அன்புள்ள ஜெ,
நலம்.விழைவதும் அவ்விதமே. இம்முறையும் விஷ்ணுபுரம் விழாவிற்கு வர இயலவில்லை. அலுவலகத்தில் அன்றைய நாட்களுக்கான வருடாந்திர வேலைகள் காரணமாக விடுப்பு எடுக்க இயலவில்லை. அடுத்த ஆண்டாவது நிச்சயம் கலந்துகொள்ள வேண்டும். இரண்டு நாட்களில் பல சந்திப்புகளில் எத்துணை விஷயங்க்கள் பேசப்பட்டிருக்கும்... நினைக்கையில் பெரும் இழப்புணர்வே எஞ்சுகிறது.
வெண்முரசு குறித்து இதுவரை நான் தங்களுக்கு விரிவாக எழுதவில்லை. மிக எளிமையாகத் தொடங்கி இப்போது ஒரு காட்டாறு போல அது ஓடிக்கொண்டிருக்கிறது. அம்பை - பீஷ்மர்- சிகண்டி இவர்களுக்கிடையெயான நிகழ்வுகள் எப்பொழுதும் இருக்கும் ஒரு உச்சத்திலேயே எவ்வளவு ஆழமாகச் செல்கிறது. அம்பை பீஷ்மரைச் சந்திக்கும் அத்தியாயம் முதற்கனலில் ஒரு சிகரம். சிகண்டி பீஷ்மரை அறியாமல் சந்திப்பது மற்றொரு சிகரம். ஆனால் இவற்றை விட அஷ்ல வசுக்களின் கதையை பீஷ்மரிடமே அவரின் முற்பிறப்பின் கதையாக கூறும் இடம் ஒரு சிறந்த புனைவுத்தருணம். மரபிலும் பண்பாட்டிலும் அறிமுகம் உள்ள ஒரு இளம் வாசகனுக்கு வெண்முரசு ஒரு இலட்சியப் படைப்பே. அதுபோல் அம்பிகை -பீஷ்மர் - விசித்திரவீரியன் நிகழ்வுகளும் .
மழைப்பாடல் இன்னும் ஆழமாகவும் நுட்பமாகவும் சென்றது. மனிதர் எத்தனை அறிவுபூர்வமாக சிந்தித்தாலும் உணர்வுப் பூர்வமாகவே நடக்கின்றனர் என்பது எவ்வளவு அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது. பீஷ்மர் காந்தாரத்திற்கு பெண் கேட்டுச் செல்ல முடிவெடுப்பதும், சகுனி பீஷ்மரின் அழைப்பை ஏற்க முடிவெடுப்பதும் எவ்வளவு தன்னிச்சையாக நிகழ்ந்தது. உண்மையில் மழைப்பாடல் இந்த தன்னிச்சைகளின் விளையாடலே என்று தோன்றுகிறது. நினைக்கும்தோறும் மீண்டும் மீண்டும் வியக்கவைக்கிறது. வாழ்க்கை என்பது கடைசியில் இதுதானா ? நாமறியாமலே நமக்கான திசையைத் தேர்தெடுத்து நம்மை மீறி நாமே முன்னகரும் விழைவுதானா? பிறகு வாழ்க்கைக்கு என்னதான் பொருள் ?
இ ஆர் சங்கரன்
அன்புள்ள சங்கரன்
காவியங்களைக் காணும்போது வாழ்க்கை என்பது தன்னிச்சையான நிகழ்வுகளுக்கும் அவற்றை எதிர்கொள்ளும் மனிதர்களுக்கும் இடையே நிகழும் சதுரங்கம் என்றுதான் தோன்றுகிறது. வெல்வது என்பது நன்றாக ஆடுவது மட்டுமே.
ஜெ