என்னை யாராவது அழகில் எது சிறந்தது ஆணுடலா அல்லது பெண்ணுடலா எனக் கேட்டால் உடனே பெண்ணுடல்தான் என்று சொல்லிவிடுவேன். இலக்கியங்களில் எப்போதும் பெண்ணுடல்தான் வர்ணிக்கப்படுகிறது. அதற்காக பலநூறு வரிகள், பலநூறு வர்ணனைகள், பலநூறு உவமைகள் என இலக்கியங்களில் கொட்டிக்கிடக்கின்றன. எவ்வளவு எழுதப்பட்டாலும் இன்னும் பேரார்வத்துடன் வர்ணிக்கப்படுகின்றன. அவற்றை வாசகர்கள் சலிக்காமல் படித்து ரசிக்கின்றனர். ஆணுடல் பற்றிய வர்ணனை என்றால் தடந்தோள் வீரன், மூங்கில்போன்ற தோள்கள், பரந்த மார்பு, நீண்ட கைகள் என ஒரு சில வரிகள்தான் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆகவே நான் அத்தகைய கருத்துகொண்டிருப்பது இயல்பாகத்தான் எனத்தோன்றுகிறது.
ஆனால் சற்று யோசித்துப்பார்த்தால் இந்த இலக்கியத்தில் இவ்வாறு எழுதியவர்களில், அதைப் படிப்பவர்களில் மிகப் பெரும்பான்மையினர் ஆண்கள். நாம் அழகில் சிறந்தது ஆணுடலா பெண்ணுடலா என்பதை ஆண்களின் கண்ணோட்டத்தில் இருந்து பதில் சொல்வது எந்தளவுக்கு சரியென்று தோன்றவில்லை. நாம் ஆண் என்பதை முற்றிலும் மறந்து, கண்ணிலிருக்கும் காமத்தை முழுதும் தவிர்த்து, மோகத்தை சிந்தையிலிருந்து மொத்தமாய் நீக்கி அல்லவா இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்?
குழந்தையில் ஆண்பெண் என வேறுபாடில்லாமல் அழகை காண்கிறோம். ஆடை அணிகலன்கள், ஒப்பனைகள் மூலமே ஆண்பெண் குழந்தைகளை வேறுபடுத்திக்கொள்கிறோம். பின்னர் குழந்தைகள் வளர வளர உடலமைப்பில் வேறுபடுகின்றன. ஆனால் ஆண்பிள்ளைகள் தான் பெருமளவில் வேறுபடுகின்றனர். பெண்கள் முகம் கை கால்கள் அதே மென்மை, அதே செழுமை, அதே வடிவமைப்பு என அதிக மாற்றமில்லாமல் இருக்கிறார்கள். பெண்கள் தொன்னூறு சதவீதம் உடலில் குரலில், பாவனையில் குழந்தைமையை தக்கவைத்துக்கொள்கிறார்கள். ஆகவே குழந்தையழகிலிருந்து சிற்சில மாற்றங்களை மற்றும் கொண்டு பெண்மையழகில் பொலிகிறார்கள்.
ஆண்கள் அப்படியல்ல. அவர்கள் நரம்புகள் வெளித்தெரிய உடல் தசைகள் இறுகி, கன்னங்கள் மெலிந்து, அடையும் உருமாற்றம் பெரியது. கை கால்களில் குதிரையைப்போன்ற முறுக்கேறிய வல்லமைகொன்ட தசைகள். நேர் கொண்ட கூரிய விழிகள். அரிதாக புன்னகைக்கும் இறுகிய உதடுகள், உறுதியைக்காட்டும் உடலமைப்பு என ஆண்களின் அழகு விரிகிறது.அந்த ஆணழகை வெளிக்கொணரும் வண்ணம் ஓவியம் வரைவதும் சிற்பம் வடிப்பதும் கடினமானது. அதே நேரத்தில் மென்மையாகவும் விண்ணெனஇழுத்துக்கட்டிய தோலோடு(நன்றி ஜானகிராமன்) இருக்கும் பெண்களை வரைவது எளிது சிற்பம் செய்வதுகூட எளிது.இதையெல்லாம் ஒருவர் கணக்கில்கொண்டு ஆணழகே சிறந்தது எனச்சொல்லலாம். எப்படியிருப்பினும் அதிகம் சொல்லப்படாததனால ஆணழகை குறைத்து மதிப்பிட முடியாது.
இலக்கியத்தில் இதுவரை ஆணழகை குறைத்து சொல்லப்பட்டதை சரிகட்டுவதுபோல வெண்முரசில் ஆணழகு அவ்வப்போது எழுத்தில் வடிக்கப்படுகிறது. திருதராஷ்டிரன், பீமன், துரியோதனன் என்ற பலம் வாய்ந்த உடல்கள், தேவ விரதன், கண்னன், கர்ணன், அர்ச்சுனன் என முழுமை பொருந்திய உடல்கள் என பல வர்ணிப்புகள் மிக அருமையாக கூறப்பட்டுள்ளன. வெண்முரசில் இன்றைய ஆணழகு விவரிப்பும் மிக அருமையாக வந்திருக்கிறது.
சசாங்கர் எப்போதும் என அவன் முன் நின்று அவ்வுடலை தன் விழிகளால் மீள மீள உழிந்தார். நிகரற்ற பேருடல். முழுமையின் அழகு. பிறந்திறந்த பல கோடி உடல்கள் கொண்ட கனவின் நனவாக்கம். ஒவ்வொரு தசையும் எவ்வண்ணம் இருக்க வேண்டும் என்று அவர் கற்ற நூல்கள் சொல்லுமோ அவ்வண்ணமே இருந்தது. உறை பிளந்தெடுத்த காராமணியின் உயிர்ப் பளபளப்பு. நகங்கள் கரிய சிப்பி ஓடுகளின் ஒளி கொண்டவை.
தன் முன் முழுதணிக்கோலம் பூண்டு ஒளிபெற்று திரண்டு வந்த கர்ணனை நோக்கியபடி சிவதர் விழிவிரித்து நின்றார். இருண்ட வானில் முகில் கணங்கள் பொன்னணிந்து சிவந்து சுழல் கொண்டு புலரி என ஆவது போல!
ஒவ்வொரு அணியும் அவன் உடலில் அமைந்து முழுமைகொண்டது. சொல்லுக்குப் பொருளென தன்னை அணிக்கு அமைத்தது அவன் உடல். என்றோ ஏதோ பொற்சிற்பியின் கனவிலெழுந்த அவன் உடல் கண்டு அவை மண்நிகழ்ந்தன போலும் என்று எண்ணச்செய்தது அவற்றின் அமைவு. (வெய்யோன் -5)
தண்டபாணி துரைவேல்