அன்புள்ள ஜெ. வணக்கம்.
நிகரில்லா பெண்ணை
ஆண் தேடுகின்றான். நிகரில்லா பெண் கிடைத்தாலும் அஞ்சுகின்றான். நிகரில்லா பெண் தேடலுக்கு
அவன் ஆணவம் காரணம். நிகரற்ற பெண்ணை இவளல்ல என்று மறுப்பதற்கும் அவன் ஆணவம் காரணம்.
நிகரில்லா பெண்ணுக்கு தலைவன் என்றால் உலகில் உள்ள ஆண் எல்லாம் இவனுக்கு கீழே. நிகரில்லா
பெண் தலைவி என்றால் இவன் அவளுக்கு கீழே. தமயந்தியின் ஓவியம் பார்க்கும் நளனின் மனதில்
எழும் இருவகை ஆணவத்தின் ஆடலை இன்று அழகாக காட்டி உள்ளீர்கள். முன்னது அஞ்சாமைபோன்ற ஆணவம். பின்னது அஞ்சுவதுபோன்ற ஆணவம்.
பேரழகிகள், பேரரசின்
செல்வமகள்கள், நற்பெரும்குணத்திகள் எல்லோரையும் காணும் நளன் இவள் அல்ல நமக்கு உரியவள்
என்று எண்ணுகின்றான். எல்லாதகுதியும் வாய்ந்த தமயந்தியையும் இவள் அல்ல எண்கிறான். முன்னால்
பார்த்த பெண்கள் எல்லாம் அவன் தகுதிக்கு கீழாக தெரிகின்றார்கள். தமயந்தியைப்பார்த்தப்பின்பு
தனது தகுதிக்கு மிகுந்தவளாக தெரிகின்றாள்.மானிட அகத்தின் மெய்அறிவின்மீது அலையென எழும்
ஆணவம் மனிதனை உண்மையை அறியவிடாமல் எப்படி எப்படி எல்லாம் புறட்டிப்போடுகின்றது. உண்மையில்
ஆணுக்கு நிகரான பெண்ணும் இல்லை, பெண்ணுக்கு
நிகரான ஆணும் இல்லை. ஒருவரை ஒருவர் சமன்செய்துக்கொள்கிறார்கள். ஆணவமும் அகங்காரமும்
நசுக்கப்பட்டு நசுக்கப்பட்டு இது நடக்கிறது.
மானிட அகத்தின்
ஆணவ அலைக்கு அப்பால் நிற்கும் யாரும் அந்த ஆடலை அறியமுடியவில்லை. அன்னையாள் நளனை சீண்ட
மட்டுமே முடிகிறது. பிரபையால் நளனை களிப்பிக்க மட்டுமே முடிகின்றது. அசனரால் மட்டுமே அவனை
ஆற்றுப்படுத்த முடிகிறது. அசனர் மட்டுமே நளனின் ஆணவத்தின் இருமுக அலைவிளையாடலை கண்டு
உணர்வுக்கு அப்பால் உள்ள கருத்தை தொடமுடிகின்றது. அவர் எப்போதும் உணர்வுகளின் சலனத்திற்கு அப்பால் நிற்று நோக்குகின்றார்.
அஞ்சுவது அஞ்சாமை
பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்-என்கின்றார் வள்ளுவர்.
அஞ்சல் அறிவார் தொழில்-என்கின்றார் வள்ளுவர்.
அஞ்சுவதற்கு அஞ்சி
பேதமையை ஒழித்தவனுக்கும் ஆணவம் அஞ்சாமையாலும் ஏற்படுகின்றது. அஞ்சுவதாலும் ஏற்படுகின்றது.
அதை அறிவதன் மூலமாகவே கடக்கமுடியும். நளன் தயந்தியை வெல்வதன் மூலமும், தன்னை அவளுக்கு
உரியவளாக ஆக்கிக்கொள்வதன் மூலமாகவம் அறிந்தவனாக ஆகமுடியும் என்பதை அசனர் கட்டி அவனை
தெளிவிக்கின்றார்.
//அசனர் “நீங்கள் அவளை அடைவீர்கள். அவளை வெல்க! அவளுக்குரியவனாக உம்மை ஆக்கிக் கொள்க!” என்றார்.//
அஞ்சுவது அஞ்சாமை ஆணவம் ஆணவம்
கடத்தல் என்று நளன் அகம் விளக்கப்டும் தருணத்திலேயே அவனின் உளம் நிறையும் தமயந்தியின்
குணம் அழகு அறிவு ஆற்றல் என்று விரிந்து அன்னம் என்னும் தூய மென்மையில் மையல்கொண்டு
வந்து நிற்கிறது.
இவளல்ல இவளல்ல என்று ஆண் விளக்கும்
பெண்கள் அனைவருக்குள்ளும் வேறுயாரோ ஒருவருக்கு இவள்தான் என்று உணரும் ஒரு அன்னம் வந்து
எட்டிப்பார்த்து இழுக்கிறது. அந்த அன்னத்தை அறிய ஒரு ஓயா அலை ஒன்று உள்ளத்தில் எழவேண்டும்.
அந்த அலை தமயந்தியின் உள்ளஅன்னத்தால் நளன் உள்ளதில் எழுகின்றது.
தமயந்தி உள்ளத்தை அன்னமாக்கி,
நளன் உள்ளத்தை அலையடங்கா தடாகமாக்கிய விதத்தில் இன்றைய அத்தியாயம்அற்புதமான கவிதை.
ஆண் பெண்ணின் பேரழகை நோக்கவில்லை,
பெரும்செல்வத்தை நோக்கவில்லை, குடும்பம் குலத்தை நோக்கவில்லை, தன் மனதை தடாகமாக்கி
நீந்திகளிக்கும் அன்னமன்ன வெள்ளை உள்ளத்தை நோக்குகின்றான்.
//நான் பார்த்த பல இளவரசிகள் பேரழகிகள். செல்வம் திகழும் நாடுகளுக்குரியவர்கள். நூல் கற்றவர்களும் பலர். நற்குடிப்பண்புகள் கொண்ட முகங்களே மிகுதி. இவற்றுக்கு அப்பால் நான் தேடுவதென்னவென்று நானறியேன்” என்று நளன் சொன்னான்.//
பெண்கள் எங்கும் இருக்கிறார்கள்.
ஆணும் எங்கும் இருக்கிறார்கள். ஊழ்வந்து ஊட்டும்போது
அன்னத்தோடு பெண்ணும், அலையோடு ஆணும் சந்தித்தித்துக்கொள்கிறார்கள். அல்லது அன்னம் வரும்வரை
அலை எழுவதில்லை.
பூஞ்சோலையில்
குயிலாகவும், மலைச்சோலையில் மயிலாகவும், வான்சோலையில் வெயிலாகவும் யார்
இருக்கின்றாளோ அவளோ கமலமாக மலரும்உ உள்ளச்சோலையில்க அன்னமாக இருக்கிறாள்
என்கின்றார் அபிராமிபட்டர்.
குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை, கோல வியன்
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை, வந்து உதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில், கமலத்தின்மீது அன்னமாம்,
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே.-அபிராமி அந்தாதி
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை, வந்து உதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில், கமலத்தின்மீது அன்னமாம்,
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே.-அபிராமி அந்தாதி
நளன் வானத்தின் வெயிலை கமலத்தின் அன்னமாக கண்டுக்கொண்டது அருமை.
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.