெருவுக்கு வந்துவிட்டோம். ஆனால் ஓர் எல்லையில் அப்படியே ரிலீவ் ஆகிவிட்டோம். எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. ஆஸ்பத்திரியின் வெளியே பெஞ்சில் நானும் அம்மாவும் தனித்தனியாகத் தூங்கினோம். விழித்ததும் அம்மா எல்லாம் பெருமாள் விட்டவழி என்று சொன்னார். அதோடு மனம் அமைதி அடைந்தது. நாங்கள் சென்று ஒரு காபி சாப்பிட்டோம். திரும்பும் வழியில் சுப்ரமணியபுரம் சினிமாவைப்பற்றி ஜாலியாகப் பேசிக்கொண்டே வந்தோம். அந்த தெளிவு கடவுள் அளித்தது என்று அம்மா இப்போதும் சொல்வாள். இந்தக்கதையை அம்மாவிடம் சொன்னேன். அதையே சொன்னாள். ஆனால் பெருமாள் நித்ராதேவியாக வந்திருக்கிறார் எனறு இப்போது புரிந்துகொண்டேன்
ரங்கா