இனிய ஜெயம்
உளமயக்குகளால் நிறைந்த பகுதி
//“அவை ஒன்றை பிறிது நிகர்செய்தன. இறப்பை மறுபிறப்பு. நோயை மீட்பு. வலியை இன்பம். நாகங்களை இடியின் தெய்வம் ஆண்டது. இடியை மழை மூடியது. எவரையும் எவரும் வென்று அழிக்கவியலாது என்பதனால் அப்போர் கணந்தோறும் முடிவில்லாமல் நிகழ்ந்தது. கணுவிடை குன்றாமல் கூடாமல். நோக்குக, இறப்பில்லை. வெற்றிதோல்வியும் இல்லை. கொள்வதும் கொடுப்பதும் இல்லை. ஆகவே அது வஞ்சம் மட்டுமே. பிறிதொன்றென உருமாற்றப்பட்ட வஞ்சங்களையே மானுடர் அறிவர். வஞ்சம் வஞ்சமென்றே நின்றிருப்பது தெய்வங்களிடம் மட்டுமே. மிகமிகக் கூரிய ஊசிமுனைபோன்ற வஞ்சம். அந்த அச்சத்தை நான் எப்படி உனக்கு விளக்குவேன்… சஞ்சயா, அந்த வஞ்சத்தைக் கண்டவனுக்கு இவ்வுலகில் அனைத்துமே இனிதென்றாகிவிடும். இங்குள்ள அனைத்துமே பொருள்கொண்டவை என தோன்றிவிடும்… ஆம்!”//
இவை நிகர்வாழ்வில் அறிந்து உரைப்பதா ? அல்லது சஞ்சயனின் அதிகாலைக் கனவில் வரும் திருதா வெளிப்படுத்தும் மெய்மையா ?
காரணம் மொத்தக் களத்திலும் திருதாவின் இந்த கூற்றை ,மெய்மையாக அறிந்தவன் நீலன் மட்டுமே . தெய்வங்கள் ,மானுடர் , விலங்குகள் என அனைத்தும் தங்களின் தூய வஞ்சத்தை மட்டுமே வெளிப்படுத்தும் களம் . . சமமான ஒன்று ,சமமான மற்றொன்றுடன் மோதி ,வேறு விதமான சமன் கொண்டு அமையுமே அன்றி இக் களத்தில் வெற்றி தோல்வி என்பதே இல்லை .
இதை அறிந்தவன் நீலன் .ஆகவேதான் சொல்கிறான் ,எல்லா வஞ்சங்களும் எனது வஞ்சங்களே . எல்லா வஞ்சங்களையும் தனதென்றே அறிந்த நீலனுக்கு இவ்வுலகில் எல்லாம் இனிமை கொண்ட ,பொருள் கொண்ட ஒன்றே .
எல்லா வஞ்சங்களும் அவனுடையது என்பதால்தான் ,அம்பையின் பொருட்டு , குலமகள் அவமதிக்கப்பட்ட சபையில் ,வாளாவிருந்ததன் பொருட்டு பீஷ்மருக்கு எதிராக நீலன் படைக்கலாம் ஏந்துகிறான் .
ஆம் நீலன் அதன் மறுநாள் சபையில் சொன்னது மிக சரி . அந்தப் போரை அவனுடையதாக எண்ணி இருந்தால் அன்று மாலை அணைவதற்குள் அவனது போர்க்களத்தை பிணங்களின் மலை கொண்டு மூடி இருப்பான் . அவன் சொல்லாதது வேறு ஒன்று உண்டு . பீஷ்மர் சிரத்தை எந்த புன்னகை குறையாமல் கொய்து எறிகிறானோ ,அதே புன்னகை சற்றும் குறையாமல் அபிமன்யுவின் தலையையும் கொய்து எறிந்து விட்டே இந்த போரை நிறைவு செய்வான் . ஆம் நீலன் ஆயுதம் தொடாத போரில் ,தூய வஞ்சங்கள் மோதி ,முயங்கி ,இறுதியில் எது எஞ்சுமோ , [இது நீலனின் போராக இருந்திருந்தால் ] அதை மட்டுமே விட்டு வைத்திருப்பான் .
இங்கே எல்லா வஞ்சங்களும் நீலன் கொண்ட வஞ்சமே . மறு முனையில் இக்களத்தில் ஒவ்வொருவரும் ஏந்தி நிற்பது நீலன் கொண்ட வஞ்சமே . முற்றிலும் நிகர் ஆற்றல்கள் மோதி நிற்க என்ன எஞ்சும் ? எதுவுமே எஞ்சாது . அப்படி எஞ்சாமல் போக ஒரு அறம் துணை நிற்கும் என்றால் , அம்பையின் பொருட்டு ,திரௌபதியின் பொருட்டு அந்த அறம் அழியட்டும் . ஆகவேதான் சொல்கிறான் நீலன் .வீரனை வெற்றிதான் உருவாக்குகிறதே அன்றி ,அறம் அல்ல . முற்றிலும் நிகர் கொண்ட ஆற்றல்களில் ஒன்று சரிய வேண்டும் என்றால் ,அதன் எதிர்ஆற்றலை சமம் எனும் நிலயில் இருந்து சற்றே ஆற்றல் உயர்த்த வேண்டும் . அப்படி அர்ஜுனனின் ஆற்றலை சமம் என்ற பொறியில் சென்று தளைக்கும் கண்ணி அறம் . காண்டீபத்தைக் காட்டிலும் அர்ஜுனன் இறுக்கப் பற்றி இருக்கும் அறம் , அன்று சபையில் பீஷ்மரை ,துரியனை ,கர்ணனை கைவிட்டது ஏன் ? அன்று அவர்கள் கைவிட்ட அறத்தை , அதன் சமன் கொண்ட மறுதலையாக இன்று அர்ஜுனன் கைவிட வேண்டும் . ஆம் இது அறங்கள் மோதிக்கொள்ளும் களம் மட்டுமல்ல ,கைவிடப்பட்ட அறங்களின் வஞ்சங்களும் மோதிக்கொள்ள வேண்டிய இடம் .
ஆகவேதான் நீலன் சொல்கிறான் .
பார்த்தா அனைத்து அறங்களையும் கைவிடுக்க என்னையே சரணடைக .
கடலூர் சீனு