அன்புள்ள திரு.ஜெ வணக்கம்
மூலாதாரத்தின் மூண்டெழுக் கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறிவித்தே
……………………………………………………………………………… ……………
……………………………………………………………………………… ……………..
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே எந்தன் சிந்தைத் தெளிவித்து-விநாயகர் அகவல்
நீலம்-18ன் உயரம் மிக மிக உயரம். மண், காற்று நீர் இன்று நெருப்பு. விதையை ஊன்றி அதை ஒரு வனமாக்கிவிட்டு செல்லும் ஜெ. தமிழ் அன்னை பூத்துப் பூத்து குளுங்குகின்றாள். அவ்வளவுப்பூவையும் அள்ள முடியவில்லை. அவ்வளவுப்பூவையும் அள்ளவேண்டிய தேவையும் இல்லை. ஒருப்பூ அதன் மூலம் ஒரு கனி அதுவும் பலாக்கனி என்றால் எத்தனை சுளையோ அத்தனை தேன் அத்தனை இனிமை அத்தனை தெம்பு அதுபோதும்.
வீரபாண்டிய கட்டப்பொம்மன் பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்கட்டிய இடத்தைப்பற்றி ஒரு பழம்கதை உண்டு. வீரபாண்டிய கட்டப்பொம்மன் எந்த இடத்தில் கோட்டை கட்டலாம் என்று நினைத்து கொண்டு குதிரையில் பயணம் செய்கொண்டு இருக்கும்போது முயலை துரத்தும் ஒரு சிங்கத்தை காண்கின்றார். கொஞ்ச தூரம் பயந்து ஓடிய முயல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று சிங்கத்தை எதிர்த்து விரட்டியது என்பதுதான் அந்த கதை. இது வீரத்தை குறிக்க ஒரு குறியீடு. பாஞ்சாலங்குறிச்சி மண்ணெடுத்து கோழி குஞ்சிப்பொரிக்க முட்டையை அவையம் வைப்பது உண்டு என்றும் சொல்வார்கள்.
ஆதி சங்கரர் சிருங்கேரி சாரதா மடத்தை அமைக்க நினைத்த இடத்தில் வெயிலில் வாடி தவித்த ஒரு சினைத் தவளைக்கு நாகம் குடைப்பிடித்ததாம். இது கருணைக்கு ஒரு குறியீடு.
கோகுலம் அமைந்த கதையில் வரும் அந்த வருணனை குறியீடுகள். உயிர்ப்பை,வளத்தை, குடும்பத்தை, அன்பை, செழிப்பை, கலையை கருணையை,பாதுகாப்பை அழகாக அற்புதமாக வடித்து அதை எண்ணி எண்ணி நெஞ்சம் இனிக்கும் காட்சியால் அழுகுப்படுத்தி உள்ளீர்கள். //நான்குசோலை கடந்து நடந்து வந்து நின்ற இடம் கோகுலம்.இங்கே மண்ணில் விழுந்துகிடந்த மரமொன்று தளிர்விட்டெழுந்ததைக் கண்டோம். அதன் அடிமரத்துச் சிறுபொந்தில்கூடுகட்டி குஞ்சு பொரித்த அன்னைக்காகம் ஒன்றைக் கண்டோம். கூட்டுக்குள் மணிவிழி விரித்து மலர்சிறை பிரித்துகாகக்குஞ்சொன்று எங்கள் காலடி கேட்டு எம்பி நோக்கியது. அருகே கருங்குயில் கரந்திட்ட சிறுமுட்டை விரிந்துஎழுந்துவந்த சிறுமணிக்குஞ்சொன்று செவ்வுதடு பிளந்து மெல்லியகுரலெழுப்பக் கேட்டோம். “மதியறிந்த காகம்மண்ணுயரத்தில் கூடுகட்டும் இவ்விடம் நாகம் குடியேறா நலமுடையது. இங்கு அமைக நம் குலம். இங்குபெருகட்டும் நம் குடி” என்றார் எந்தை மூதாயர். “பொலிக! பொலியே பொலிக!” என்று குரவையிட்டனர் பெண்கள்//
பாரத நாடுமுழுவதும் ஏதோ ஒரு மையப்புள்ளியில் இறைவனை அவன் கருணையை விதையாக்கியே எல்லாம் செய்கின்றார்கள் நம் மக்கள்.
கோகுலமே குருகுலம்தான் (குருவானவர் இருக்கும் இடம்). நாளைய பாரதத்தின் குருபிறக்கும் இடம் என்பதால். குரு இருக்கும் இடத்தில் என்ன என்ன ஒரு சொல்லில் இருந்து உருவாகும் என்பதை சொல்லிப்போகும் இந்த இடம் நினைக்க நினைக்க பொருள்பெருகும் நூல்போல சுவைபெருகி மதி பெருகி இன்பம் பெருகி நிற்கின்றது. //ஒன்றுகேட்க ஒன்று உரைக்க இன்னொன்று ஐயப்பட பிறிதொன்று விளக்க அருகே ஒன்று வியக்க அங்கே ஒன்று நகைக்கஅப்பால் ஒன்று பாட அங்கே நிறைந்திருந்தது ஒற்றைச்சொல் என்று வரியாசி உணர்ந்தாள். ஒன்றை அறிவதில்இத்தனை உணர்வுகளா என்று எண்ணினாள். ஒன்றானது தன்னை பலவாக்குவது அவ்வாறல்லவா என்றுஅமைந்தாள்//
எழுத எழுத எழுந்துக்கொண்டே இருக்கும் அமுதக்கடல் நீலம்.
நன்றி
வாழ்க வளமுடன்
அன்புடன்
ராம.மாணிக்கவேல்.