Monday, November 5, 2018

படிமங்கள்




அன்புள்ள ஜெ


சுசித்ராவின் கடிதத்தில் இருந்து ஒரு கருத்து. மேலைநாட்டு பின்நவீனத்துவ எழுத்துமுறை ஏன் நேரடியாக அதிகமான படிமங்களைப் பயன்படுத்தாமல் சொல்விளையாட்டுக்களை நம்பியிருக்கிறது என்பதற்கு இரண்டு காரணங்களை இலக்கியவிமர்சனங்களிலே சொல்வார்கள். அவை ஏற்கனவே எழுதப்பட்டவற்றைத்தான் திரும்ப எழுதுகின்றன. ஆகவே ஏற்கனவே எழுதப்பட்ட வரிகளை அவை ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. அவற்றை மெட்டாஃபிக்‌ஷன் என்று சொல்கிறார்கள். அந்த ஞாபகப்படுத்தல் வழியாகத்தான் அவை ஏற்கனவே இருந்த பெரிய மரபுடன் தொடர்பு கொண்டுள்ளன. ஏராளமான நுட்பமான நூல்குறிப்புகளை அளிப்பதுதான் அவற்றின் வழியாகும். அதை பின்நவீனத்துவத்தின் முன்னோடிகளே செய்தார்கள். அவர்கள் கட்டுரைகளில்கூட ஏராளமான சொல்விளையாட்டுக்கள்தான். அந்தவகை எழுத்து காலியாகிக்கொண்டிருக்கிறது. மகாபாரதம் போன்றவை இன்னமும் நவீன காலகட்டத்துக்காகச் சொல்லப்படவே இல்லை. அவற்றை முதல்முறையாக நவீன காலகட்டத்துக்கான அர்த்தங்களுக்கு கொண்டுவரும்போது அவற்றை இமேஜ்களாகவே நிலைநிறுத்தமுடியும். அவ்வாறுதான் நிகழமுடியும். அப்படி இமேஜ் ஆக நிலைநிறுத்தவேண்டுமென்றால் காட்சிப்படிமம் ஆக மாறித்தான் ஆகவேண்டும். இதை சீன தொன்மங்களைக்கொண்டு எழுதப்படும் நவீன் நாவல்களில் இன்றைக்குக் காணலாம்

சங்கர்ராமன்