Monday, January 12, 2015

அணிகளும் மெய்யும்

 
 
 
ஆசிரியருக்கு ,

நிஜ வாழ்வில் ஊகங்களுக்கும் குழப்பகளுக்கும் இடமான பூடகமான தருணங்களை சொல்வதே இலக்கியமே அன்றி நாம் அறிந்ததை அல்ல.  பிரயாகை 83 அத்தகயது. அதன் ஒரு சிறு பகுதியை வாசித்து எழுதி விளங்கிக் கொள்ள முயல்கிறேன். 

பிருஷதி ஆவலுடன் ஆபரணங்களைப் பார்ப்பது, பின் வெறுமை கொள்வது அதன்பின் திரௌபதியை நிர்வாணமாகப் பார்ப்பது ஆகியவை நெருக்கமாக இணைக்கப் பட்ட ஒரு படக் காட்சிபோல விரிகிறது.

பெண்களுக்கும் நகைகளுக்கும் ஆடிக்கும்  உள்ள உறவு என்பது கூட  உயிரியல் ரீதியானதோ என  எண்ணத் தோன்றுகிறது. ஆணைப்  பார்க்கும் அதே தரத்திலான காமம் தான் ஒரு பெண்ணுக்கு நகைகள் மீதும் கண்ணாடியில் தன் பிம்பத்தின் மீதும். ஆணுக்கு மகன் அவனின் விதை நீட்சி , பெண்ணுக்கு மகள் அவள் கவரும் அழகின் நீட்சி. பிருஷதி அணிகலன்களைப்  பார்க்கிறாள் உள்ளூர அவளுக்குத் தெரிகிறது தாம் இளமையை, கவரும் தன்மையை இழந்து விட்டோம் , இது அவளை எவ்வகையிலும் கூட்டாது. அடுத்த கணம் அதன் மீது ஒரு அர்த்தமற்ற பார்வை. பின் த்ரௌபதியின் நிர்வாணம் , நிச்சயம் அணிகள் அவளைக் கூட்டும். இளமை கடந்த ஆடி முன் நிற்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் தெரியும் தாம் மங்கிக் கொண்டிருக்கிறோம் , தளர்ந்து கொண்டிருக்கிறோம் , இளமை நீர்த்துக் கொண்டிருக்கிறது , அணிகள் அதன் பொருளை இழந்து கொண்டிருக்கிறது.  அவள் காணும் ஒவ்வொரு இளம் பெண்ணும் தனது கடந்த காலம்.

உண்மையாக எதையும் உணராதபோதுதான் அணிச்சொற்கள் அழகாக இருக்கின்றன போலும்"  என அந்த சேடி சொல்வது மொழிக்கு மட்டுமல்ல உடலுக்கும் (மெய்க்கும் ) கூடத்தான். ஆடையற்ற  திரௌபதியில் ப்ருஷதி  காண்பது நிகழ் கால நிஜம், ப்ருஷதி கடந்த கால நிஜம். ஏதானாலும் சுவற்றில் விழும் நிழல் இரண்டுக்கும் ஒன்று தான் என்கிற இடம் அசலை அதன் அசல் தன்மைக்கே இட்டுச் செல்கிறது.

எவ்வளவு சொன்னாலும் உண்மையின் பிம்பத்தை , நகலை அல்லது அதன் நிழலைத் தான் இந்தப் பகுதி சொல்லி இருக்கிறது, அதில் ஒரு பகுதியை பிடித்துக்  கொண்டு உண்மைக்குச்  செல்ல முயல்வோம்.   

கிருஷ்ணன்