Monday, January 5, 2015

மாயத்தின் பேரழகு




ஆசிரியருக்கு ,

பிரயாகை 76- ஒரு தத்துவ மாய எதார்த்தம் என்கிற புது வகையைச் சார்ந்தது. திரௌபதி  முதலில் கர்ணனைப் பார்ப்பது தேவி தரிசனத்திற்கு முன், பின் அர்ஜுனனைப் பார்ப்பது தரிசனதிற்கு பின். அவள் தோழியின் பெயர் மாயை. அது போக கர்ணனை வண்டு துளைத்தது குருதி வழிந்தது, சுய பலி கொண்டு குருதி பீறிடுவது , திரௌபதியின் இதழ்கள் ரத்தச் சிவப்பாக இருப்பது எல்லாம் பின் நிகழ்வனவற்றிற்கான   ஒரு உட் குறிப்பே. இது ஒரு நாவீன எதார்த்த நாவலில் சாத்தியம் இல்லை.

ஒரு தரிசனத்தை அடைவதல்ல அபூர்வம் , அதை தக்கவைப்பதே. காதல் தயக்கமானது  பூடகமானது இறங்கிச் செல்லக் கூடியது, காமம் அப்பட்டமானது  நேரடியானது இடம் பிடிப்பது . காதல் நேரடியாக வந்து தோற்கும், காமம் ரகசியமாக வந்து வெல்லும்.

  ஒரு நோக்கில் இங்கு திரௌபதி , கர்ணன் , அர்ஜுனன் ஆகிய பெயர்களை நீக்கி  விட்டால்  அவர்களை ஆட்டுவிக்கும் சக்திகளை கொண்டு நாம் இவர்கள் வெறும் கருவிகளும் களங்களும்  தான் எனப் புரிந்துகொள்ளலாம். 

காதல் ஒரு நளின வேடமிட்ட காமம் தானா , அல்லது தன்னிச்சையான வேறு சக்தியா என்கிற கேள்வியும் இங்கு எழுகிறது  . விந்தையாக இங்கு காதல் (கர்ணன் ) நேரடியாக வருகிறது வந்து களத்தில் அனுமதி மறுக்கப் படுகிறது, காமம் (அர்ஜுனன் ) ரகசியமாக  வருகிறது களத்தில் வெல்கிறது. நேரடியாகத் வந்தாலும் காதல் காமம் முன் வலுவிழக்கிறது.  ரகசியமாகத் வெளிப்பட்டாலும்  காமம் நேரடியானது  காதலை ஆசைத்துப் பார்க்கிறது .  இரண்டிற்கும் ஒரே தாய் (குந்தி) என எண்ணும்போது ஒன்றிற்குள் இன்னொன்றின் விதை உள்ளதோ என  எண்ணத் தோன்றுகிறது. 
இரண்டுமே ஒன்று இன்னொன்றாக இரண்டுமே அசல் அல்லது இரண்டுமே ஒன்று இன்னொன்றின் நிழல் என காணக் கிடைப்பது  திரௌபதியின் தோழியாக மையை.

உங்களுடன் தொலைபேசியில் உரையாடியபோதுதான் உணர்ந்து கொண்டேன் , முதலில் இருந்தே அர்ஜுனன் கர்ணன் போலவே தோற்றம் கொண்டிருக்கிறான் என சொல்லப் பட்டிருப்பது. காமம் காதல் போலவே தோன்றும்.  இதைத் தவறவிடும் வாசகனுக்கு எவ்வளவு இழப்பு.   

தரிசனம் அடைவதும் அதை தக்கவைத்துக் கொள்வதும் , இருசக்திகளின் வருகை முறையும் வீழும் நிலையும் , அவைகளுக்கு கிட்டும் அனுமதியும் மறுப்பும் என இன்றைய பகுதி தத்துவ மாய மயக்கம். இதுவே இதன் பேரழகு. இனி கர்ணன் கூட திரௌபதி தொடையில் துளைத்த வண்டு தான், எஞ்சிய வாழ் நாளெலாம் அந்த இன்ப வலி அவளுள் இருக்கும். 

கிருஷ்ணன்