இனிய ஜெயம்,
இன்றைய அத்யாத்தில் அர்ஜுனன் வெற்றி எதிர்பார்த்த ஒன்று. ஆனால் அர்ஜுனன் அடையும் இக்கட்டு எதிர்பாரார்தது. பீமன் திரௌபதியை அசைத்துவிடுகையில் பார்த்தன் கொள்ளும் பொறாமை....
துரியன் கர்ணனுக்கு செய்ததை, கிருஷ்ணன் ஒருபடி மேலாக அர்ஜுனனுக்கு செய்திருக்கிறான். கிருஷ்ணன் வில்லேந்துகிறான். அரியணையில் அமர்ந்திருக்கும் கற்சிலை பாகாக உருகிறது.
கிளியை சிதறடிக்காமல் இறகை மட்டும் கொய்கிறான். எந்தவில்லாளியையும் துவளச் செய்யும் நுட்பம். அவ்வளவே வணங்கி விடை பெறுகிறான். நாயகன் அனைத்திலும் நாயகன்.
அர்ஜுனன் கேசினியை சிதரடிப்பதன் வழியே சிகர முனைக்கு வந்து விட்டான். இனி ஒரு காலடி வைப்பு கூட அவனுக்கு சாத்தியம் இல்லை. அர்ஜுனன் வெற்றியால் தோற்கடிக்கப் பட்டு விட்டான்.
இதுவரை கிந்தூரம் வேறு. அர்ஜுனன் தொட்டபின் அது வேறு. ஏனையோருக்கு அது திரௌபதியின் அகம். அர்ஜுநனுக்கு அது 'வெறும்' உடல் மட்டுமே.
சிறந்த வில்லாளி எனும் சுமையை இனி ஒரு போதும் இறக்கி வைக்க இயலாத பேதையைக் கண்டு புன்னகைக்கிறான் ஒரு விவேகி.
இது ஒரு எல்லை, மற்றொரு எல்லையில் பீமனால் கிந்தூரத்தை தூக்கிப் போட்டு விளையாட முடியும். ஆனால் நான் பூட்டி அம்பு தொடுக்க முடியாது. அவன் வில்லுக்கானவ்ன் அல்ல கதாயுததுக்கானவன். அவனது எல்லைகளை பார்த்தன் அறிந்தும் திரௌபதியின் புன்னகை பீமன் மீது பாத்தனுக்கு பொறாமையை வரவழைக்கிறது.
கிருஷ்ணன் சொல்லாக சொல்லாவிட்டாலும் அவன் தனக்கு விட்டுத் தருவான் என அர்ஜுனன் அறிந்திருக்கிறான் .ஆனால் கிருஷ்ணன் விட்டுத் தந்த முறை. அதுதான் அர்ஜுனனை சினம் கொள்ள வைக்கிறது. திரௌபதி விரும்பும் ஐந்துமானவன் தான் என்று நிரூபித்த பிறகே கிருஷ்ணன் விட்டுத் தருகிறான்.
இனி திரௌபதி நிலை . கிருஷ்ணன் சிதரடிக்காத கேசினிக் கிளி. அல்லவா? இந்த நிலையே பார்த்தனின் ஊற்று. ஆயின் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு அளிக்கும் புன்னகை........?
கடலூர் சீனு