[துரோணர்- காகிதவெட்டு ஓவியம்]
இதற்கு தான் காத்திருந்தேன். ஒரு அரசனின் பழைய கணக்கு எவ்விதம் தீர போகிறதென்று ..
கர்ணன் அங்க நாட்டின் அரசன் ஆகும் வரை [ களத்தில் கொண்ட அவமதிப்பு உட்பட ] ஏற்ற அனைத்து அவமானங்களும் அரசன் ஆனதால் அவை நீரினுள் சென்று விட்ட கல் என தோன்றுகிறது. கல் தெரியாது ஆனாலும் மறையாது.
துரோணரின் அவமானம் வேறு விதம்.எதையோ நம்பி மதிப்புடன் வாழ்ந்து பின் பசு வாங்க முடியாதவனாய் போனதின் வலி. பசு என்பது வெறும் ஒரு குறியீடு ... கலை கொண்டவனின் பொருள் இல்லா காலங்களின் வதை மனம் அது. ஏற்றி சென்ற எதிர்பார்ப்பு தவறா? இல்லை நட்பு கொடுத்த உரிமை தவறா ? எதுவும் செய்யாமல் வந்து விழுந்தது சூட்டு தழும்பு. கால் கடுத்து நின்று கை நிறைய வாங்கி சென்ற இவரின் அவமானம் எரிமலையின் கொதி நிலை. எரித்தபடி நின்று இன்று வெடித்தது.
ஆனால் துருபதனின் அவமதிப்பு உச்சம் என எனக்கு பட்டது. ஒவ்வொரு வார்த்தைகளும் வர்ணனைகளும் கூசி வலிக்க வைத்தது. ஏன்? ஆணவம் கொண்ட ஆண் மனம் என்பதாலா? இல்லை இவ்விதமாய் ஒன்று ஏன்றேனும் நிகழும் என சற்றும் நினையாத ஒருவனுக்கு ஒரு நாளில் தோற்று பின் நடத்தபடுவதின் கொடுமை தரும் அதிர்வா?
கொண்டவன் வீழும் போது வரும் வலியும் அற்றவன் வீழ் வலியும் ஒன்று தான். ஆனால் தன் உடல், பதவி, மரியாதை, வாழும் வாழ்வு பற்றிய அனைத்து பிம்பங்களும் அணைந்து , ஆணவம் முற்றிலும் எரிந்து போய் அவமானப்பட்டு ஆனாலும் உயிர் போகாமல் செல்வது ஷத்ரிய அவமானத்தின் உச்சம்.... போரில் தோற்பதின் ஒரு பகுதி தான் இதுவும். ஆனால் நண்பன் என்பவனிடத்தில் வருவது தான் ஒரு பாதை மாற்றம்.
அர்ஜுனன் சொன்னது போல் துரோணரின் நாடகம் முடிந்து இனி துருபதனின் வன்மம் ஒரு நூல் என அத்தீயை எடுத்து செல்லும் விதியின் புதிய பாதையை. முதல் போருக்குப்பின் தெரிந்து இருக்கும் யார் களங்களில் வென்றவன் என. நிஜ முதல் தேர்வில் அடையாளம் இல்லாமல் செல்லும் கௌரவர்களும் அவர்களின் பயமும் வெல்ல வேண்டிய கட்டாயமும் இனி அத்தீயை வளர்க்கும். சரிவில் மெல்ல இறங்கி வரும் வண்டி வேகம் பிடிப்பதன் காலங்கள் இனி.
தன்னை பற்றி தான் கொண்ட பிம்பங்கள் உடைந்து சிதறும் போது ஏற்படும் உணர்வு தான் அவமதிப்பு என்று ஏதோ ஒரு கட்டுரையில் நீங்கள் சொன்னதாக நினைவு. எவ்வளவு எளிய ஆனால் ஏற்று கொண்டு வாழவே முடியாத உண்மை.
துருபதன் வென்று இருந்தால் என்ன ஆகி இருக்கும் என்று யோசிக்கிறேன்
அன்புடன்
லிங்கராஜ்