Saturday, January 10, 2015

வில்லின் முன்



இனிய ஜெயம்,

சுயம்வர மண்டபத்தில் காடர்,வேடர், வெளிர் என எத்தனை குலங்கள்,அதற்க்கு அரசர்கள், குலத் தலைவர்கள், இயங்கியல் விதியில் அனைத்தும் கரைந்து [முதற்கனல் சர்ப்ப வேள்வியில்] நான்கு வர்ணங்களாக மாறி விடிருப்பதைக் காண்கிறோம். 

அதே போல வண்ணக் கடலில்  [மழைப் பாடலில் பீஷ்மர் பேசிய]  துறைமுக வணிகம் விஸ்வரூபம் கொண்டிருப்பதை காண்கிறோம்.  உங்கள் உரையாடல் ஒன்றில் இரண்டாவது தீர்த்தங்கரர்  கிருஷ்ணனின் சமகாலத்தவர் என்று சொன்னீர்கள். வண்ணக் கடல் இளநாகன் பயணத்தில் சமண ஆலயம் ஒன்றினில் நான்கு தீர்த்தங்கரர்கள் வழிபாடு ஒன்று வருகிறது. எனில் இளநாகனின் பயணம் பாரதப் போர் முடிந்து நூறு ஆண்டுகளுக்குப் பிறகானது என யூகிக்கலாம்.

அன்றைய பாரத்தின் சமூக ,அரசியல், பொருளாதார மாற்றம் ஒன்றின் சித்திரத்தை  முன் பின்னாக காலத்தை பகுத்து அதன் வழியே செறிவாக முன் வைக்கிறது வெண் முரசு. இந்த தளத்தின் அனைத்து நுட்பங்களையும் தொட்டெடுக்க இன்னும் கவனமாக வாசிக்க வேண்டும் போல.

இவை எல்லாம் போக நான் இயல்பில் உணர்சிகரமானவன். உணர்சிகளின் புரவி ஏறி திசைவெளிகளை அளைபவான். ஒரு மெல்லிய உணர்ச்சித் தருணமும் என்னை ஸ்தம்பிக்க செய்துவிடும்.

அப்படியானது இன்று பீமன் சகுனியை பார்க்கும் தருணம். அரக்கு மாளிகை சம்பவத்துக்குப் பிறகு பீமன் இப்போதுதான் சகுனியைப் பார்க்கிறான். சகுனியின் கால் வேதனைக்காக இரக்கம் கொள்கிறான்.

சில அத்யாயயங்கள் முன்பு நீண்ட நாள் கழித்து பீஷ்மர் சகுனியை சந்திக்கிறார்.பீஷ்மரும் சகுனியின் காலை ஆதூரத்துடன் நோக்குகிறார்.

ஆனால் சகுனிக்கு பிறர்?   விதி வேறென்ன சொல்ல. 

கடலூர் சீனு