Thursday, September 1, 2016

மலர் தீபோல




மலர் தீபோல, தீ மலர்போல, காற்று கல்போல, கல் காற்றுபோல, அலை கட்டுமரம்போல, கட்டுமரம் அலைபோல, பனி சூடுபோல, சூடு பனிபோல  பெண்ணும் ஒன்றி்ல் மற்றொன்றாக இருக்கிறாள். அதை தெய்வீகம் எனலாம், தாய்மை எனலாம், குழந்தமை எனலாம், தோழமை எனலாம். வசிகரம் எனலாம், விலக்கம் எனலாம், கருணை எனலாம், கொடுமை எனலாம், ஆனால் அது என்ன என்பதை அந்த உடலை தாங்கிவரும் பெண்ணும் அறியமுடியாத ஒன்று. அந்த பெண்ணாகி வந்த தெய்வத்தின் சாயலா அது?. அரசியாக இல்லாமல் வெறும் மரவுரி தரித்திருக்கும்போதும் அரசியென்றே தோன்றும் திரௌபதிப்போன்ற ஆளுமை நிறைந்த பெண்ணிடம் அது மிகுதியாக வெளிப்படுகிறது. எந்த நிலையிலும் தன்னை ஒரு அரசி என்று உணராத ஜானகியிடமும் அது மிகுதியாக இருக்கிறது. இந்த பெண்ணை அறியும் ஒன்றின்வழியாக பெண்ணிடம் அறியப்படும் மற்றொன்றை பெண்ணின் மிகுத்தன்மையை வழிபடாத ஆண்கள் வசம் அவர்கள் மாட்டும்போது நடக்கக்கூடாது நடந்துவிடுகிறது.

கௌரவமூத்தவன் துரியன் பாஞ்சாலியை சபைக்கு இழுத்துவரச்சொல்லி அவள் இழுத்துவரப்பட்டபோது அவளைப்பார்த்து வணங்குவதுபோல் கைக்கோர்த்து நெஞ்சில் வைத்துக்கொள்கிறான். அவளை வணங்கு என்று அகம் சொன்னாலும் வணங்காத வஞ்சத்தை அவனுக்குள் விதைப்பது எது? அதுதான் பெண்மையை இம்சிக்கிறது. அந்த இம்சையில் விழும் நொடியில் பெண் தன்னை பெண்ணென்று மட்டும் அறிகின்றாள். அங்கு அவளை தனியாக விட்டுவிட்டு அவளோடு இருந்த அந்த மிகைதெய்வம் எங்கோ பறந்துவிடுகிறது. அந்த இடத்தில் நின்று பெண் தன்னை நான் பெண் பெண் என்று விம்புகிறாள். அந்த விம்மலை உடைக்கின்றான் கண்ணன் இன்று.

எதிரி எந்த ஆயுத்தை எடுக்கின்றானோ அந்த ஆயுதத்தையே மற்றவனும் எடுக்கிறான். ஆனால் தன்னை தீண்டி வெட்டிய ஆயுத்தை தண்டிப்பது இல்லை மாறாக ஆயுதம் ஏந்தியவனை தண்டிப்பதே வெற்றி. அனைவரும் பாஞ்சாலி என்னும் பெண்ணுக்கு நடந்த அநீதியைப்பற்றி சிந்திக்கும்போது பாஞ்சாலி என்னும் பெண் ஏந்திவந்து தாக்கிய ஆயுதங்களின் வலியை முன்வைத்து கண்ணன் அவள் அகம் உடைக்கிறான். பாஞ்சாலி என்னும் பெண் ஏந்திவந்த ஆயும் அரசியல்பகடை. அதை உடைக்க துரியன் ஆடியது பகடைஅரசியல்.

அறியாமை ஆணவத்தை உண்டாக்கிறது. ஆணவம் தன்னைத்தவிற உலகத்தில் உள்ள அனைவரும் குற்றவாளி என்கிறது. கண்ணன் திரௌபதியின் அறியாமையை ஆணவத்தை உடைக்க வென்றவன் தோற்றவன் குருதியும் கண்ணீரும் ஒன்றுதான் என்கிறான். இடத்தில் இவன் முற்றும் புதியகண்ணன் இவன்தான் குருசேத்திரத்தின் கதைநாயகன்.  இவன் மிகமிக பிடித்தவனாக இருக்கிறான்.

வாழ்வின் பொருளின்மையில் சிக்கிய கணம்.

அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்