மாமலரில் மீண்டும்
தருமனைப்பார்த்ததும் கிராதத்தில் அர்ஜுனன் சண்டனுடன் உடன் நடந்த பயணம் தடைப்பட்டு கால்கள்
ஓய்ந்து நேராக மனதிற்குள் புகுந்துக்கொண்டதுபோல் உணர்வு.
எப்போதுமே தருமன்
மனதோடு நடக்கிறான். உடல் என்ற ஒன்றே அவனுக்கு மிகை என்பதுபொல் தோன்றச்செய்துவிடுகிறான்.
தருமன் வந்ததுமே உடல் கழன்றுவிழுந்து மனம் மட்டும் மோரில் இருந்து பிரிந்து தனித்து
உருண்டு நிற்கும் வெண்ணெய்போல மின்னி தவழ்ந்து மிதக்கிறது.
வாழ்க்கை
என்னும்
பெருநதியின் கரையில் எத்தனையோ மரங்கள் தனித்து நிற்கின்றன. வேர்களால் ஒன்றை
ஒன்று முட்டிமோதி
பிணைந்து இருக்கின்றன. ஆழத்தில் இருப்பதால் அதன் முட்டலில் தோன்றும்
வலியும் புரிவதில்லை, பிணைதலில் வடியும் இன்பமும் தெரிவதில்லை. தலையால்
ஒவ்வொன்றும் தனியாக விண்ணைத்தொட தலையாட்டி எழுந்துக்கொண்டே இருக்கின்றன.
அந்த தவிப்பு தெரிகிறது. கிளையால் தொட்டும்
மோதியும் உரசியும் தழுவியும் பிரிந்தும் விளையாடுகின்றன அது சீறலாய்
சிணுங்கலாய் கொஞ்சலாய் வளைதலாய் நெகிழ்தலாய் ஒலிக்கின்றன. வெளியில் இருந்து
வரும் புதிய
ஒன்றால் அவைகள் ஒன்றாய் இருப்பதுபொல இணைக்கப்படுகின்றன. இணைந்து
இருந்தாலும் பிணைந்து
இருந்தாலும் பிரிந்து இருந்தாலும் அந்த மரங்களின் வளர்ச்சி நதி
மரத்தைப்பற்றி எண்ணிக்கொண்டு நிற்காமல் ஒடிக்கொண்டு இருக்கிறது.
ஒரே மண்ணில்தான்
அனைவரும் இருக்கிறோம் ஆனால் ஒருவர்போல ஒருவர் இல்லை. ஒருவர்போல ஒருவர் இருப்பதாக நம்பவைக்க
எதாவது ஒன்றால் பிணக்கப்பட்டு ஒன்றாக காட்சிக்கொடுக்கிறோம். சாலமரங்களை இணைத்துகட்டிய
மூங்கில் கழியாக ஏதோ ஒன்று நம்மை பிணைத்துவைக்கிறது.
பிணைந்து இருந்தாலும்
துயரும் சலிப்பும் தனிமையும் ஒவ்வொருவரையும் பிரி்த்து இருக்க வைக்கிறது அல்லது உவகையும் எழுச்சியும்
மெய்மையும் பிரித்து அறிய செய்கிறது. சிலர் துயர் சலிப்பு தனிமை என்ற வழியல் செல்கிறார்கள்
அதனால் அவர்கள் மனதால் மட்டும் நடப்பவர்கள்பொல் தெரிகி்ன்றார்கள். சிலர் உவகை எழச்சி
மெய்மை வழியாக செல்கிறார்கள் அவர்கள் உடலும் உள்ளமும் இணைந்து நடப்பவர்கள்போல் தெரிகின்றார்கள்.
தருமன்
மனதால்
மட்டும் நடப்பதாக தெரிவதற்கு அவனின் துயரும் சலிப்பும் தனிமையும் காரணமாக
அமைகின்றன. உலகில் இருப்பது பத்தாது என்பதுபோல் இந்த உலகம் மாயை என்னும்
சொல்லையும் கண்டுக்கொள்கிறான். இந்த உலகம்
மாயை எனக்கண்டுக்கொள்ளும் ஒருவன் மட்டும் இந்த உலகில் இல்லை இந்த உலகம்
ஆனந்தம் எனக்கண்டுக்கொள்ளும் ஒருவனும் இந்த உலகில் இருக்கிறான். உலகத்தை
மாயை எனக்கண்டுக்கொள்வதற்கும் ஆனந்தம் என்று கண்டுக்கொள்வதற்கும் அவர் அவர்
உள்ளத்தின் பாங்கே காரணம். ஆனந்தம் மாயை என்பதற்கு இடையில் இந்த உலகத்தை
இந்த உலகமாக மட்டும் காணும் மானிடர்களும் உலகில் உள்ளார்கள் நகுலன்
சகாதேவன்போல. இவர்கள் தருமன்போல மாயையின் எல்லையைத்தொடுவதும் இல்லை, பீமன்
போல ஆனந்தத்திலன் உச்சியிலும் ஏறுவதில்லை. அவர்கள் அங்கேயே அங்கு
இருப்பதுடன் இருக்கிறார்கள்.
ஆனந்தத்தைக்காணும்போது
மாயை மயங்கி தயங்கி பதுங்கி நிற்கின்றது. ஆனந்தம் மாயையை காண்பதுபோல்
மாயைதான் நினைக்கிறது
அது மாயையைக்கண்டுக்கொள்வதே இல்லை. அது குரங்கோடு
குரங்காகி புலியோட விளையாடப்போய்க்கொண்டு இருக்கிறது. ஆனந்தத்திற்கு புலி
ஒரு விளையாட்டுப்பொருள். மாயைக்கு புலி தன் சலிப்பை அகற்றிக்கொள்ள ஒரு
காரணக்கர்த்தா. புலிக்கு அப்பால் நகுலனும் சகாதேவனும் வேலிக்குள்
இருக்கிறார்கள்.
தருமனுக்கு
சலிப்பை நீக்கிக்கொள்ள ஒரு புலிவேண்டும். தருமன் ஆடுபுலி ஆட்டம் ஏன்
விளையாண்டான் என்று இன்றுதான் புரிகிறது. அவனுக்கு முழுவதும் தெரியும் புலி
என்ன செய்யும் என்று ஆனாலும் அவன் புலி முன் தன்னை கொண்டுபோய்
நிறுத்துவான். அவன் இயல்பு அது. துயரின் ஊடாகவே அனைத்தையும் அறியும்
ஊழ்க்கொண்டவன் என்து நிறுப்பிக்க பிறந்தவன்.
உலகை நிறை பொருளாக்கி
அதில்
மனதால் நடந்து சலிக்கும் ஒருவன். உலகை பெரும்
வனமாக்கி அதில் காற்றாய் களிக்கும் ஒருவன். வாழ்க்கையை பூந்தோட்டமாக்கி அதன் வண்ணத்தில்
வாசத்தில் தேனில் சுகிக்கும் இருவன். அவர்களை பிணைத்திருக்கிறது அன்பு. அவர்களுடன் அந்த நதி இருக்கிறது அவர்களுக்கும் முன்னும்
பின்னும் அந்த நதி ஓடிக்கொண்டும் இருக்கும்.
ராமராஜன் மாணிக்கவேல்.