அன்புள்ள ஜெ வணக்கம்.
“சென்று சொல்க அரசரிடம்! நான் அஸ்தினபுரிக்கு வருகிறேன்” அன்னை திரௌபதி ஏன் இத்தனை நீளமாக பேசுகிறாள்?
ஒரு சொல், ஒரு குறிப்பு, ஒரு ரசம் அங்கு போதும்போல் இருந்தது.
ஏன் இப்படி சொல்கின்றேன்? அன்னையெழுகைக்குள் வடிக்கப்படும் திரௌபதி சித்திரம் மாபெரும் உலகோவியமாக எழுந்து நிற்கிறது. வாழ்க்கையின் தரியில் குறுக்கும் நெடுக்குமாக ஓடும் உணர்ச்சிகளின் நுண்ணுணர்வுகளின் திரண்ட வடிவாக திரௌபதி எழுந்து வந்து நிற்கிறாள்.
கதையில் திரௌபதியிடம் மாபெரும் ஒரு உளப்பிரிவு துறவு பாசவிலகள் தோன்றி திரௌபதியை கற்சிலையாக்குகிறது. திரௌபதியை தனிமையில் கொண்டு செல்லும் வாழ்க்கையின் பொருளின்மையை உணர்த்தும் மனஉணர்ச்சிகளை அணிசெதுக்கென செய்து செய்து பெரும்வாழ்வின் மௌனநாடகத்தில் திளொபதியை உணர்ச்சி குவியலாக கட்டிவைக்கிறீர்கள்.
திரௌபதி முன் சொல்லாடும் தருமனின் மாபெரும் அறவோன் என்ற சித்திரம் உடைந்துவிழுந்து நுண்துகளாகிறது. திரௌபதி தருமனை தன்கால்பற்றி மகவென்று ஏற்றுக்கொள் என்ற நிலைக்கு தள்ளியவள் திரும்வி வருவாளா? என்ற ஏக்கத்தை எற்படுத்துகிறது.
திரௌபதி திரும்பி வரவேண்டும் என்றால் வாழ்வின் நீட்சியில் அரசின் அலையில் உலகின் பெருவௌயில் உள்ளத்தின் நுண்வெளியில் அவள் எதை கண்டடையவேண்டும் என்று தேடி சென்று தொட்டு உள்ளீர்கள். அந்த நிலையில் கதை சென்று சேரும் இடம் மாபெரும் கண்டடைதல் தருணம். பரிட்சித்துக்காக என்று உச்சிபுள்ளியை தொடவைத்தீர்கள்.
திரௌபதியை நுண்அரசியல்வாதி, மானிட உள்ளங்களை தாயமென உருட்டி விளையாடக்கூடியவள் உலகத்தாய் என்று உயர்த்துகின்றீர்கள். அவள் ஆளுமையை யுயத்ஸு நினைவுகளின் வழியாக அடுக்கி அடுக்கி காட்டி உலகலாவிய ஓவியத்தை வரைந்துவிட்டீர்கள்.
//இரவின் நிறம்கொண்டவளே, உன்னில் மின்னும் முடிவிலாக்கோடி விண்மீன்களெல்லாம் கதிரவன்கள் அல்லவா? நீ அவற்றைச் சூடிய முடிவிலியா என்ன? அன்னையே, நீ கரந்துள்ள மெய்மைகள் என்ன?” அந்த வரிகள் ஒரு மானுடப் பெண்ணைப் பற்றியவை என்று அவனால் எண்ண முடியவில்லை//
இத்தனை பெரிய சித்திரம் அன்னை திரௌபதிக்கு மாமகுடமாக அமைகிறது. தழிழ் உலகு உள்ளவரை மாட்சிமையுடன் வண்ணம் செழிக்க வளர்ந்தோங்கும் //இரவின் நிறம்கொண்டவளே, உன்னில் மின்னும் முடிவிலாக்கோடி விண்மீன்களெல்லாம் கதிரவன்கள் அல்லவா?// எல்லா கதிரவனும் அவளுக்கு விண்மீன்கள் மட்டும்தான். ஆகா..ஆகா..உலத்தாய் என்பது இதுதானா? இவளா, கர்ணனுக்கு ஏங்கி இருப்பாள்? இந்த வார்த்தையோடு தருமனின் இழிசொல் சேரும்போது அவன் எத்தனை பெரிய பாதாளத்தில் விழுந்தவன் ஆகிறான். உன்னில் மின்னும் முடிவிலாக்கோடி விண்மீன்களெல்லாம் கதிரவன்கள் அல்லவா? இந்த ஒருவரியை வைத்துக்கொண்டு சாக்தர்கள் எத்தனை பெரிய உரையை எழுதி எழுதி ஆனந்தப்படமுடியும்.
கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள-என்றுதான் வள்ளுவர் சொல்கிறார். யுயுத்ஸு அன்னை திரௌபதி திருக்குறளையும் தாண்டிச்செல்கிறாள் என்று காட்டுகின்றான். அவள் முன் தன்னை ஒப்புக்கொடுப்பதுதான் அவளை அணுகும் வழி என்று சிறப்பாக கண்டு நிறைவடைகிறான். குலத்தால் வாழ்க்கையால் உடையால் சொல்லால் நிறையாதவன் நிறையும் அற்புத தருணம்.
.
பகவான் யோகி ராம்சுரத்குமார் அன்னை ஸ்ரீஅமிர்தானந்தமயி திருவண்ணாமலை வந்தபோது காளியை தரிசித்தேன், தரிசியுங்கள் என்கிறார். என் உள்ளத்தில் அப்பாவால் அன்னை அமிர்தானந்தமயி கண்ணனாகவே இருந்தார். யோகி ராம்சுரத்குமாரின் வார்த்தைகளை வாசித்து முடித்தபோது கண்ணனே காளியாக மாறும் ஒரு கணம் உள்ளத்தில் எழுந்து வந்தது. யுயுத்ஸு கண்ணனுக்கு நிகராக திரௌபதியை வைக்கும் தருணத்தில் கண்ணனே திரௌபதியாக, திரௌபதியே கண்ணனாக உள்ளத்தில் தேரான்றும் கணத்தை வெண்முரசு எழுப்பியது.
எத்தனை பெரிய உளவியல், எத்தனை பெரிய நுண்ணுணர்வுகள் செறிந்த இந்த அன்னையெழுகை அத்தியாயத்தில் அன்னை திரௌபதி நீளமாக பேசியது நாம் பூமியில்தான் இருக்கிறோம். திரௌபதி மானிடபெண்தான் என்பபோல் காட்டியது. அதனால்தான் அந்த கேள்வியை எழுப்பினேன்.
தெய்வமாக இருந்தாலும் அன்னையாக ஆகும்போது அவள் மண்மீது நடப்பவள்தான்.
அன்னையெழுகையில் திரௌபதி உலகோவியம்.
அன்பும் நன்றியும்.
ராமராஜன் மாணிக்கவேல்.