Wednesday, May 22, 2019

மெய்மை நோக்கி



அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

புரவிகள் உண்ணப்படுகின்றன.  புரவிகள் குருதி அருந்துகின்றன.  போர்த்தொழில் பயின்றிராதோர் அதன் பெருமையில் ஆவலுற்று பின் அதன் நிஜத்தைக் கண்டு பேரச்சம் கொள்கின்றனர்.  இருட்கனி வாசித்து வரும் இவ்வேளையில் லாரா பெர்கஸ்ஸின் இழப்பின் வரைபடம் நாவலையும் வாசித்து வருகிறேன்.  இரு பெண்களை மையமாகக் கொண்டு அமைந்த அது போர்ச்சூழலில் பெண்கள் எதிர்கொள்ளும் வன்கொடுமைகளை ஆவேசமற்ற முறையில் சுட்டிச் செல்கிறது.

உலகெங்கும் போர்கள் அருவருக்கத்தக்கவை என்ற எண்ணம் இருந்தாலும் அவற்றிற்கு எதிராக பேசப்பட்டாலும் அவை தவிர்க்க முடியாத தேவை என்பதாகவே தோன்றுகிறது.

இங்கே இளைய யாதவர் என்றொருவர் இல்லாவிட்டால் மொத்தமுமே முட்டாள்தனமும் அபத்தமும் ஆகும். விளைபயன் என்றோ கற்றல் என்றோ ஏதும் இருந்திருக்கப்போவதும் இல்லை.  தவிர்க்கப்பட முடியாத ஒன்றிலிருந்து புதிய யுகத்தை, கற்றலை, செல்திசையை, விளைபயனை விளைக்க அவரால் ஆகிறது என்று காண்கிறேன்.  பேராற்றலின் கட்டற்ற வெள்ளத்தை மெய்மை நோக்கித் திருப்புகிறார் அல்லது என்றுமுள்ள அதன் வழிவிலகாமல் பார்த்துக்கொள்கிறார்.  அவர் அதிகபட்சம் செய்யக்கூடுவதும் அதுவே.


அன்புடன்,
விக்ரம்,
கோவை