ஆசிரியருக்கு,
மெதுவாகத் தொடங்கி நீர்ச்சுடர் உச்சம் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. பரசுராமரின் முன் பார்த்தன் நெறி குறித்துக் கேட்கும் போது அஸ்வத்தாமன் யாருடைய நெறி என்கிறார்; இவர்கள் இருவரின் முன்னரா நெறி குறித்துப் பேசுகிறாய்"
ஒருவர் யாதவர், மற்றொருவர் யுயுத்ஸுவா? அவ்வாறெனில், அவர் செய்த நெறி மீறல் என்ன? கௌரவர்களிடமிருந்து பிரிந்து பாண்டவர்களின் பக்கம் வந்ததையா அஸ்வத்தாமர் இவ்வளவு வெறுப்புடன் கூறுகிறார்?
இப்போர் முடிந்தவுடன் தருமன் இயற்றப்போகும் நீர்க்கடனின் நெகிழ்ச்சியான பகுதிக்காக காத்திருக்கிறோம். அங்கர், தன் குருதி மூத்தவர் என்பதை அறியப்போகிறார் அல்லவா.
தாங்கள் என்றோ கண்ட இள வயது கர்ணனை நினைவூட்டும் பிரசேனனை, உச்சி முகரப் போகும் பீமனுக்கும் பார்த்தனுக்கும் ஏன் திரௌபதியே கூட நெகிழலாம், என்ன மாயம் செய்யப் போகிறீர்களோ? காத்திருக்கிறோம்.
சிவதர் மூலம் தாங்கள் ஒரு குறிப்பை விட்டுருக்கிறீர்கள் எங்களுக்கு. "சிவந்து சுழல் கொண்டு புலரி என ஆவது போல" சிவதரின் அப்பேழை திறக்கப்படுமா? யாரிடம் கையளிக்கப்படும், ஒருவேளை அது இப்பொழுது கதைக்குத் தேவைப்படாமல் கூடப் போகலாம். ஆனால், அவ்வாறு எண்ணிக்கொள்ளத் தடையில்லை அல்லவா?
நன்றி
சிவா