அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.
ஒருவன் மனது ஒன்பதடா-அதில்
ஒளிந்து கிடப்பது எண்பதடா
உருவத்தைப் பார்ப்பவன் மனிதனடா-அதில்
உள்ளத்தைக் காண்பன் இறைவனடா –என்றார் கவியரசு கண்ணதாசன். இறைவனாக மாறவேண்டும் என்று நினைத்து ஒருவன் உள்ளத்தை பகுத்துப்பார்க்கநினைத்தால் இறைவன் ஆகின்றோமோ இல்லையோ பைத்தியமாகிவிடுவோம். பைத்தியமாவதுதான் இறைவனாவது என்றால் அப்படி ஆவதும் தப்பில்லை. பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா போற்றி.
பாண்டவர்கள் வாரணவத தீவிபத்தில் எரிந்துவிட்டார்கள் என்ற எண்ணத்தில் எட்டுமாதமாய் துயிலாதவன். எட்டு ஆண்டுகளாய் நொந்து நூலாகியவன் திருதராஷ்டிரன். அப்பா என்னும் பெரும் உணர்வில் அஸ்தினபுரியின் அத்தனை குழந்தைக்கும் தந்தையாக இருக்கும் உள்ளம் படைத்தவன். அஸ்தினபுரியின் நன்மைக்காகமட்டும் தனது சொந்தமகன் துரியோதனன் முடிசூட்டிக்கொள்ளட்டும் என்றவன். பாண்டவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்றதும் அரசசபை என்பதையும் அறியாமல் களிநடனம் செய்தவன். “மகனே துரியோதனா பாண்டவர்கள் சாகவில்லை உயிருடன் இருக்கிறார்கள்” என்றவன். பீமனும், அர்ஜுனனும் சென்று பாஞ்சாலியை வென்று வரட்டும் என்றவன் //நான் சொன்னேனே, என் மைந்தன் பீமன் அத்தனைஎளிதாக இறக்க மாட்டான் என்று// என்று ஆனந்தக்கூத்தாடியவன். அப்படியே இருந்திருந்தால் நன்று ஆனால் என்ன ஆனது?
//சொல்லிவரும்போதே அவர் குரல் உடைந்தது. “எங்கோஇருக்கிறான். நலமாக இருக்கிறான்” என்றவர் தளர்ந்து பீடத்தில்அமர்ந்துகொண்டு தன் முகத்தை கைகளில் ஏந்தி மூடியபடிதோள்குலுங்க அழத்தொடங்கினார்.//
நலமாக இருக்கிறார்கள் என்றபோது எது அவனை அழவைத்தது. ஏன் முகம்மூடி வெம்பி வெதும்புகின்றான்.
ஒருவன் மனது ஒன்பதடா-அதில்
ஒளிந்து கிடப்பது எண்பதடா. ஏன் இந்த மானிடமனம் இப்படி ஒரு நாடகம் ஆடுகின்றது.
பிரதமன் கதையில் முனிபத்தினியாகிவிட்ட பாண்டுவின் மனைவி குந்தி. வைதீகர்கள் குடும்பத்தை காக்க நினைத்து உதிவிப்புரிய நினைக்கும் இடத்தில் என் மகன் பீமன் வெல்வான். இடும்பவனத்தின் இடும்பன்கூட அவனுக்கு நிகர் இல்லை என்று சொல்லி இருக்கலாம். ஐராவதம் யானையின் நான்கு தந்தங்களை தனது மார்பில் தாங்கி இருக்கும் இராவணன் வந்தால்கூட அவன் மார்பை என் மகன் பீமன் தனியொருவனாக பிளப்பான் என்று சொல்லி இருக்கலாம் ஆனால் குந்தி சொல்வது என்ன? ஏன்?
// முனிபத்தினி அமைதியாக “பிறந்தநாள் முதல் பிறனுக்காக வாழும்ஒருவனின் அன்னை நான்” என்றாள்.//
பகனுக்கு பீமனை காவுக்கொடுப்பது என்று குந்தி முடிவு செய்தபோது நினைப்பது பீமனைப்பற்றி அல்ல கர்ணனைப்பற்றி. பீமன் வெல்வான் என்பது நம்பிக்கை. வெற்றி என்பது குந்தியின் கையில் இல்லையே. அவளுக்கு கர்ணனை நினைக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. பயன்படுத்திக்கொண்டாள். அவளுக்கே அவள் சொல்லிக்கொள்கின்றாள். பிறனுக்காக வாழும் கர்ணன் என்று.
ஒருவன் மனது ஒன்பதடா-அதில்
ஒளிந்து கிடப்பது எண்பதடா. ஏன் இந்த மானிட மனம் இப்படி ஒரு நாடகம் ஆடுகின்றது?.
மனைவியின் கண்ணீருக்கும் அசையாத வைதீகன். தன் பொருட்டு இன்னொருவன் இறந்தால் தான் யார் என்று அறியாத ஒருவனின் பழி பெரிதென்று தப்பி பிழைக்க நினைக்காத வைதீகன். குடும்பத்தை கைவிடுவதன் மூலம் நரகில் கிடக்கவும் சித்தமாகும் வைதீகன். பீமன் சொல்லைக்கேட்டு ஏன் உண்மையை ஊருக்கு சொல்லவில்லை. அந்த பொய்யின் வழியாக அவன் இப்போது நூறுபொய்களுக்கு சொந்தக்காரன். பழிக்கு அஞ்சிவன் மனம் எப்போது பொய்யிக்கு அடிமையானது.சாகதுணிந்தவன் பொய் சொல்கின்றான் என்று கட்டிய மனைவியும் நம்பமுடியாத தருணத்தில் ஏன் பொய்யன் ஆனான். படித்தவன் பொய் ஒரு மந்திரமாகிவிடுகின்றது. பீமன் இதை எப்படிக் கண்டுக்கொண்டான்.விருகோதரன் “எவர் கேட்டாலும் நான் என் மந்திரம் ஒன்றைச்சொன்னேன். பேருருவம் கொண்ட பூதம் ஒன்று வந்து பகனைக்கொன்று சுமந்துவந்து இங்கே போட்டது என்று கூறுங்கள்” என்றான்
ஏகசக்கரநகரில் இன்று பெரும் பொய்யன் யார்? படித்தவன். உண்மையை மந்திரமாக்கியவன் இன்று பொய்யை ஒரு மந்திரமாக்கிவிட்டான்.
ஒருவன் மனது ஒன்பதடா-அதில்
ஒளிந்து கிடப்பது எண்பதடா. ஏன் இந்த மானிடமனம் இப்படி ஒரு நாடகம் ஆடுகின்றது.
யாரும் நல்லவராக இருக்கவேண்டியது இல்லை ஆனால் உலகம் நல்லவர்கள் என்று நம்பும்படி நடிக்கவேண்டும். மனம் நடத்தும் கூத்து இது.
இறைவன் மனிதனுக்குள்
மனதை வைத்தான்
மனம் மனிதனுக்குள்
நடிகனை வைத்தது
நடிகனைப் பார்த்து இறைவன்
ஒருவிழியால் சிரிக்கிறான்
மறுவிழியால் அழுகிறான்
சிரிப்பதால் அழுவதால் இறைவன்
மனிதனுக்கு பித்தன்
பித்தனுக்கு மட்டும் மூன்றாவது விழியும் உண்டு
கண்ணீரிலும் சிரிப்பிலும் நெளியாத விழியது
அது நடிப்புக்கு தூரத்தில்
உண்மைக்கு பக்கத்தில் அல்ல
உண்மையில்.
இந்த கணத்தில் அந்த கடலில் என்னை நீந்த வைத்த அன்புள்ள ஜெ. நன்றி.
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல். .