Friday, January 9, 2015

பிரயாகை-69-அடையாளம்.


அன்புள்ள திரு.ஜெ வணக்கம். 

அடையாளத்தை இழந்துப்போகும் மனிதனுக்காக கொஞ்சம் அழவேண்டும்போல் இருந்தது பிரயாகை-69யைப்படிக்கும்போது. வெளியே கரியாகவும்  உள்ளே அனலாகவும் கொதிக்கும் அவனை வரலாறு தீயாகவே அடையாளம் காணும். 

ஹேகயகுலத்திற்கும், பிருகு குலத்திற்கும் இடையில் எழுந்த வஞ்சனம் அதன் வழியாக வரும் யுத்தமும் இரத்தமும் பதைக்கசெய்தாலும் அதில் இல்லாத ஒரு பெரும் துன்பம் ஊஷரர் குலத்தார்படும் துன்பத்தை படிக்கும்போது நெஞ்சம் பிளக்கிறது. எதிரியும் எதிரியும் சேர்ந்துக்கொண்டு ஒரு பழைய எதிரிக்கு எதிராக துவந்தயுத்தம் செய்வது புரிகின்றது. அவனின் உடலை, உயிரை, அடையாளத்தை சுத்தமாக அழிக்கும் காட்சியில் மனம் பதைக்கிறது. மாலைவாழ்மக்களுக்கும். பழங்குடியினருக்கும் எதிராக திரளும் மக்களும், அரசும்போல் உள்ளது பகனின் கதை.

ஊஷரர்களை அழிக்க காட்டுக்கு தீவைப்பதும்,தீயால் உருவான ஊர்களில் வேள்வித்தீ வளர்ப்பதும் பிருகுகளும், ஹேகயர்களும் சேர்ந்துக்கொண்டு ஊஷரர்களுக்கு எதிராக நிற்கும் காட்சியைக் கொடுத்தது. விவசாய நிலங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு பண்நாட்டு நிருவனங்கள் தோன்றுவது தீவைக்கப்பட்ட இடத்தில் செய்யப்படும் வேள்விதானோ? 

//யாதவர்களின் நெருப்பு ஒவ்வொன்றும் வேள்வி நெருப்பாகமாறிக்கொண்டிருந்ததுவெம்மைகொண்ட உலோகப்பரப்பின் ஈரம்போல காடு கண்காணவே வற்றி மறைந்துகொண்டிருந்தத//

இதோ இன்று நாம் எங்கு வந்து நின்றுக்கொண்டு இருக்கின்றோம் என்ற உண்மையும், நிலங்களை மனைகளாக்கி, மனைகளை வீடுகளாக்கி இன்று விவசாயிகளை நாம் ஊஷரர்களைப்போல தவளைகளைப்போல் கொன்று கொண்டு இருக்கின்றோம். ஆளும்வர்க்கமும் பண்ணாட்டு நிறுவனமும் சேர்ந்து வந்து தாக்கும் கொடுமைகளுக்கு இடையில் ஊஷரர்களாக விவசாயிகள்.

ஆண்டபரம்பரையின் ஒரு மின்னும் மோதிரம் கண்ணீர்த்துளிபோல மின்னி பழைய அடையாளத்தைக்காட்டுகின்றது. இருபது கைகளின் எண்பது விரல்கள் நம்பிக்கையில் மின்னி தனது அடையாளத்தை காட்டுகின்றது. உணவுக்கே வழியில்லாத இந்த பகனின் விரல்களுக்கும், நம்பிக்கையில் வளத்தில் ஆற்றலில் மின்னிய அந்த விரலுக்கும் இடையில் உள்ள இடைவெளியை நிரப்பும் ஒருபாலம் அந்த மோதிரஅடையாளம் மட்டும்தான். அதை அத்தனை வறுமையிலும் தொலைத்துவிட தூமனை நினைத்துப்பார்க்கின்றேன். தான் யார் என்பதற்காக ஒரே ஒரு அடையாளம். தான் எந்த மரத்தின் விதை என்பதற்கான அடையாளம். அதை இழக்காத தூமனை முன்பொரு யுகத்தில் இறந்த ராவணன் அகம் இன்னும் வாழ்த்திக்கொண்ட இருக்கும் அவன் கூடவே இருக்கும். அடையாளத்தை இழந்துபோதல் ஒரு பொருளை இழந்து போதல் அல்ல ஒரு வாழ்க்கையை வரலாற்றை நீட்சியை காலத்தை மாண்பை இழந்துபோதல் என்பதைகாட்டும் அந்த மோதரக்காட்சி அற்புதம் ஜெ. பகன் என்னும் சிறுவிதை தன்னை எந்த ஆலமரத்தின் விதை என்பதை அறியும் திறவுகோல் அந்த அந்த மோதிரம்.

நீலத்தை சூடிக்கொண்டது வானம்
பச்சையை ஏந்திக்கொண்டது வயல்
கறுப்பை வாங்கிக்கொண்டது கொண்டல்
வெண்மையை வாங்கிக்கொண்டது பருத்தி
மஞ்சளை அப்பிக்கொண்டது சந்தனம்
பழுப்பை அணிந்துக்கொண்டது மரம்
சிவப்பை வரிந்துக்கொண்டது ரத்தம்
ஏழுவண்ணங்களிலும் கொஞ்சம் திருடி
எடுத்துக்கொண்டது இந்திர தனுசு
இவனுக்கென்று இல்லாமல் போயிற்று
தனி ஒரு நிறம். –விக்ரமாதித்யன்

இந்த கவிதை பகனின் அகம்பாடுவதுபோல் இருக்கிறது. 

//மண்ணுக்கு வெளியே தெரியும் பாறைகளெல்லாம் உள்ளேஎரிந்துகொண்டிருக்கும் கனலின் கரியேநம் காலுக்குக் கீழேஅணையாத அனல் கொழுந்துவிட்டுக்கொண்டிருக்கிறதுஅந்தச்செந்தழல்கடலின் சிறு துளி இதுதழலுருவான மண்ணின்ஆழம் ன்ன நிகழ்கிறது என்பதை பார்ப்பதற்காக வைத்திருக்கும் விழி.இது பூமியின் சினம்” என்றாள்அவர்கள் அதைச் சூழ்ந்து நோக்கிக்கொண்டிருந்தனர்சிறுவனாகிய பகன் அவர்களின் கால்களுக்குள் தன்தலையைச் செலுத்தி எவருமறியாமல் அதை நோக்கினான்//

கிராப்பைட் என்னும் கரியின் மூலக்கூறு அமைப்பும், வைரத்தின் மூலக்கூறு அமைப்பும் ஒன்றுதான். ஒடுக்கப்பட்ட மக்களின் உடலும் அகமும் புலப்படுமு் வண்ணம் மலையையும், வைரத்ததையும் படிகமாக்கிய விதத்தில் உரைநடையே கவிதையாகும் அழகில் வைரம்போல் மின்னுகின்றது பிரயாகை-69. நன்றி ஜெ.

அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.