அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.
ஆணவமே அறிவாக தெரியும் அதிசயம்தான் வாழ்க்கை முழுவதும் நடந்துக்கொண்டு இருக்கிறது அதைத்தான் மனிதனும் அறிவு என்று நம்புகின்றான்.
பாண்டுகொடுத்த வைரமும், ஆட்சிப்பொருப்பும் தன்னிடம் இருப்பதாலேயே அஸ்தினாபுரி முழுதாக தன்னிடம் இருப்பதாகவே நினைக்கும் விதுரனை சுருதை பார்த்து “உங்களிடம் இல்லாதது ஷத்ரம்” என்று அவன் ஆணவத்தை உடைகிறாள். ஆணவம் உடையும்போது மனிதன் அவமானப்பட்டு தனக்குள் உடைந்து நொறுங்குகின்றான். தன்னிடம் உள்ள ஆணவம் உடைந்தது என்பதை அறிந்த மனிதன் தெளிவோடு ஞானத்தோடு எழுந்து வந்து துளிர்க்கின்றான் ஆனால் தானே உடைந்துவிட்டதாக நினைத்து எழமறுக்கும் மனிதன் மண்ணாகிவிடுகின்றான்.
மக்களின் கொந்தளிக்கும் உணர்ச்சிகளை கரைக்கட்டி ஒழுங்காக பரபப்பமுடியும் என்று கூறும் பீஷ்மரிடம் விதுரர் சொல்கிறார்“என்னால் அதை செய்யமுடியாது. அதற்கும் ஒரு ஷாத்ர வல்லமைதேவை” என்றார் விதுரர்” –பிரயாகை-68
சுருதை தன்னை அவமானப்படுத்தியபோது பயன்படுத்திய வார்த்தையை இங்கு பயன்படுத்துகின்றார் விதுரர் ஆனால் அறிவின் தெளிவாக, தன்னை அறிந்திருக்கும் வல்லமையோடு தெரிவிக்கிறார். இல்லாத ஒன்றை இருக்கென்று எண்ணும் ஆணவத்தை இங்கு துறக்கின்றார் விதுரர். இது வார்த்தையாக வெளிப்படும் முன்னமே தானே அதை உணர்ந்தும் இருக்கிறார். அவர் சொன்னது வெறும் வார்த்தை அல்ல.
//அந்தப் புன்னகை. தெய்வங்களே, அந்தப்புன்னகையை எப்படி காணத்தவறினேன்? இத்தனை காவியம் கற்றும் அதை காணமுடியவில்லைஎன்றால் நான் வெறும் ஆணவக்குவை மட்டும்தானா?/-பிரயாகை-67
தன்னுடன் இருப்பது ஆணவம்தான் என்பதை முன்னால் அறிந்து பின்னால் வார்த்தையாக ஆக்குகின்றார் விதுரர்.
ஆணவம் மறையும் இடத்தில் வெளிப்படும் ஒரு வெளிச்சமே புன்னகைதான். அந்த புன்னகையின் இருப்பிடமாக கண்ணன் இருக்கிறான். கண்ணனே புன்னகையின் கடவுளாகவும் ஆகின்றான். மனிதர்களின் காமக்குரோதமோகத்திற்கு அப்பாற்ப்பட்ட புன்னகை அது.
காந்தத்தின் அருகில் இருக்கும் இரும்பும் காந்தமாகிவிடுவதுபோல் கண்ணனின் புன்னனையில் விதுரரும் புன்னகை பூக்க தொடங்குவது பக்தனின் தெய்வீக சாயல்.
அந்த புன்னகையில் முழுதுமு் மூழ்கிப்போகின்றார் விதுரர். மூழ்கி எழுந்துவரும்போது தேனில் விழுந்த மாவுபோல் முழுதும் தேனாகி வருகின்றார். அவரும் அந்த புன்னகையும் இரண்டு அல்ல என்பதுபோல் ஒன்றாகிவிடுகின்றார்.
வெளிச்சத்தை கண்ட இருட்டு விளகுவதுபோல விதுரரின் புன்னகையைக்கண்டு கணிகரும், சகுனியும் விளகுவது அற்புதம். விதுரர் தன்முகம் வெளிச்சத்தில்பட்டு அனைவரும் பார்க்கும்படி அமைந்தது அதனினும் அற்புதம். கண்ணன்போல விதுரன் வந்து நிற்கும் இடம் இது.
அப்புன்னகையுடன் அவர் அவை நுழைந்தபோது அவர் முகத்தைமுதலில் வந்து தொட்ட கணிகரின் கண்கள் திகைப்புடன்விலகிக்கொள்வதை விதுரர் கண்டார்.
பீடத்தில் அமர்ந்தார். நிமிர்ந்து தலைதருக்கி எதிரே இருந்த சாளரத்தைநோக்கி முகத்தை திருப்பிக்கொண்டார். அது தன் முகத்தை ஒளியுடன்காட்டும் என அவர் அறிந்திருந்தார்.-பிரயாகை-68
கணிகன், சகுனி, பத்ரசேனர், ஷத்ரிய குலத்தவர்கள் என அனைவரும் எதிர்ப்பார்த்தது விதுரனின் தோல்வியை கண்ணீரை, அதை தனது புன்னகையால் விதுரர் திருப்பியபோது அது தோன்றிய இடத்திற்கே சென்றுவிட்டது. கண்ணனின் திறமைகூட இதுதான். அவன் யாருக்கும் எதிராக எதையும் செய்வதில்லை.தனக்கு எதிராக கிளம்பிவரும் எதையும் அவன் பற்றிக்கொள்ளவில்லை மாறாக தன்னை புன்னகையால் நிரப்பிக்கொள்கின்றான். வெற்றிடம் இல்லாத இடத்தில் எதுவும் நிரம்பமுடிவதில்லை. கண்ணன் வெல்லாமலே வென்றுபோதுதன் சூட்சமும் புரிகின்றது. விதுரன்கூட இன்று விளையாடமல் வென்றுபோகின்றான்.
சீறிவரும் கடல் அலை மடிந்துவிழுந்து தனது வேகத்தை குறைத்துக்கொள்வதுபோல அனைவரும் பிரயாகை-68ல் மடிந்துவிழுந்து வேகத்தை குறைத்துவிடுகின்றார்கள். விது ரர் முன்பு கணிகர், சகுனி மடிந்து விழுகின்றார்கள். திருதராஷ்டிரன் முன்பு வாசகன் மடிந்துவிழுக்கின்றான். விதுரர் முன்பு பத்ரசேனர் மடிந்துவிழுகின்றார். பலராமர் முன்பு துரியோதனன் மடிந்து விழுகின்றான் மொத்தத்தில் பாண்டவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்ற இடத்தில் கதையே மடிந்துவிழுந்து தன்னை கடலென்று காட்டிக்கொள்கின்றது.
//பீமன் இருக்கிறான் என்றால் தருமனும் இருக்கிறான். அவனே நம்இளவரசன். அர்ஜுனனும் பீமனும் சென்று பாஞ்சாலியைவெல்லட்டும். குடித்தலைவர்களின் கோரிக்கை நிறைவடைய அதுவேவழி// -பிரயாகை-68
அலைகளை அலைகளே தள்ளிக்கொண்டு போவதுபோல உணர்ச்சிகளை உணர்ச்சிகளே தள்ளிக்கொண்டு சென்று கரைசேர்த்துவிடுகின்றது. சகுனியின் மனதில் தோன்றிய உணர்ச்சி துரியோதன் இளவரசனாக ஆகவேண்டும் என்று அலையானபோது அதை துரத்தும் ஒரு உணர்ச்சியும் பலராமன் மனதில் அலையாக எழுந்த வந்து அஸ்தினபுரியில் கரைசேர்ந்துவிட்டது. உண்மை என்னும் கடல்மட்டும் அப்படியே இருக்கின்றது. கண்ணன் புன்னகைக்கடல் அலையில் அடித்துக்கொண்டு செல்வதில்லை.
நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.