தன் நலன்களை அல்லது தான் நம்பும் ஒரு தத்துவத்தை குலைக்க நினைக்கும் ஒருவர் மீது வஞ்சம் இயல்பாக எழுகிறது. இப்படி வஞ்சம் கொள்வது சுயநலம் சார்ந்ததாக இருக்கலாம், அல்லது ஏதாவது தத்துவம் மதம் சாதி மொழி இனம் நாடு போன்றவற்றின் மீதுகொண்ட பற்று காரணமாக இருக்கலாம். அந்த வஞ்சம் அவரை தன் எதிரியாக கருதவைக்கிறது. இப்படி ஏதோ ஒரு காரணமாக ஒருவர் மேல் வஞ்சம் கொள்ளும் ஒருவன் அவரை முற்றிலும் தன் எதிரி எனக்கொள்கிறான். அவரை எப்படி வேண்டுமானாலும் பழிதீர்த்துக்கொள்ள முயல்கிறாரன். அவரை ஒரு தீய சக்தியாகக் காண்கிறான். அந்த நபர் அவனால் அழித்தொடுக்கவேண்டிய அல்லது வீழ்த்தி அடிமைப்படுத்தவேண்டிய ஒருவர் என நினைக்கிறான். அதற்காக அவன் எதைச் செய்தாலும் பிழை இல்லை என அவன் உள்ளம் கருதிக்கொள்கிறது. அதன் காரணமாக வன்முறையை எந்தத் தயக்கமும் இல்லாமல் கையிலெடுத்துக்கொள்கிறான்.
இப்படி தன்னை எதிர்ப்பவரை, வெறுக்காமல், மனதில் அவர் மீதான வன்முறைக்கு ஆட்கொடாமல், எதிர்கொள்ள முடியுமா? இந்தக் கேள்விக்கு பதிலாக தன் வாழ்வையே அர்பணித்துக்கொண்டவர் காந்தி. காந்தி தன் வாழ்வின் முக்கிய நெறிகளாக அஹிம்சை, வாய்மை, எளிய வாழ்வு என்பனவற்றைக் கொண்டிருந்தார். அவர் சொல்லும் தத்துவ தரிசனத்தில் நான் மிகவும் உயர்வாக மதிப்பது தன்னை எதிர்ப்பவர்களிடம் இருக்கும் மனிதத்துவத்தின் மேல் அவர் வைக்கும் நம்பிக்கை. தன்னை, தன் கோட்பாட்டை எதிர்க்கும் ஒருவாக இருந்தாலும், அல்லது தமக்கோ, தம்மைச் சார்ந்தவர்களுக்கோ துன்பமிழைப்பவராக இருந்தாலும், அவருடைய உள்ளத்தின் நல்லெண்ணத்தில் மேல் நம்பிக்கை கொண்டவராக காந்தி விளங்கினார். அந்த நம்பிக்கையே அவரைப்பொறுத்தரை கடவுள் நம்பிக்கை. கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார் எனும்போது தன் எதிரியிடம் மட்டும் இருக்க மாட்டாரா என்ன. தனக்கு தீங்கு இழைக்கும் ஒருவரின் உளத்தில் இருக்கும் கடவுளிடம் முறையிடுபவராக அவர் இருக்கிறார். மற்றவர் உள்ளத்தில் ஒளிந்திருக்கும் அறத்தேவதையை எழுப்ப எப்போதும் அவர் முயல்கிறார். தென்னாப்பிரிக்கா சத்தியாக்கிரகத்திலும் இந்திய சுதந்திரப் போராட்டத்திலும் அவர் எதிர்க்கும் நபர்களின் நல்லெண்ணத்தில் மீது நம்பிக்கைவைத்து மீண்டும் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு முயன்றபடி இருந்திருக்கிறார். கொடுத்த வாக்குகளை மீறிய ஒருவரிடம் மீண்டும் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ள அவர் மறுப்பதில்லை. அவர் ஆதரவாளர்கள் இதற்காக அவர்மேல் கோபம் கொள்வதும், அவர் வழிமுறையில் சலிப்படைவதையும் கண்டிருக்கிறோம். ஒருவனை தோற்கடித்து வீழ்த்துவது உண்மையான வெற்றியல்ல. ஒருவனை உண்மையை அறிய வைத்து சரியான ஒன்றை மனமொப்பி செய்ய வைப்பதே முழுமையான வெற்றி. காந்தி அந்த வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக்கொண்டவர்.
அவரைப்போன்று தருமர், கௌரவர்கள் தங்களுக்கு இழைத்த அத்தனை கொடுமைகளுக்குப்பிறகும், அவர்கள் நல்லெண்ணத்தில் நம்பிக்கை வைத்து மீண்டும் அவர்களுக்கு உண்மையை உணர்த்த நினைக்கிறார். அமைதியான முறையில் தீர்வு கண்பதற்கான அத்தனை வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ள முயல்கிறார். ஒருவர் அப்படி முயன்றும் அறம் நிறுவப்படாதபோது மட்டுமே அடுத்த கட்டத்தைப்பற்றி நினைக்கவேண்டும். ஒருவனுக்கு அப்படி வாய்ப்பளிப்பது ஏமாளித்தனமாக, கோழைத்தனமாக அல்லது பொறுப்பைத் தட்டிக்கழிப்பதாக தோன்றலாம். ஆனால் இன்னும் தருமர் எதிர் நிற்பவர்களின் அறத்தை நம்புகிறார்.
யுதிஷ்டிரர் “அங்கே இருப்பவன் என் உடன்பிறந்தான். அறம் அறிந்த அவன் தந்தை அவனுக்கு நிழலென்றிருக்கிறார். அவருடைய உளச்சான்றென அகத்தளத்தில் மூத்த அன்னை இருக்கிறார். குருவின் குடிமரபின் நீட்சியென பிதாமகர் பீஷ்மரும் நம்மனைவருக்கும் நெறி கற்பித்த ஆசிரியர் துரோணரும் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் கடந்து அங்கு நெறிமீறல் ஏதும் நிகழப்போவதில்லை.
மற்றொன்று, தன்னை எதிர்க்கும் ஒருவன், சில சமயம் கண நேர கோபத்தால், புரிதலின்மையால் அல்லது தவறான கருதலால், நமக்கு இன்னலிழைத்திருக்கலாம். அவர் தன் தவறை உணர்ந்துகொள்ள அல்லது அவருக்கு ஏற்பட்டுள்ள புரிதலின்மையை போக்கிக்கொள்ள, உண்மையை அறிந்துகொள்ள நாம் ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும். ஒருவருக்கு எதிரான செயலில் பாதிக்கப்படுவது தான் எதிர்ப்பவர் மட்டுமல்லாமல் அவரைச் சார்ந்தவர்கள், தன்னைச் சார்ந்தவர்கள் மற்றும் தானும் தான் என்பதை மனதில் கொண்டு நடந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் ஒரு போர், அல்லது எதிர்ப்பவனை தண்டிப்பதற்காக மேற்கொள்ளும் செயல், அது நிகழ்த்தப்பட்டப் பின்னர், தாம் கொண்டிருந்த அத்தனை வஞ்சமும் தன் வேகத்தை இழந்த பிறகு, ஏன் இப்படி நடந்துகொண்டோம் என நாம் வருந்துவது பெரும்பாலும் நடக்கிறது. ஆகவே ஒரு மோதலைத் தவிர்ப்பதற்கான அத்தனை முயற்சிகளையும் எடுத்தோம், எதிரிக்கு போதுமான வாய்ப்புகளை அளித்தோம் என்பது நமக்கு நிறைவளிக்கும் ஒன்றாக இருக்கும்.
யுதிஷ்டிரர் “மனிதர்கள் கற்தூண்கள் அல்ல. தருணங்கள் ஆடும் ஆடிப்பரப்புகள் அவர்கள். மானுடரின் நிலையின்மையை புரிந்துகொள்ளாதவன் அவர்களை வெறுப்பவனாகவே ஆவான். அந்த அவையில் அத்தருணத்தில் அப்படி அவன் வெளிப்பட்டிருக்கலாம். பிறிதொரு தருணத்தில் மேலும் பெரியவனாக அவன் எழக்கூடும். அதற்கான வாய்ப்பை நாம் அவனுக்கு அளிப்போம். அதை அளித்தோம் என்று நாளை நாம் நம்மை எண்ணி நிறைவு கொள்ளவேண்டும்” என்றார்.
அமைதித்தீர்வுக்கான வாய்ப்பளிக்காமல் உடனே போரில் ஈடுபடுபவர்கள் பொறுப்பற்றவர்கள். அவர்கள் எதிரிக்கும் மட்டுமல்லாமல் தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் சேர்த்து துன்பமிழைப்பவர்களாக ஆகிறார்கள். ஆகவே போர் என்ற வார்த்தை, அதற்கான எண்ணம், அமைதித்தீர்வுக்கான அத்தனை வாய்ப்புகளும் இல்லாமல் போகும்வரை எற்படக்கூடாது என்று தருமர் கூறுகிறார். ஒருவர் நாவில் தோன்றும் போர் என்ற வார்த்தையே எதிர்ப்பவர்களுக்கு ஐயங்களைத் தோற்றுவிக்கும் அதன் காரணமாக படைகளைப் பெருக்கிக்கொள்ள ஆயத்தம் செய்வார். அவருக்கு எதிர் நிற்பவரும் அதையே செய்வார். போருக்கான ஆயத்தமே போரைத் தோற்றுவிக்க போதுமான காரணமாக ஆகிவிடும்.
யுதிஷ்டிரர் “இந்த கொள்விளையாடலில் எங்கும் உளம்மறந்தும் நாபுரண்டும்கூட போர் எனும் சொல் எழவேண்டியதில்லை. சொற்களுக்கு விண்ணிலிருந்து நிகழ்வுகளை கறந்தெடுக்கும் திறனுண்டு. போர் என்று சொல்லுந்தோறும் போரை நோக்கி நகர்கிறோம்.
இப்படி எல்லாம் முயன்றும் அமைத்தித் தீர்வை எட்ட முடியாமல் போகும் போது ஒருவன் சும்மா இருந்துவிட வேண்டும் என்பது இதற்கு பொருளல்ல. காந்தி இப்படி பேச்சுவார்த்தைகள் தோல்வியுறும்போது அவரும் போரில் இறங்குகிறார். சட்டமறுப்பு, வரிகொடாமை, ஒத்துழையாமை போன்ற இயக்கங்கள் அவரின் போர் முறைகள். அவர் அனைத்து மக்களையும் போர் வீரர்களாக்கி அவர்களுக்கு பயிற்சியளித்து பெரும் வெற்றிகளை பெருகிறார். தருமர் இத்தகைய அஹிம்சைப் போரை நிகழ்த்தும் நிலையிலில்லை. அதற்கான சமூக அமைப்பு அப்போது இல்லை. களத்தில் வீரர்கள் மோதும் ஆயுதப்போரே ஒரே வழி என இருக்கிறது. அது பல்லாயிரம் உயிர்களை பலிவாங்கும் ஒன்று. அந்த போரை மேற்கொள்ளும் அளவுக்கான காரணம் இருப்பது அவசியம். தனிப்பட்ட பாண்டவர்களின் இழப்புக்காக மனித சமூகம் பேரழிவைச் சந்திக்க வேண்டுமா என்பதை அவர் சிந்திக்கிறார். முன்னர் அப்படி அவர் சிந்தித்து சூதாடுவது என்று எடுத்த முடிவு இப்போரை பதிமூன்று ஆண்டுகாலம் தள்ளிப்போடப்பட்டிருக்கிறது. அவர் ஒருவர் காரணமாக பல்லாயிரம் பேர்கள் பதிமூன்றாண்டு காலம் வாழ்நாள் நீட்டிப்பு பெற்றிருக்கிறார்கள். பெண்களின் மங்களம் பதிமூன்று ஆண்டுகாலம் காப்பற்றப்பட்டிருக்கிறது. பல சிறு குழந்தைகள் இந்தப் பதிமூன்று ஆண்டு காலம் தங்கள் தந்தையரால் போற்றி வளர்க்கப்பட்டிருக்கின்றனர் என்பதை நாம் நினைவில்கொள்ளவேண்டும். ஆனாலும் போர்கள் தவிர்க்க முடியாதவையாக ஆவதுண்டு. அது ஒரு பெரும் அழிவை தடுத்து நிறுத்துவதற்காக, ஒரு மேலான தத்துவத்தை நிலைநாட்டுவதற்காக, சமூகத்தின் தவறான போக்கை மாற்றிச் சீர்திருத்துவதற்காக என ஒரு பெரும் காரணத்தின்பொருட்டு போர் நிகழ்த்தியே ஆகவேண்டிய நிலை ஏற்படும்போது அது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும். அப்போது நாம் அந்தப் போரை ஏற்றுக்கொண்டு அதற்கான தன் பங்களிப்பைச் செய்தே தீரவேண்டும். அப்படிப்பட்ட நிலையில் தானும் போரை ஏற்றுக்கொள்ள தருமர் உடன்படுகிறார். அவர் கண்ணனின்
எனக்கு அவன் இளைய யாதவன் மட்டுமே. ஆனால் பாஞ்சாலரே, அவன் முன்வைக்கும் அந்த மெய்மையின்பொருட்டு என் அரசையும் துணைவியையும் இளையோர் அனைவரையும் மைந்தர்நிரையையும் கொடிவழிகளையும் புகழையும் விண்ணுலகையும்கூட துறக்க சித்தமாக இருக்கிறேன்” என்றார்.
வெண்முரசில் காந்தியத்தின் வழி நடக்க முயல்பவராக தருமரின் பாத்திரப்படைப்பு உருவாகிவருகிறது என்று நான் கருதுகிறேன்.
தண்டபாணிதுரைவேல்