களிற்றியானை நிரை - புது மொழியும், இலக்கணமும்
மிகப் பெரிய பாரதப் போர் முடிந்து விட்டது. பழைய நகர் ஒழிந்து புது நகர் எழுந்துவிட்டிருக்கிறது. அப்போரின் மையமே நெகிழ்வற்ற சட்டங்கள், அவற்றை உருவாக்கிய உறைந்த முறைமைகள், அம்முறைமைகளை உருவாக்கிய இறுகிய நெறிகள் போன்றவற்றை அழித்து, அத்தகைய நெறிகளை உருவாக்கிய அறம் தன் புது நெறிகளைக் கண்டடைவது தான். இனி இந்நெறிகள் முறைமைகள் ஆகி, முறைமைகள் சட்டங்கள் ஆக வேண்டும். அனைத்தும் அதன் ஆரம்பத்திற்கு சென்று, மறுபடியும் முதலில் இருந்தே துவங்கியாக வேண்டும். இதோ அதன் அடிப்படையாக ஒரு புது மொழி பிறந்து வருகிறது. இலக்கணமும், இலக்கியமும் அற்ற மொழி. ஒருவரை ஒருவர் தொடர்புறுத்துவதெற்கென்றே உருவாகிய மொழி… அம்மொழியில் கவிதை நிகழும் அக்கணம் மிகப்பெரிய உளஎழுச்சியைத் தந்தது. இனி மொழி சிறகு கொள்ளும். அனைவரையும் ஒன்றிணைக்கும். அதில் புது காவியங்கள் எழும். அதன் பிறகு இலக்கணம் உருவாகும். அத்தகைய ஒரு இலக்கணம் உருவாகி வருகையில் புதிய நெறிகளும், முறைமைகளும், சட்டங்களும் கூட உருவாகி விட்டிருக்கும் இல்லையா. இன்று மக்கள் ஆடும் அந்த நடனம் யுயுத்ஸுவை தன் கையில் எடுத்துக் கொள்ளும் அந்த காட்சி ஒரு மிகச் சிறந்த படிமம். இவ்வளவு எழுதிய பின்னும் இன்னும் சொல்ல எஞ்சியிருக்கிறது இல்லையா ஜெ!!! அன்புடன்,அருணாச்சலம் மகராஜன்