அன்புள்ள ஜெமோ,
என் அண்ணனின் மகள், தன் இரண்டாம் வயதில் முதன்முதலாக கன்னியாகுமரி கடலைப் பாரத்தாள்.
உடலெல்லாம் வியப்பொலிக்க, குதூகலத்தோடு சொன்னாள், 'எம்மாம் பெரிய குளம்'. நீலம் துவக்கத்தில் எனக்கும் அவளின் அதே மயக்கம் தான் இருந்தது.
ஆனால் இது ஒன்றும் நம் தேரூர் குளமல்ல,
அகலமும் ஆழமும் ஒருங்கே கொண்ட நூலாழி. தன் ஒவ்வோர் பக்கத்திலும் விதவிதமான நீலத்தைக் காட்டும் நீலாழி.
ஆரம்பத்தில் நீலம் எனக்குத் திறந்து கொள்ளவே இல்லை. இது ஒரு யோக நூல் என்ற ஜெமோ வின் கோனார் உரை தான் எனக்கான திறவு கோல். பல பகுதிகள் பல முறை மறுவாசிப்பு செய்தால் மட்டுமே உணர்வென எழுந்தது சித்தத்தில் அமர்கிறது. பெரும்பாலான பகுதிகளை முழுமை அல்லது நிறைவை நோக்கிய தேடல்களாக வாசிக்க வாசிக்க மொத்தமாக திறந்து கொண்டது.
கண்ணனிடம் ராதை தேடுவது தனக்கான முழுமையை. கண்ணன் அதைத் தர தயாராகவே இருக்கிறான். ராதைக்கு மட்டுமல்ல, தன்னுடனிருக்கும்
அனைவருக்குமே அவன் அதைத் தர தயாராகவே இருக்கிறான். ஆனால் அதை உணரவோ, அடையவோ யாருமே தயாராக இல்லை. ராதை கொஞ்சவது அவளால் உருவாக்கப்பட்ட கண்ணனைத்தான். அவளுக்குத் தெரிவதில்லை தானும் கண்ணனிடமிருந்து வந்தவள் தான் என்று. கண்ணன் அதை அவள் உணர வேண்டும் என்று தான் தவிக்கிறான்.
வேறு யாரையும் விட ராதையாலே தான் தன்னை முழுதறிய முடியும் என நினைக்கிறான்.
ஏனென்றால் அவள் தானே அந்த அன்னைப் பசுவின் கன்று. அக்கன்று அம்மா என்றதாலேயே அம்மாவாக மாறிய பெருங்கருணை அல்லவா அவன். அவளாலேயன்றோ இங்கே கண்ணன் உருவாகிறான்.
உண்மையில் தன்னை அம்மாவென்று மட்டுமே அறியும் கன்றிடம் நான் அம்மா மட்டுமல்ல, நீயும் நான் தான், என்னிலிருந்துதான் நீ, உனக்காகவும் தான் நான், நானே நீ தான் என்றெல்லாம் தன் பேரன்பை அப்பசு வெளிப்படுத்துகிறது. ஆனால் கன்றோ நீ அம்மா மட்டும் தான் என்கிறது.
உண்மையில் பர்சானபுரியில் ராதையின் கதவை அறையும் அப்பெருமழை, மறுக்கப்பட்ட கண்ணனின் பேரன்பு தான். அவனை யாருமே அறியவில்லை.
அவன் பேச யாருமே இல்லை. அந்தப் பசு மட்டுமல்ல கண்ணனும் பாவம் தான் இல்லையா? எல்லாருக்கும் கண்ணன் வேண்டும்.
ஆனால் அவரவர் விரும்பிய வகையில், அவர்களால் உருவாக்கப்பட்ட விதத்தில் வேண்டும். வேறு எவ்வகையிலானாலும் அவன் தூற்றப் படுகிறான். பிள்ளை என்ன தான் செய்வான்? தன்னைத் தானே பாவம் என்று சொன்னாலாவது புரிந்து கொள்வார்களா என்று தான் பார்க்கிறான். ஆனால் அதற்கும் சேர்த்து தான் வசையேற்கிறான்.
அப்பேரன்பிலே நனைந்து சென்று தான் கண்ணனைத் தூக்குகிறாள் ராதா. அப்போது அவளை அவளின் தொடுதலிலேயே உணர்கிறான். அவளுக்குத் தன்னை முழுவதும் உணர்த்த அவளுக்கான வேய்குழலிசையைக் கொடுக்கிறான். முதலில் அதைத் தவறவிடும் ராதை இரண்டாம் முறையில் முற்றுமுணர்கிறாள். தன் முன் இருப்பது தானுணர்ந்தவன் மட்டுமல்ல, தன்னைப் படைத்தவனும் தான். அவனும் தான் நான் என்பதை, என்றோ தன்னுள்ளே தானே கடைந்து எடுத்த வைரவெண்ணையை,
அதன் இருப்பை மட்டுமே அறிந்து, அதன் தூண்டுதலாலேயே கோகுலம் வந்த தன்னை உணருகிறாள். இதோ அவ்வெண்ணையை உருக்கும் வெம்மை. ஆம், அந்த மாயக்கண்ணனின் வேயகுழலிசை. தனக்குள் இருந்த அவ்வைரம் உருகுகிறதே, அவ்வைரத்தால் தானே நானே இருக்கிறேன், இனி என்ன நான் இல்லையா?, அவன் மட்டும் தான் நானா என மருகுகிறாள். கண்களில் பல்லாயிரம் யமுனையை உகுக்கிறாள்.
இவ்வளவிலும் அக்குழலோசையைக் கேட்டுக் கொண்டு தானிருக்கிறாள்.
அவளுள்ளே அவ்வைரம் செந்தீயென எரிகிறது. வெப்ப நோயில் விழுகிறாள்.
அவள் தொலையாமல் அவளின் கைப்பற்றி அழைத்துச் செல்கிறது அந்த இசை. முழுக்க முழுக்க கண்ணனால் மட்டுமே ஆனவளாக விழிக்கிறாள்.
அதற்குள் அவளின் ஆயிரம் மூங்கில்களையும் கண்ணக் கருவண்டு துளைத்து விடுகிறது. முழுமையடைந்துவிட்டாள். இனி கண்ணன் ராதையைப் பார்த்து 'கண்ணன் பாவம்' என்று சொல்ல மாட்டான்.
வேய்குழலைப் படிக்கும் போது மனதுக்குள ஓடிய பாடல், 'காற்றினிலே வரும் கீதம்'. குறிப்பாக இவ்வரிகள்,
' நிலா மலர்ந்த இரவினில் தென்றல் உலாவிடும் நதியில்
நீல நிறத்து பாலகன் ஒருவன் குழல் ஊதி நின்றான்
காலமெல்லாம்
காலமெல்லாம் அவன் காதலை எண்ணி உருகுமோ என் உள்ளம்'
நறுவெண்ணை, வேய்குழல் இரு அத்தியாயங்களும் என்னை பித்து கொள்ள வைத்துவிட்டன ஜெ. பல முறை வாசித்து விட்டேன். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு திறப்பு. எதையுமே வார்த்தையாக்க முடியவில்லை. பல முறை கண்கள் நிறைந்தது தான் மிச்சம்.
இந்த பரமாத்மா தன்னிலிருந்து வந்த ஒரு ஜீவனுக்காக இவ்வளவு அல்லல் படுமா என்ன? போர்வைக்குள் சுருண்டிருக்கும் இரக்கமற்றவனா நான்? எண்ணத்தின் வேகத்தில் எழுத முடியவில்லை ஜெ. முடிவேயில்லாத பத்தாயத்திலிருந்து கொட்டும் நெல்லை அள்ள முடியாமல் திகைக்கும் ஆச்சியாகத் தானிருக்கிறேன். அள்ளிய வரை கொட்டிவிட்டேன்.
ஆனாலும் இப்பித்து இன்னும் தொடரும் போலத் தான் தெரிகிறது. உங்களின் மூன்று விரலைச் சரியாகத் தான் பின்தொடருகிறேனா?
அன்புடன்,
அருணாச்சலம், நெதர்லாந்து.