Thursday, October 30, 2014

பாரதத்தை வாசிப்பது

 
 
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,


இனிய காலை வணக்கம். நலம் தானே. வெண்முரசு துவங்கிய தினத்தில் இருந்தே படித்துக் கொண்டு தான் இருந்தேன். எதிர்பாராத விதமாக தொடர இயலாமல் போய் விட்டது, நீங்கள் "முதற்க்கனல்" முடித்து "மழைப்பாடல்" , "வண்ணக்கடல்" "நீலம்"  "பிரயாகை" என வேகமாக சென்று கொண்டு இருக்கிறீர்கள். நான் இப்போது தான் வண்ணக் கடலில் 50வது அத்தியாயமே முடித்து இருக்கிறேன்.

இதுவரை படித்ததை பற்றி ஒரு கடிதமேனும் எழுத நினைத்து நினைத்து மனதிற்குள்ளேயே அழித்ததே மிச்சம். ஆனால் மற்றவர்கள் எழுதும் அனைத்துக் கடிதங்களையும் தவறாமல்  படிக்கிறேன். ஒரே எழுத்து விஜயனின் அம்பு போல எத்துனை ஆழமாக ஒவ்வொரு மனதையும் தைக்கிறது என்று புரிகையில் எனக்கு என்ன புரிந்தது என்று யோசிக்கிறேன். மீண்டும் முதலில் இருந்து வாசிக்கலாமா என்று யோசித்தால் முதல் வாசிப்பில் உங்களை முழுமையாக அடைவதற்கே இன்னும் நீண்டும் தூரம் செல்ல வேண்டி இருக்கையில் மீள் வாசிப்பை சற்று காத்திருப்போர் பட்டியலில் வைத்து விட்டு  தொடர்ந்து வாசிக்கிறேன்.

ஒவ்வொரு அத்தியாயத்தையும் படித்த பின் அதன் சாரமாக மனதிற்குள் வெறும் கதை மட்டுமே எஞ்சி இருப்பதை நினைக்கையில் அதன் நுட்பங்களை நினைவில் கொள்ள முடியவில்லையே என்று நினைக்கையில்  இன்னும் அதிக உழைப்பு என்னிடம் தேவைப் படுகிறது என்பது புரிகிறது. வேகமாய் படித்து முடிப்பதை விட இன்னும் நுட்பமாக வாசிக்க வேண்டும் என்று முடிவு செய்து இன்னும் நிதானமாக்கி இருக்கிறேன் என்னுடைய வாசிப்பின் வேகத்தினை .

இருந்தாலும் இதுவரை படித்ததை மொத்தமாக எண்ணிப் பார்த்தால் இது வரை நான் கற்றவைகளின் உச்சமாக  "வெண்முரசினை" என்னால் நிச்சயமாக சொல்ல முடியும். உள்ளத்தில் எப்போதோ எழுந்த கேள்விகளுக்கு எல்லாம் விடை கிடைப்பது போலத் தோன்றுகிறது. எனக்கு புரிந்ததாய் நினைத்தவை எல்லாம் கேள்வியே தவறு  என்று நினைக்க வைத்து உள்ளது. எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் ஒவ்வொரு அத்தியாயமும் எனக்குள் எதையோ விரித்துக் கொண்டே செல்கிறது. ஆழமான எதை ஒன்றையோ நோக்கி செல்கிறேன் என்பது புரிகிறது. ஆனால் எங்கே இருக்கிறேன் என்பதே புரியாத போது எங்கே போகிறேன் என்பது மட்டும் புரிந்து விடப் போகிறதா என்ன? எத்துனை அகச் சிக்கல்களை இந்த வாசிப்பு ஏற்படுத்தினாலும் விட்டு விடலாம் என்று தோணாமல் இருப்பதை நானே ஆச்சர்யமாகத் தான்  பார்க்கிறேன்.

கதை, கதாபாத்திரங்கள், சிக்கல்கள் எல்லாம் தாண்டி நான் வாழாத இன்னும் சொல்லப் போனால் முழுமையாக கேள்வியே படாத ஒரு உலகம் என்னை எப்போதும் கைநீட்டி அழைத்துக் கொள்கிறது இதற்குள் நுழையும் போதெல்லாம். 

இளநாகன் போல தென்திசையில் இருந்து தான் கிளம்பி இருக்கிறேன். எப்போது சேர்வேன் என்றும் தெரியாது. சேர்வேனா என்றும் தெரியாது. இருந்தாலும் நானும் ஒரு பயணி என்ற சொல்லே என்னை பெரிதும் உவகைக்கு உள்ளாக்குகிறது.

இதை சாத்தியமாக்கிய உங்களுக்கு என்னுடைய நன்றிகள். நான் சொல்லவந்ததை முழுமையாக சொல்லி முடித்தது போலவே தோன்றவில்லை இந்த வரி வரை. இருந்தாலும் உங்களின் நேரத்தை வீணடித்து விடக் கூடாது என்ற நோக்கத்தில் இத்தோடு முடித்துக் கொள்கிறேன். 
 

அன்புடன் 
பிரசன்னா 

அன்புள்ள பிரசன்னா

வெண்முரசுபோன்ற நூலை முதல் வாசிப்பிலேயே எளிதாக பிடித்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் நமக்கு நுட்பங்களை தொட்ட்செடுத்து ஆழமாக வாசிப்பது எங்குமே கற்பிக்கப்படவில்லை. நாமாகவே கற்றுக்கொள்ளத்தான் வேண்டும்

ஆகவே உங்கள் வாசிப்பின் இடர்கள் மிக இயல்பானவை. அனேகமாக அனைவரிடமும் காணக்கிடைப்பவை. தொடர் வாசிப்பு, வாசித்தவற்றை விவாதிப்பது, கடிதங்கள் விமர்சனங்கள் போன்றவற்றில் நம் வாசிப்பை ஒப்பிட்டுக்கொள்வது ஆகியவை அவசியம்

அத்துடன் வாசிப்பவற்றுக்கும் வாழ்க்கைக்குமான தொடர்பை கூர்ந்து அவதானிக்க முயல்வதும் முக்கியம். வாசிப்பது மனமமிழ்ச்சிக்காக அல்லது பொழுதுபோக்குக்காக என்ற எண்ணம் விலகி அது ஒரு வாழ்க்கை என எண்ண ஆரம்பித்தோமென்றால் மிக விரைவிலேயே இலக்கியத்தின் நுட்பங்கள் பிடிகிடைத்துவிடும்

ஜெ