இனிய ஜெயம்,
இன்றைய அத்யாத்தில் கிருஷ்ணன் திரௌபதி வசம் அந்த ரணகளத்திலும் விளையாடுவது எத்தனை அழகு. உண்மையில் வென்றவன் கிருஷ்ணன் அல்லவா? திரௌபதியை எந்த நிலையில் அவன் நிறுத்தி வைத்திருக்கிறான்.? பீமனை தேர் இழுக்க சொல்லி திரௌபதி அடைந்த 'நிலையை' இத்துடன் ஒப்பிட்டால், கலவியை துவங்கி அவளுக்கான உச்சத்தை அளிக்காமல் ஒரு பெண்ணை 'கச்சிதமான' தருணத்தில் கைவிட்டு சென்றால் அவள் என்ன நிலையில் இருப்பாளோ , அந்த நிலையில்தான் திரௌபதியை கிருஷ்ணன் நிறுத்துகிறான்.
''ஆம்பள'' என்று மனம் கூவுகிறது.
முகத்தில் மலர் இதழ்களும், குறுதித் துளிகளும் , அட்சதை என தூவ, கங்காளியின் அணி புனைதல் இனிதே நிறைந்தது.
கடலூர் சீனு