வெண்முரசில் ஒவ்வொரு பாத்திரமும் முக்கியத்துவமும் தனித்துவமும் வாய்ந்ததாக படைக்கபட்டுவருகின்றது. கர்ணனின் தந்தை முதல் பீஷ்மர் பாத்திரம் வரை வெகு நேர்த்தியாக வார்க்கப்படுகிறது. அதேபோல் பொது மனிதசமூகத்தின் பாத்திரம் வெண்முரசில் பெரிய முக்கியத்துவத்தை பெறுகிறது. மனிதசமூகத்தை ஒரு கூட்டுயிரி தேனீக்களைப்போல. தனி மனிதர்களின் குண நலன்கள் மனித சமூகத்தை பாதிப்பதைவிட அதிகமாக மனித சமூகத்தின் பொதுவான குணநலன்கள் தனி மனிதர்களின் நடத்தையில் சிந்தனையில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
தனி மனிதனை விட மனித சமூகம் சுயநலம் கொண்டது. தன் சமூக நலனுக்காக மற்ற உயிர்களின் நலத்திற்கும் சுறறுபுர சூழலுக்கும் தீங்குவிளைக்க தயங்காதது. ஒருவகையில் பார்த்தால் தனி மனிதன் சமூகத்தைவிட இரக்கம் வாய்ந்தவன். தயை மிக்கவன். அதே மனிதன் சமூகத்தில் ஒருவனாய் இருக்கும்போது அவன் குணங்களின் நற்பண்புகள் குறைகின்றன. ஒரு தனிப்பட்ட நாஜியாக ஒருவன் அத்தனை யூதர்களையும் கொல்ல விழைய மாட்டான். ஆனால் நாஜி சமூகம் யூத குலத்தையே அழிக்க முனைந்தது. ஒரு தனிப்பட்ட இந்து சாதியின் பேரால் ஒரு மனிதனை அவமதிக்க வெட்கப்படுவான். ஆனால் ஒரு குழுவாய் ஒருவனை மலம் தின்ன வைப்பான். அதனால் தான் அற நூல்கள் ஒருவனின் ஆன்மீகமுன்னேற்றத்திற்கு தனித்திருக்க சொல்கின்றன.
மனித சமூகத்தின் கீழ்மை விதுரனை சட்டென்று ஒரு துரோகியாக உருவகிக்கிறது. பொது வாழ்வில் ஈடுபடுபவர்கள் எல்லாம் நினைவில் கொள்ள வேண்டிய படிப்பினை இது. புகழ் வேண்டி பொதுநலப் பணியில் நுழைபவன் பெரும் ஏமாற்றத்தையே காண்பான். மக்கள் சேவை தன்னுடைய இயற்கையான குணம் (அதாவது தன் சுதர்மம்) எனக்காணும் ஒருவன் மட்டுமே வாழ்வில் ஈடுபடவேண்டும். அவன் இம்ம்மக்கள் சமூகம் அளிக்கும் புகழையும் இகழையும் காலில்இடறும் குப்பைகளென எத்திச்செல்ல தெரிந்திருக்கவேண்டும்.
தண்டபாணி துரைவேல்