வெண்முரசில் வரும் கவித்துவ படிமங்களில் ஒன்று கர்ணனின் கவசம்.
பிறப்பிலேயே கவச குண்டலங்களோடு பிறந்தவன் கர்ணன் என்பது தான் நானறிந்த கதை.
ஆனால் இது நவீன நாவல். அதில் எப்படி இந்த மாயத்தை, நடக்க சாத்தியமற்ற
ஒன்றை ஜெ கொண்டு வரப் போகிறார் என்று நினைத்திருந்தேன். அவன் தன் முதல்
கொடையை நிகழ்த்துமிடத்தில் முன்காலை சுவர்ணையின் ஒளியில் அவன் மேலிருந்த
நீர் பொற்கவசமாகவும், காதுகளில் வழிந்த நீர் குண்டலங்களாகவும் தெரிந்ததாகக்
கொண்டுவந்தார். அன்றிலிருந்து இப்போது வரையிலும் கர்ணனின் உயர்வை
வாசகருக்குக் கடத்தும் ஓர் கவித்துவ உத்தியாகவே இப்படிமம்
பயன்படுத்தப்பட்டு வந்தது. உதாரணத்துக்கு கர்ணனின் அஸ்தினபுரி
நகர்நுழைவன்று பெயரிடப்படும் இள தீர்க்கசியாமன், தன் ஒளியிழந்த விழிகளில்
கர்ணன் பொற்கவசத்துடன் தெரிவதாகச் சொல்வான். திருதராஷ்டிரரும் அவ்வாறே
உணர்வார். பின்பு பயிற்சிகளத்தில் அங்க நாட்டரசனாக முடிசூட்டப்படும் போதும்
அவன் மேல் வழியும் அபஷேக நீர் பொற்கவசமாகவும், குண்டலங்களாகவும்
காட்சியளிக்கும், தருமனுக்கு.
கர்ணன் பிறந்தபோதே
இருந்ததாகச் சொல்லப்பட்டதை கர்ணனின் இளமையிலேயே, அவன் குருகுல வாசம்
துவங்கும் முன்னரே அவன் அடைவதாகச் சொல்வதன் மூலம் அந்த கர்ண பரம்பரைக்
கதையையும் இயல்பான ஒன்றாக ஆக்குகிறார் ஜெ. அக்காலத்தில் கவசமும் குண்டலமும்
எல்லாருக்கும் பொதுவான ஒன்று அல்ல. குண்டலங்களைக் காதில் அணிவது முறைய்ன
கல்வி கற்றவர்களுக்கே உரித்தானது. அதாவது முறையான குருகுல வாசத்தில்
கற்பது. கவசம் என்பது வீரர்களுக்கு உரித்தானது. அதைப் பெற வேண்டுமென்றாலும்
குருகுலம் தான் செல்ல வேண்டும். இந்த இரண்டையும் ஒருவன் பெற்றிருக்க
வேண்டுமென்றால் அவன் ஷத்திரியனாக இருக்க வேண்டும். இங்கே கர்ணன் குதிரைச்
சூதனின் மகன். அவனுக்கு கவசமும், குண்டலங்களும் சாத்தியமேயில்லை. ஆனால்
கர்ணன் அதைப் பிறக்கும் போதே கொண்டிருந்தான் என்பது அவன் பிறப்பால்
ஷத்ரியன் என்பதைக் குறிக்கவேயன்றி அது உண்மையான ஒன்று அல்ல. ஆம், அது அவன்
ஷாத்ரத்தின் குறியீடு. அதைத் தான் ஜெ கச்சிதமாக கர்ணன் அஸ்தினபுரி
வருவதற்கு முன்பே, குருகுல வாசமேற்பதற்கு முன்பே அவற்றைக் கொண்டதாக
எழுதியிருக்கிறார்.
இதுவரையிலும் கர்ணனன் கவச
குண்டலங்களை அவனை மனதாலறிந்தவர்கள் மட்டுமே கண்டிருக்கிறார்கள்.
முதன்முறையாக அவனை துர்க்கையின் ஆலயத்தில் காணும் திரௌபதியும் அவனது
மார்பையும், காதுகளையும் கூர்ந்து கவனிப்பதை துரியோதனன் பார்க்கிறான்.
அப்படி அவள் எதைப் பார்த்தாள் என்பதை அவள் அணுக்கச் சேடி மாயையிடம் அதைப்
பற்றி பேசும் போதே வாசகர்களாகிய நாம் அறிகிறோம். மாயை அது ஏதோ மாயம்
என்கிறாள். நிமித்திகரிடம் கேட்போம் என்கிறாள்.
இவ்விடம்
வரையிலும் வெண்முரசில் அந்த கவசத்தைப் பற்றிய எந்த ஒரு விவரணமும்
வந்ததில்லை. கர்ணனிடம் அப்படி ஒன்று இருப்பதாகத் தோன்றுவதாகத் தான்
வருகிறது. ஆனால் திரௌபதி மிக நுணுக்கமாக அதை விவரிக்கிறாள். ஆம், கர்ணன்
சூரிய புத்திரன் என்பதால், தன்னை சமவரணனாகவும், கர்ணனை தபதியாகவும்
நினைத்து பாரதவர்ஷத்தை ஆண்டு மீண்டும் குருவுக்கிணையான ஓர் மகனைப்
பெற்றிருந்தவள் அல்லவா அவள். அவள் கனவுகளில் வந்த கர்ணன்
அதையணிந்திருக்கலாம். அக்கனவும், நிஜமும் இணைந்த அந்த தருணத்தில் அவள்
கண்ணுக்கு அவை தென்பட்டிருக்கலாம்.
எது
எப்படியோ, இதுவரையிலும் கர்ணனுக்கு சிறப்பு சேர்த்த அந்த கவசமும்
குண்டலங்களுமே இப்போது அவனுக்கு எதிரியாகி விடுகின்றன. உண்மையில் அவனிடம்
அந்த கவச, குண்டலங்கள் இல்லை என்பது திரௌபதியைப் பொறுத்தவரை ஓர் பெரிய
சகுனம். அவள் கனவில் கண்ட, தன்னை எல்லா விதத்திலும் முழுமை கொள்ள வைக்கும்,
என்ன வந்தாலும் நினைத்ததை அடையும் மன உறுதியையும், செயலூக்கத்தையும் கொண்ட
ஷாத்ர குணத்தின் மறு வடிவமான சூரியபுத்திரன் கர்ணனிடம் அவள் மிகவும்
விரும்பிய ஷாத்ர குணம் என்பது நிலையானது இல்லை என்பதையே அவள் அங்கு
உணர்கிறாள். அந்த சமயத்தில் அவள் கர்ணன் மீது கொண்டிருந்த பெருங்காதல், ஒரு
மாற்று குறைகிறது.
இது கர்ணனுக்கும் தெரிந்து
விடுவது தான் ஆச்சரியம். அதனால் தான் அந்த எரியம்பு பட்ட வேதனை அவனுக்கு.
ஆனால் விதி இங்கு நின்று விளையாடுகிறது. அவனது ஷாத்ரம் அவனை விட்டு விலகி
விடுவதற்கு இந்த சுயம்வரம் போல வேறு சிறந்த தருணம் இருக்காது. அவனின் ஆசை
நிராசை ஆவதற்கு அவன் ஷத்ரியன் இல்லை என்ற சொல்லே ஆதாரமாக இருக்கப் போகிறது.
குரு சாபம் பலிக்கப் போகிறது. அந்த வேதனையைத் தான் அவன் முகம் காட்டியது.
அந்த சோகத்தைத் தான் நண்பனுடன் பகிர்ந்து கொள்ளத் தூண்டியது. ஆனால் கர்ணன்
முற்றிலும் எதிர்பாரா வண்ணம் துரியன் தன் நண்பனுக்காக மிக எளிதாக திரௌபதியை
விட்டுக் கொடுத்துவிடுகிறான். ஆனால் கர்ணனே எதிர்பாராதது திரௌபதி அவனை
நிராகரிப்பதற்கான நிகழ்வுகள் நடைபெற்று விட்டன என்பது.
திரௌபதி
அந்த கவச குண்டலங்களின் மாயத்தைத் தன் அகங்காரத்தின் மீது விழுந்த பலத்த
அடியாகப் பார்க்கிறாள். மாயையின் முன் எளிய பெண்ணாகத் தோன்றிய அந்த கணம்
அவளை நிச்சயம் எரித்திருக்கும். அந்த தோல்வியில் இருந்து தன் அகங்காரத்தை
மீண்டும் திரட்டவே அவள் பாண்டவர்களைப் பற்றி பேச்செடுக்கிறாள். அதற்கு
ஏற்றார் போலத் தான் அர்ஜுனன், தருமன், பீமன் என ஒவ்வொருவராக அவள் முன்
தோன்றுகின்றனர். பேரகங்காரம் கொண்டவர்கள், தான் இழந்ததைப் போல பல மடங்கு
பெற வேண்டும் என்று தானே எதிர்பார்ப்பார்கள். அதைத் தான் இங்கு திரௌபதி
செய்கிறாள். தான் இழந்த ஒரு கர்ணனுக்கு நிகராக ஐந்து பேர் அமைந்தால் என்ன
என்று எண்ணுகிறாள். மீண்டும் மீண்டும் மாயையுடன் பேசி தான் கர்ணனைத் துறக்க
எடுத்த முடிவை சரி பார்த்துக் கொள்கிறாள்.
மீண்டும்
வலைப் பின்னல்கள் போல நிகழ்வுகள். வலையை விட்டு அவ்வளவு எளிதாக வெளிவர
இயலவில்லை. அன்னை விழி எவ்வகையிலும் தனித்துவம் வாய்ந்த பகுதி தான்
என்பதில் சந்தேகமில்லை/
அன்புடன்,
மகாராஜன் அருணாச்சலம்