திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,
’இமைக்கண’த்தின் ‘காலம்’ என்ற முதல் மூன்று அத்தியாயங்களும் மிக நன்றாக வந்திருக்கின்றன. ‘இமைக்கணம்’ என்ற பெயரே அருமை. ஒரு கண்ணிமைக்கும் கணம் அப்படியே காலமின்றி உறைந்து விடுகின்றது.பெரிய கரிய கடல் போல இருக்கும் முடிவிலியில் ஒரு சிறிய குமிழி, நிகர் செய்யப்படாமல் அப்படியே உறைந்துநின்று விடுகிறது. அந்தக் குமிழியில் நடக்கும் கதையாக இந்த ‘காலம்’ என்ற பகுதியைக் கொள்ளலாம்.
‘தியானிகன்’ என்னும் புழுவுக்கும், ‘பிரபாவன்’ என்னும் பறவைக்கும் நடக்கும் சம்வாதமாக கதைத்தொடங்குகிறது. புழுவை அந்தணன் என்றும், பிரபாவனை க்ஷத்திரியன் என்றும் கொள்ளலாம். நுண்ணுணர்வுகொண்ட தியானிகன் உலகில் இறப்பு நின்று விட்டதை முதலில் உய்த்துணர்கிறது. இறப்பு இல்லாததால் survival instinct என்ற அனல் இல்லை, அனல் இல்லாததால் பசியில்லை, விழைவில்லை, காமமில்லை, நஞ்சில்லை என்றுஎதுவுமே இல்லாமல் –’இருப்பு’ (existence) மட்டுமே இருந்தது. ‘இருத்தல்’ (living) இல்லை என்று சொல்லிமுடிக்கிறீர்கள். கிட்டத்தட்ட தவத்தில் இருக்கும் ஒரு முனிவரின் நிலை இது. தன்னுணர்வு அற்று இருப்பதால்காலமற்று அகாலத்தில் இருப்பது. இந்த இடத்தில் எனக்கு புதுமைப்பித்தனின் ‘சாபவிமோசனம்’ கதை நினைவுக்குவந்தது. ஒரு உணர்வுமின்றி வாளாவிருப்பது. சிவமாக இருப்பது. என்னைக் கேட்டால் இப்படியே சும்மா இருந்துவிடுவதே சரியென்பேன். எதற்கு இந்த நிலையில் இருந்து மீள வேண்டும்? சும்மா இருப்பதே சுகமல்லவா?
அறத்தோனாகிய அந்த புழுவுக்கு மிகுந்த அக்கறை- பிரம்மன் புடவி சமைத்ததன் நோக்கம் தப்பிப்போகிறதென்று. அதனால் இந்த blissful state-ல் இருந்து normal ஆக வேண்டும் என்று நினைக்கிறது. உண்மையில்எனக்கு ‘தியானிகனின்’ மீது கோபமாக வந்தது. அந்த சிறு time freeze அப்படியே நீடித்தால், பூமியைத் தவிர மற்றகோளங்களில் இருப்பது போல உயிர்களிருந்தும்(நாம் நினைப்பது போல் இருந்தால் தான் உயிர் இருக்கிறது என்று அர்த்தமா என்ன?) இல்லாதது போன்ற ஒரு நிலை இங்கும் ஏற்பட்டு விடும் அல்லவா? அதனால் என்ன குறைந்துவிடப் போகிறது? பிரம்மனின் நோக்கமோ, வேறு எவரின் நோக்கமோ இங்கனம் பிழைத்தால் தான் என்ன?
’ஹவனை’ என்ற சொல் மிக அருமை. ‘ஹு-to offer’ என்று வேர்ச்சொல்லில் இருந்து எழுந்த பெயர்.மானுடரின் விழைவை தேவர்களுக்கு கொண்டு செல்லும் தழல் வடிவானவள் ஹவனை என்று தானேஅழைக்கப்பட வேண்டும்.
அவளின் மோதிரமாகி தரையிறங்கும் நாரதர் புவி இசையின்றி இருப்பதையே முதலில் கவனிக்கிறார். நாரதரை இசையைத் தவிர வேறு எது உண்மையில் கவர முடியும்? Roller Coaster ride-ல் மேலே போகும்பொழுதைக்காட்டிலும், sudden-ஆக கீழிறங்குவதே thrilling-ஆக இருக்கும். வயிறு வாய்க்கு வந்து விடும்.. அதேபோன்றதொரு உணர்வு, நாரதர் ஹவனையிலேறி யமனுலகுக்கு இறங்கும் போதும் ஏற்பட்டது. பக்கத்திலிருப்பவரைகெட்டியாக பிடித்துக் கொள்ளவேண்டும் போலிருந்தது- குறிப்பாக கடைசியில் இருளாக நிற்கும் அகாலனை ஒரேபாய்ச்சலாக நாரதர் தாண்டும் moment-ல் மிகவும் பதற்றமாக இருந்தது. நாரதரை மோதிரமாக அணிந்திருந்தஹவனை, இப்போது ஒரு இறகாகி அவரிடமிருந்து உதிர்கிறாள்.
தியானிகன் சுண்டி விட ‘டொமினோ’ effect போல, புவியிலுள்ளோர் அனைவரும் தன்னுணர்வு கொள்வதும்,அதன் மூலமாகவே, வ்யாதியும், ஜரையும் அவர்களை வெல்வதும் அருமையான உருவகம். வ்யாதியாலும்,மூப்பினாலும் பீடிக்கப்பட்டவர்களுக்கு ம்ருத்யூ தேவியின் கனிந்த பார்வை கிட்டாமல் உழல்வது துயரத்தின் உச்சம்.
’காலமற்ற, சலனமற்ற, சொல்லற்ற, அலைகளற்ற ஆழ்கடலின் அமைதியில் சொக்கிப்போய் கண்சொருகிகிடப்பவன்’ – இனி திசை முழுவதையும் மறைத்துக்கொண்டு பேருருவனாகக் கிடக்கும் ரங்கநாதனை மனக்கண்ணில்காணும் ஒவ்வொறு முறையும் இவ்வரியை நினைத்துக் கொள்வேன்.
அவனாகிக் கிடக்கும் அவ்வாழ்கடலின் ஒரு அலை ராமன். அவன் சொல்லாததையும், செய்யாததையும்சாதிக்க வரும் மற்றொரு அலை கண்ணன் –இதுவும் இனிக்கும் மற்றொரு உருவகம்.
யமனைத் தன் கடமைக்குள் அமைத்து விட்டு, நாரதர் இந்திரனிடம் திரும்பிச் சென்று ‘துலாமுள்’ மீண்டும்நிகரானது’ என்று சொல்வது; ‘குமிழிகள் உருவாகலாம், ஆனால் அவை உடைந்து மீண்டும் பெருக்குடன் ஒன்றுசேர்ந்து இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட வேண்டும்’; ‘அழுக்கைக் களைந்து நன்னீராடி புத்துடல் கொள்வதுஅனைத்துயிருக்குமான உரிமை’-இவ்வரிகள் இப்பகுதியின் சிகரங்கள்.
இமைய முகடுகளை நோக்கிக் கொண்டு சொல்லொடுக்கி இருந்தது இங்கனம் மிகச்சிறந்த வரிகளாகத்திகைந்துள்ளது.
நன்றி,
கல்பனா ஜெயகாந்த்.