அன்புள்ள ஜெ
இப்பொழுதெல்லாம் - வெண்முரசு படிக்க பயமாக
உள்ளது. தருமன் மற்றும் திரௌபதியின் வீழ்ச்சியை படிக்க மனம் அஞ்சுகிறது.
முன்ன வெய்யோனில், துரியோதனுக்காக - அவன் படைப்பு போகும் அவமானத்திற்கு
மனம் அஞ்சியது.
எப்படி ஒன்றின் பின் ஒன்றாக ஒரு
பெரு வீழ்ச்சி நிகழ்கிறது என்பதும் - தருமன் தன்னை இழந்த பின் பதட்டம்
அடைவதும். அதன் பின் வரும் அபத்தங்களும் ஒரு புதிய பரிமாணங்களை
பெருக்குகிறது.
ஒரு விதத்தில் சகுனி, போரைத்
தவிர்த்து, துரியோதனனுக்கு அனைத்தும் வென்றளிக்கிறார். துரியோதனன்
அறம் மீறாமலிருந்தால், அது பாண்டவர்களை அதல பாதாளத்தில் தள்ளி இருக்குமோ?
ஊசலை மறுபுறம் வேகமாக தள்ளுவது போல, விதியன்றோ துரியோதனனை வடிவமைக்கிறது.
தருமத்தின் வாழ்வதனை சூது கவ்வும் ; தருமம் மறுபடியும் வெல்லும் - என்பது ஒளி வடிவ கருத்து போலும் - எனில் இதன் இருள் வடிவம் என்ன?
தருமத்தின் வெண்மையில் அதர்மம் கருக்கும் - அதர்மத்தின் அடர் இருளில் தர்மம் துளிர்க்கும் (yin - yang வடிவம்),
மனதில் ஓடிக் கொண்டே இருக்கிறது. நிலை கொள்ளாமல் இருக்கிறது. அது உங்கள் எழுத்தின் அரிய சக்தி என்று தோன்றுகிறது
அன்புடன்
முரளி