நாலைந்து அத்தியாயமாக சேர்த்து வைத்து படித்துவிட்டேன். சாத்யகி+சியமந்தகம் உங்கள் கைவண்ணம்தானே? இல்லை இதுவும் ஏதாவது தொன்மத்தில் வருகிறதா?நினைவில் நிற்கும் இடங்கள்:// நிழல் அவனை இரண்டாக வெட்டி தனித் துண்டுகளாக உள்ளே அனுப்புவதைக் கண்டான். புன்னகையுடன் “நிழலின் எடை” என்றான் திருஷ்டத்யும்னன். அவன் சொன்னதை முற்றிலும் உணர்ந்துகொண்டு புன்னகைத்து “ஆம், விண்சொடுக்கும் சாட்டை” என்றான் சாத்யகி.“சில தருணங்களில் வாள்நிழலின் கூர்மையை நாம் உணரமுடியும் யாதவரே” //// அதே அடியிலா அகழி. நூற்றியெட்டு பாதாள தெய்வங்கள் அங்கும் எழுந்து வருகின்றன. அச்சமென, ஐயமென, விழைவென, ஆணவமென உருக்காட்டுகின்றன. அக்கணத்தைக் கடந்து நாம் உரியவற்றை இன்றியமையாதவற்றை மேன்மையானவற்றை முழுமையை அடைய முடியும் //// அன்னை முன் மலம்பரவிய உடலுடன் சென்று நிற்காத மைந்தருண்டா என்ன? //வரிகள் பிரமாதமாக வந்து விழுகின்றன, சொல்லத் தயக்கமாகத்தான் இருக்கிறது, இருந்தாலும் சொல்லாமல் இருக்க முடியவில்லை. நான் ஏதோ சொல்லிவிட்டேன் என்று நீங்கள் உங்கள் போக்கை மாற்றிக் கொள்ளமாட்டீர்கள், எனக்கு சுவை எதுவும் குறைந்தவிடாது என்ற தைரியம்தான். :-)சியமந்தகத்தை எட்டு தேவிகளை மணம் புரிந்ததை விவரிக்க உதவும் ஒரு சட்டகமாகவும் பயன்படுத்துகிறீர்கள் என்று தெரிகிறது. ஆனால் என் கண்ணில் சியமந்தகம்=விழைவு என்பது கொஞ்சம் அதிகப்படியாகிக் கொண்டே போகிறது, தர்க்கரீதியாக பிழைகள் தெரிகின்றன என்றால் கோபித்துக் கொள்ள மாட்டீர்களே? உதாரணமாக சாத்யகி மணியை கவர்ந்து செல்வான், அவனுக்கு வைக்கப்படும் தேர்வில் தோற்பான் என்று கண்ணன் நிச்சயமாக அறிந்திருந்தால் - சாத்யகி கவர்வதற்கு முன்பே அது அனேகமாக நடக்கும் என்பதை யூகித்திருந்தால் - மணியை அவனிடம் போகவே விட்டிருக்கமாட்டான், சாத்யகியை மணிக்காக போரிடவே அனுப்பி இருக்க மாட்டான். சாத்யகியின் கதியே இதுதான் என்றால் கிருதவர்மனை அனுப்ப வாய்ப்பே இல்லை, சியமந்தகத்தை உரைகல்லாக பயன்படுத்தினால் யாரும் வெல்வது அரிது என்பதை உணர்ந்தவன் செய்கைகளாக இவை இருக்க முடியாது. கண்ணன் வைரத்தை வைத்து வைரத்தை விட மட்டுமே ஒரு மாற்று உறுதி குறைந்தவற்றை அறுத்துப் பார்ப்பது போல இந்தச் செயல்கள் இருக்கின்றன. அதுவே சாத்யகியால் இந்தத் தேர்வை வெல்ல முடிந்திருந்தால், உரைகல் என்ற வாதத்துக்கு அது தர்க்கரீதியாக வலு சேர்த்திருக்கும் என்று எண்ணுகிறேன். கண்ணனுடைய ஆளுமையில் இப்போது ஒரு character inconsistency தெரிகிறது...விந்தானுவிந்தர்கள் மித்ரவிந்தையின் சகோதரர்கள் என்பது எனக்கு இது வரை தெரியாது. அவர்கள் போரில் அர்ஜுனன் கையால் இறப்பது ஒரு aha moment!அன்புடன்ஆர்வி
அன்புள்ள ஆர்வி
காவிய அழகியல் என முடிவுசெய்தபின் கதைச்சுவாரசியம் போன்றவை ஒரு பொருட்டே அல்ல. ஒருவாசிப்பில் ஒருவருக்கு கூடுதலாக அல்லது மிகையாகத்தெரிகிறது என்பது அளவுகோலும் அல்ல. தொடராக வாசிக்கையில் தோன்றுவது நூலாக வாசிக்கையில் தோன்றாமலிருக்கலாம். முதல் வாசிப்பில் தேவையில்லை எனத் தோன்றுவது பின்னர் இன்றியமையாதது எனத் தோன்றலாம். இது தன் வடிவ முழுமையை மட்டுமே கருத்தில்கொள்கிறது. பல்லாயிரம் வாசிப்புகளை பலவருடங்கள் பெறப்போகிறது. ஒரு வாசிப்பு அதற்கான அளவுகோலாகுமா என்ன
கிருஷ்ணனை நீங்கள் ஒரு மேனேஜர் என்ற அளவில்மட்டும் அளக்கிறீர்கள்
ஜெ.