வெண்முரசு பெருங்காவியமென்றால் பிரயாகையின் அன்னை விழி பகுதி
ஒரு குறுங்காவியமே. இப்பகுதியின் அனைத்து அத்தியாயங்களும் உணர்ச்சிகளின்
உச்சத்திலேயே நடக்கின்றன. ஆரம்பமே உச்சம் தான். சுயபலி. அதிலும் ஜெ ஒரு
சிறுகதை எழுதியிருக்கிறார். சுயபலிக்கு தயாராக வந்தவன் சிவமூலியால் சமன்
படுத்தப்பட்டு இருக்கிறான்.
ஆனால் அந்த நிகழ்வின் உச்சத்தில் சம்பந்தமே
இல்லாமல் அந்த முது கணியருக்கு எதோ ஒரு வகையில் வேண்டப்பட்ட (மகனாக
இருக்கலாம் என்பது என் ஊகம்) ஒருவன் தானாக பலியிட்டுக் கொள்கிறான். அவனை
எண்ணி அவர் அழும் அந்த பகுதி. அவர் கண்ணீர் காதுகளை நிறைக்க அழத்
துவங்கினார். இந்த வரி தான் இறந்தவன் அவருக்கு வேண்டியவன் என்பதற்கான ஒரே
குறியீடு.
அங்கே அவரின் அழுகையை எவருமே கேட்கவில்லை. அனைவருமே கோவிலின்
பூஜையிலும், திரௌபதியின் சுயம்வர நிகழ்வுகளிலும் தான் ஆழ்ந்திருக்கின்றனர்.
ஆம், அழிவின் தேவதை அல்லவா அவள். அழிவையே கொண்டாட்டமாக ஆக்கும் ஒரு
நிகழ்வில் தான் அறிமுகப் படுத்த முடியும். பின்னாளில் இவளுக்காகத் தானே
அத்தனை பேர் தானாக வந்து உயிர் விட்டனர். அவ்வாறு உயிர் விட்டவர்களுக்காக
அழுதவர்கள் யார்? அவ்வாறு அழுதவர்களைத் தேற்றியவர்கள் தான் யார்?
அதையெல்லாம் யோசிக்காமால் அப்போர்த்திருவிழாவில் அல்லவா திளைத்திருக்கப்
போகிறார்கள்!!! அதற்கு அச்சானவளை சாதாரணமாக அறிமுகப் படுத்தலாமா என்ன!!!
இது
வரையிலும் வெண்முரசில் யாருக்குமே கிடைக்காத அறிமுகம் திரௌபதிக்கு
கொடுக்கப் பட்டிருக்கிறது. காவியத்தில் இசையும், ஒளியும் இணைந்த ஓர்
திரைப்படத்தையே நம் கண் முன் காட்டியிருக்கிறார் ஜெ. திரௌபதி முகம்
நமக்கெல்லாம் தெரியும் அந்த கணத்தைப் பாருங்கள். சமீபத்தில் எந்த ஒரு வணிக
திரைப்படத்திலும் இப்படி ஒரு எழுச்சி தரும் அறிமுகக் காட்சியைக்
கண்டதில்லை.
கோவில் பூஜைக்கான முழவிசை ஒலிக்கிறது. அதுவும் உச்ச பட்ச சத்தத்தில், சந்த்தத்தோடு. எங்களூரிலும்(குமரி மாவட்டம்), கேரளாவிலும் பாண்டி மேளம் என்ற
ஒரு வகை இசை, செண்டை என்ற தாள வாத்தியத்தையும் கொம்பு என்ற குழல்
வாத்தியத்தையும் வைத்து நடைபெறும். அதுலும் குறிப்பாக அம்மன் கோவில்களில்
நடக்கும் அந்த இசை அனுபவம் அலாதியானது.
அந்த இசையின் உச்சத்தில் கனத்த
கோவில் மணியும் இணையும் பொழுது நரம்பெல்லாம் ஒரு வித அழுத்தம் பரவி, நம்
உடலின் ஏதேனும் ஒரு பாகமாவது ஆடத் துவங்கியிருக்கும், குறைந்த பட்சம்.
முழுவதுமாக ஆடுபவர்களையும், அத உச்சமாக ஆராசனை வருபவர்களையும் எளிதில்
காணலாம். என்னால் அந்த அனுபவத்தைஎழுத்தின் மூலமாக இன்னொருவருக்கு
கடத்த இயலாது என்றே நினைத்திருந்தேன். அனால் ஜெ எழுதிவிட்டார்.
"ஆலயத்தின்
மரத்தாலான பன்னிரண்டு அடுக்குக் கோபுரத்தின் நடுவே அமைந்திருந்த மாபெரும்
கண்டாமணியின் நா சுழன்று ஒலித்த ரீங்காரம் முரசின் கார்வையுடன் கலந்து ஒரு
கொழுத்த திரவமாக ஆகி காதுகளையும் வாயையும் நிறைத்து உடலில் புகுந்து
நெஞ்சையும் வயிற்றையும் தலையையும் நிரப்பி காதுச்சவ்வை உள்ளிருந்து மோதியது.
அந்த அழுத்தம் தாளாமல் அனைவரும் வாயைத் திறந்து திறந்து மூடினர்.
ஒலியதிர்வுகளில் அங்கிருந்த அத்தனை கட்டடங்களும் மரங்களும் மிதந்து நின்றன.
அலைகளில் நெற்றுகளைப்போல அவ்வொலி அவர்களை எற்றி அலைக்கழித்தது."
அந்த
ஒலியை, பாண்டி மேளம் என்று 'you tube'' ல் தேடிப் பாருங்கள். இப்போது
பின்னணி இசை வந்து விட்டதல்லவா!!! அடுத்து அறிமுகம். அதுவும் துரியோதனன்
கண் வழியாக. பார்வைக் கோணம்!!!
கோவில் முற்றத்தில் தேர்
வந்து நிற்கிறது. அந்த ஒலியிலும் அரசியர் வருவதை அறிவிக்க என்று தனிப் பெரு
முரசம் ஒன்று ஒலிக்கிறது. முதலில் சேடியர் இறங்குகிறார்கள். அதன் பிறகு
அரசி பிருக்ஷதி இறங்குகிறாள். மிகச் சரியாக அவளுக்கு நேர் பின்னால் திரௌபதி
வருகிறாள். துரியோதனன் கண்ணுக்கு அவள் தெரியவில்லை, நம் கண்ணுக்கும்
கூடத்தான். வெறுமனே அவளின் தலையும், ஒரு வைரச் சுட்டியும் தெரிகிறது.
அவர்களைச் சுற்றி காவலர் பந்தங்களுடன் நடந்து கொண்டிருக்கின்றனர்.
ஆக
பின்னணி இசை, உச்சத்தில் ஒலிக்கும் நம்மை எதிர் நிலை உன்னதத்திற்கு
இட்டுச் செல்லும் ஒரு இசை. ஒளி பந்தங்களின் செவ்வொளி. அதில் மின்னும்
வைரம். இந்த ஒளியமைப்பில், துரியன் பார்வையிலிருந்து பிருக்ஷதி சற்று
விலகுகிறாள். அந்த செவ்வொளியில் திரௌபதியின் முகம் துரியனுக்குத்
தெரிகிறது. அவனுக்கென்ன நமக்கும் அப்போது தான் தெரிகிறது. இனி ஜெ வரிகளில்,
"அன்னை
சற்று விலகியதும் திரௌபதி பந்தங்களின் செவ்வொளியில் முழுமையாக
வெளிப்பட்டாள். அவள் அணிந்திருந்த அரக்குநிறப் பட்டாடையின் மடிப்புகள்
சற்றுமுன்னர் அணிந்ததுபோல குலையாமலிருந்தன. நடப்பதன் நெளிவுகளேதும்
அவளுடலில் நிகழவில்லை. சீராக ஓடும் பேராற்றில் செல்லும் படகுபோல காற்றில்
மிதந்து வந்தாள்."
மனமும் கண்களும் இந்த வரிகளுக்கு மேல் செல்லவில்லை. அப்படியே மெய்மறந்து
அந்த சூழ்நிலையில் நின்று விட்டேன். மீண்டும் ஜெ முத்திரை பதிக்கிறார்.
துடிக்கும் ஒலிகளுடன், தீயிலிருந்து வருகிறாள் அவள்.
உண்மையில்
மிகச் சரியான அறிமுகம். அவளின் எந்த அழகைப் பற்றிய வர்ணனைகளும் இல்லை.
ஆனால் அவள் பேரழகி என்று நம் மனம் உணர்ந்து விட்டது. வெறும் நெற்றிச்
சுட்டி வைரத்தை நேரில் பார்த்த துரியனுக்கும், எனக்கும் அங்கு, அந்த
அனுபவத்தில் வேறு வித்தியாசமில்லை. எழுத்தில் என்னையும் அந்த கோவில்
நடையில் கொண்டு நிறுத்தி விட்டார் ஜெ. அதன் பிறகு ஷண்முகவேலின் ஓவியம்.....
பின்னி
விட்டீர்கள் ஜெ. அன்னை விழியை அணு அணுவாக அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.
உண்மையில் இந்த நிகழ்வில் அது நடக்கும் போதே பங்கு பெற முடியாதவர்களுக்காக
பரிதாபப்படுகிறேன்!!!
அன்புடன்,
மகாராஜன் அருணாச்சலம்.