Wednesday, January 15, 2020

வெண்முரசு- தேவை புதியவாசிப்பு- ஆர்.பாஸ்கர்

 

வெண்முரசை வாசிக்கும்போது ஒன்று தோன்றிக்கொண்டே இருந்தது, அதை வாசிக்க ஒரு குறிப்பிட்ட மனப்பயிற்சி தேவையாகிறது. எல்லா படைப்பையும் வாசிப்பதற்கு அதற்கான மனப்பயிற்சி தேவை. ஆனால் வெண்முரசு, கொற்றவை போன்றவற்றை வாசிப்பதற்கு தனிச்சிறப்பான ஒரு மனநிலையை உருவாக்கிக்கொள்ளவேண்டியிருக்கிறது.

நாம் நவீன இலக்கியத்தை ஒரு குறிப்பிட்டவகையிலே வாசிப்பதற்கான பழக்கத்தைக் கொண்டிருக்கிறோம்.அதை ஒருவகையான கிரிட்டிக்கல் ரீடிங் என்று சொல்லலாம். அதை நாம் ஒரு அடல்ட் ரீடிங் என்று சொல்லிக்கொள்ளலாம். அந்த வாசிப்புக்கு நாம் நம் வகையில் இதுவரையான இலக்கியப்படைப்புக்களால் பயிற்சியளிக்கப்பட்டிருக்கிறோம்.

நான் அந்தவகையான பயிற்சி கொண்ட வாசகன். ஆங்கிலம் வழியாக நிறைய வாசித்துக்கொண்டிருந்தவன் பிந்தித்தான் தமிழில் வாசிக்க ஆரம்பித்தேன். தமிழிலும் சமகால இலக்கியத்திலிருந்து பின்னால் சென்று புதுமைப்பித்தன் வாசித்தேன். கம்பராமாயணமெல்லாம் இப்போது வாசிக்கிறேன். எனக்கு என்ன சிக்கலிருந்தது என்று மட்டும் சொல்கிறேன்.

எனக்கிருந்தது மூன்று பிரச்சினைகள். முதல் பிரச்சினை படைப்பிலக்கியத்தின் அடிப்படை ஒரு ஹ்யூமன் கிரைஸிஸ் என்று நம்புவது. ஒரு படைப்பை வாசிக்க ஆரம்பிக்கும்போதே அந்த கிரைஸிஸ் என்ன என்று தேட ஆரம்பிப்பது, கூடியவிரைவில் அதைச் சென்று அடைவது. அதன்பிறகு அந்தப்படைப்பில் அந்த கிரைஸிஸை மட்டுமே வாசிப்பது. அந்த மையத்திலிருந்து விலகுவதெல்லாமே தேவையற்றது என்று பொறுமையிழப்பது

இரண்டாவதாக எனக்கிருந்த பிரச்சினையை நான் இப்போதுதான் கண்டுபிடித்தேன். நான் வாசிக்கும் படைப்புகளிலே உள்ள அந்த ஹ்யூமன் கிரைஸிஸ் தனிநபர்களில் நிகழ்வதைத்தான் நான் கற்பனைசெய்கிறேன். அதாவது அது தனிநபர் சார்ந்ததாகவே எனக்கு இருக்கிறது. அந்த பிரச்சினையை கலாச்சாரத்திலோ வரலாற்றிலோ வைத்து நான் பார்த்ததில்லை. அந்த தனிநபர் ஒரு individual ஆக நிர்ணயம் செய்யப்பட்டவர். அவர் ஒரு சரித்திரப்பின்னணியிலே இல்லை. ஒரு கலாச்சாரப் பின்னணியிலும் இல்லை

இது ஏன் என்று யோசித்தேன். நான் காலேஜில் படிக்கும்போது படித்த முதல் முக்கியமான நூல் அட்லஸ் ஷ்ரக்ட். அயன்ராண்ட் தான் என் தொடக்கம். அதன்பிறகு வாசித்த எல்லா நாவல்களுமே அமெரிக்கா, ஐரோப்பா பின்னணி கொண்டவை. அவற்றின் பண்பாட்டுச்சிக்கல்கள் எனக்கு அன்னியமானவை. சரித்திரம்மீதும் அக்கறையில்லை. நான் அந்நாவல்களின் கதாபாத்திரங்களை வெறும் தனிநபர்களாக நிறுத்தித்தான் வாசித்தேன். அந்த தனிநபர்களுடன் என்னை நான் இணைத்துக்கொண்டு வாசித்தேன்

இந்த வாசிப்புக்கு நான் பழகிப்போயிருந்தேன். என் தலைமுறையில் பெரும்பாலும் அத்தனை வாசகர்களும் அப்படித்தான். என் தலைமுறைவாசகர்களில் பழைய இலக்கியங்களிலோ மதத்திலோ வரலாற்றாய்விலோ ஈடுபாடு கொண்டவர்களை நான் பார்த்ததே இல்லை.ஆகவே நாங்கள் Contemporary crisis என்று நினைப்பது தனிநபரின் சிக்கலை மட்டுமே. இந்த வாசிப்புக்குப் பழகாத இன்றைய இளைஞர்கள் இருப்பார்களா என்று சந்தேகம்தான்
 
இந்த கிரைஸிஸ் என்னவாக இருக்கிறது என்பது ஆளுக்காள் மாறுபடுகிறது. சிலருக்கு இந்தக் கிரைஸிஸ் என்பது மனித உறவுகளைப் பற்றிய உணர்ச்சிபூர்வமான விஷயங்களாக உள்ளது. சிலருக்கு இது அடையாளச்சிக்கல் மாதிரி தத்துவார்த்தமானதாக உள்ளது. ஆனால் தனிநபர் சார்ந்த பிரச்சினைதான்.
 
மூன்றாவது பிரச்சினை ஒரு படைப்புடன் பேசிக்கொண்டே படிப்பது.
 argumentative reading என்று நான் அதை சொல்வேன். இந்த வாசிப்பு சமகாலத்தில் மிகவும் ஊக்குவிக்கப்படுகிறது. இது அறிவார்ந்த வாசிப்பு என சொல்லப்படுகிறது. போஸ்ட்மாட்ர்ன் காலகட்டத்தின் வாசிப்பு இது. இதில் ஒரு மறைமுக மகிழ்ச்சிதான் உள்ளது. நம்மை நாம் நூலின் ஆசிரியருக்குச் சமானமாக நிறுத்திக்கொள்கிறோம். அவரை விவாதத்திற்கு இழுத்தபடியே இருக்கிறோம்
 
இன்றைய நவீன இலக்கியத்திலுள்ள பெரும்பாலான நாவல்களுக்கு இந்தவாசிப்புதான் சரிவரும். இந்தவகையான வாசகர்களை எதிர்பார்த்து இன்றைய நாவலாசிரியர்கள் அவர்களின் டெக்ஸ்டை மிகவும் சிடுக்கானதாக ஆக்கிக்கொள்கிறார்கள். புதிர்போல மாற்றிக்கொள்கிறார்கள். வாசகன் வழிதவறிவிளையாட விடுகிறார்கள். நன்றாக மூளையை முட்டிக்கொண்டால் ஒரு நிறைவு ஏற்படுகிறது. இந்த சிடுக்கையே ஆழம் என்று நினைத்துக்கொள்கிறார்கள்
 
ஏராளமான கிராஸ் ரெஃபரன்ஸ்கள் வழியாகவும் சில ஆசிரியர்கள் டெக்ஸ்டை சிக்கலானதாக ஆக்கிக்கொள்கிறார்கள்.அவற்றை வாசிக்கவே முடியாமலாக்கிக்கொள்கிறார்கள். வாசகனுக்குச் சவால்விடும் படைப்புககள் அவை என்று சொல்லப்படுகின்றன. சமகால அமெரிக்க இலக்கியப்படைப்புக்களின் வழிமுறை இதுதான்
 
இந்த மூன்று அடிப்படைகளுமே வெண்முரசு போன்ற நாவல்களை வாசிப்பதற்குத் தடையாக அமைகின்றன. வெண்முரசை வாசிக்க கொஞ்சம் நவீன இலக்கியம் வாசித்தவர்களுக்கு தடைகள் இருப்பது இதனால்தான். எனக்கே அந்தச் சிக்கலிருந்தது.
 
உதாரணமாக வெண்முரசிலே விரிவான நிலக்காட்சிவர்ணனைகள் வருகின்றன. நான் முதலில் வாசிக்கும்போது அவற்றை வாசிக்க சலிப்பு ஏற்பட்டது. குறியீடோ அல்லது புதிரோ இல்லாமல் வெறும்நிலக்காட்சிகளை வாசிக்கமுடியவில்லை. அதேபோல கதாபாத்திரங்களின் சகஜமான உரையாடல்கள் வாசிக்கையிலும் சலிப்பு வந்தது.
 
மேலும், உணர்ச்சிகளை நேரடியாகச் சொல்லுமிடங்களில் பெரிய தடை இருந்தது எனக்கு. ஏன் சொல்லவேண்டும், அவற்றை அப்படியே விட்டுவிடலாமே என்ற எண்ணம் இருந்தது. அவை வாசகனால் அடையப்படவேண்டியவை என்று நினைத்தேன். நவீன்நாவல்களில் உணர்ச்சிகளைச் சொல்லும் வழக்கம் இல்லை.
 
ஆனால் வெண்முரசு ஒரு கிளாஸிக் படைப்பு. இந்திய கிளாஸிஸத்தை அது திரும்ப எழுதுகிறது. கிளாஸிஸத்தின் எல்லா அம்சங்களும் அதில் வந்துகொண்டுதான் இருக்கும் என்ற அறிதல் வர ஒருவருஷம் வெண்முரசை தொடர்ந்து படிக்க நேர்ந்தது.
 
அதைவிட முக்கியமான ஓர் அறிதல் உண்டு. ஓராண்டுக்குப்பின் நான் வெண்முரசை நினைவுகூர்ந்தபோது மழைப்பாடலில் வரும் நிலவர்ணனைகள்தான் நினைவில் நின்றன. மொத்த நாவலும் அந்த நிலங்களில் நிகழ்ந்தது என்று தெரிந்தது. அந்நிலங்கள் இல்லாமல் வெண்முரசின் மனிதக்கதையே இல்லை. அந்த நிலங்களிலிருந்து இன்றைக்குவரை வெளியே வரமுடிந்ததில்லை. 208ல் லீவு போட்டுவிட்டுவந்து அந்த நிலங்களில் பயணம்செய்தேன்.
 
அதைப்போல அந்நாவலிலுள்ள உரையாடல்கள். வெய்யோன் நாவலில் கர்ணன் தன் அம்மாவான ராதையிடமிருந்து விலகுமிடம் வெறும் உரையாடலாகவே உள்ளது. அதிலுள்ள நுட்பம் முழுக்க அந்த உரையாடலுக்கு பின்னாலுள்ள உணர்வுகள் ஊகத்துக்கு விடப்பட்டிருக்கிறது என்பதிலேதான். கர்ணன் அம்மாவிடமிருந்த உறவில் ஓர் உடைவு நடைபெறுகிறது. அது வெளியே தெரியாமலேயே நடைபெறுகிறது
 
அதை வாசித்தகாலத்தை விட பிறகுதான் அந்த இடம் பெரிதாகியது. எந்த மனிதரிடமும் நமக்கு ஓர் உள்ளே உடைவு நடைபெறும். அந்த இடம் மிகமுக்கியமானது. அந்த இடத்தை அப்படி உரையாடலிலேயே சொல்லமுடியும். பூரிசிரவஸ் தன் காதலிகளை மீண்டும் சந்திக்கும் இடத்திலுள்ள உரையாடலும் அப்படித்தான்
 
அதன்பிறகுதான் சப்டெக்ஸ்ட் என்பது புதிர்விளையாட்டு அல்ல என்று எனக்குத்தெரிந்தது. அது இந்த இடங்களில் சொல்லப்படாமல் வெளியே இருக்கும் வாழ்க்கையை உணர்ந்துகொள்வதுதான். பூரிசிரவஸின் காதலிகளுக்கு திருமணமானதுமே பூரிசிரவஸ் சிறியவனாக ஆகிறான். ஏன் அப்படி ஆகிறான் என்று உணர்வதுதான் சப்டெக்ஸ்ட் வாசிப்பு. எனக்கு அது தெரிந்தும்தெரியாமலும்தான் உள்ளது
 
உணர்ச்சிகளைச் சொல்லும் இடங்களும் சொல்லாத இடங்களும் வெண்முரசிலே உள்ளன. சொல்லாத இடங்களே மிகுதி. சொல்லும் இடங்களில்தான் மொழியின் அழகு நிகழ்கிறது. நவீனமொழியில் அந்த அழகு வராது. அது இமேஜரிகளானால ஒரு கிளாஸிக் அழகு. விதுரர் ‘சர்வ கல்வித’ மந்திரத்தை பைத்தியம்போல சொல்லும் இடத்தை இன்றைக்கு மீண்டும் வாசிக்கிறபோதும் அதே பரவசம் ஏற்படுகிறது
 
ஆனால் இதெல்லாம் சிறிய தடைகள். பெரிய தடை உண்மையான பண்பாட்டுப்பிரச்சினைகளை அடையாளம் கண்டு அதைக்கொண்டு நாவலை வாசிப்பது. ஒரு கடிதத்திலே நீங்கள் எழுதினீர்கள்.  தமிழகக்கோயில்களிலே ஆகமமுறை புகுந்ததைப் பற்றி ஒரு நாவல் எழுதப்பட்டால் அதை எப்படி வாசிக்கவேண்டும் என்று. அதுதான் என் திறப்பு. வெண்முரசை வாசிக்க எனக்கு பெரியதடையாக இருந்தது அந்தவகையான புரிதலே இல்லை என்பது. வெண்முரசு வேதம் என்றால் என்ன, அது அசுரர்களை ஏன் தேவர்களாக ஆக்கிக்கொண்டது, ஆதிவேதங்கள் என்ன என்றெல்லாம் பேசி வேதத்தில் வந்த மாபெரும் மாற்றத்தைப் பற்றி ஒரு தீஸிஸை முன்வைக்கிறது. பல ஆயிரம் பக்கங்களிலே இதைப்பற்றிப் பேசுகிறது.
 
இதற்கான வரலாற்றுப்பின்னணியையும் சமூகப்பின்னணியையும் பேசுகிறது. அதை மொத்தமாக புரிந்துகொள்ள பெரியதடையாக இருப்பது பெர்சனல் கிரைஸிஸை தேடுவதுதான். அதிலிருந்து வெளியே வந்து வாசிக்கும்போதுதான் உண்மையான நாவலையே அணுகமுடிகிறது. இந்திரநீலத்தில் எட்டு தேவியர் அந்த பின்னணியிலேதான் அர்த்தமாகிறார்கள். ஒரு கல்சுரல் கிரைஸிஸ் எப்படி நாவலாகும் என்று வெண்முரசு காட்டியது. அல்லது ஒரு ஹிஸ்டாரிக்கல் கிரைஸிஸ். அதற்கு வந்துசேர ஒரு நவீனநாவலின் வாசகன் கொஞ்சம் பயணம் செய்யவேண்டும்
 
கூடவே கொஞ்சம் பின்னணிவாசிப்பும் தேவை. உங்களுக்குப் பிடிக்காது, ஆனால் எனக்கு அந்த வாசிப்புக்கு மிக உதவியாக இருந்தது வெண்டி டேனிகரின் 
The Hindus: An Alternative History. சரசரவென்று வாசிக்கத்தக்க நூல் அது. மிகச்சிக்கலான நூல்களையெல்லாம் இதற்காக வாசிக்கமுடியாது. ஆனால் ஒரு பெரிய புரிதலை அது தந்தது. வருணன் அசுரனாக இருந்து தேவனாகியது, இந்திரனின் குணாதிசயங்கள், அவை அர்ஜுனனுடன் இணைந்தது எல்லாமே அதன்வழியாகவே புரிந்தன. கிருஷ்ணன் வருணனை வென்று துவாரகையை அமைக்கும் இடத்தின் சிம்பலிசத்தை அதன்பிறகுதான் புரிந்துகொள்ளமுடிந்தது
 
வழக்கமான நவீன வாசகன் அவனுடைய பழகிப்போன வாசிப்பை கொண்டுவந்து வெண்முரசு போன்ற ஒரு புதியநிகழ்வின்மேல் போட்டால் அவனுக்குத்தான் இழப்பு. நான் நவீனவாசகன் என்ரு சொல்லி நாலைந்து ஐரோப்பிய நாவல்களைச் சுட்டிக்காட்டிவிட்டு போகலாம். ஆனால் நல்ல வாசகன் ஒவ்வொரு நூலுக்காகவும் தன்னை உருவம் மாற்றிக்கொள்வான் என்று நான் நினைக்கிறேன்

 

வெண்முரசு போன்ற நாவல்களை வாசிக்கையில் நமக்கு இறுக்கமான வாசகநிபந்தனைகள் இருக்கக்கூடாது. படைப்பு இப்படி இருக்கவேண்டும் என்ற எண்ணங்களை நாம் தவிர்க்கவேண்டும். படைப்புக்கு நம்மை கொடுக்கமுடியவேண்டும். என் அனுபவம் என்னவென்றால் ஒரு இன்னொசெண்ட் ரீடிங் இந்த வகையான நாவல்களுக்கு தேவை. நம் அறிவால் அதை தடுத்துக்கொண்டு நிற்கக்கூடாது. அந்த வாசிப்பு நம்முடைய விர்ச்சுவல் ரியாலிட்டியாக ஆக அனுமதிக்கவேண்டும். அது நமக்குள் போய் பதியவும் நம் கனவில் ஊடுருவவும் இடமளிக்கவேண்டும்

 

அப்படி இடமளித்தால் பல இடங்கள் நமக்குள் மெரிய மெட்டஃபர்களாக மாறுவது என் அனுபவம். வாரணவதம் எரிப்பு, ஜராசந்தன் ஒரு மழையிலே கொல்லப்படுவது எல்லாமே ஆர்க்கிடைப்பல் அனுபவங்களாக மாறி ஒரு ஜ்வரம் போல உள்ளே சென்றுவிட்டன. சில இடங்களில் கொஞ்சம் சாகசநாவல். சில இடங்களில் ஒரு வகையான குழந்தைக்கதை. சில இடங்களில் விளையாட்டுத்தனமான கதை. சில இடங்களில் நேரடியாகவே தத்துவம். வெண்முரசை வாசிக்க வாசகன் தன்னை தகுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். எந்தப்பெரிய படைப்பும் அந்தப் பயிற்சியை வாசகனிடம் கேட்கிறது