Thursday, October 30, 2014

பிரயாகை 7 - உடலை நடுங்க வைக்கும் அறம்




அன்பு ஜெயமோகன்,
/*தருமன் உடல் மெல்ல நடுங்கிக்கொண்டிருப்பதை அர்ச்சுனன் கண்டான்.*/ உள்ளுக்குள் ஒன்றாகவும், வெளியில் வேறாகவும் தருமன் இருப்பதை நுட்பமாகச் சொல்லும் இடம். தருமனால் அறத்தின் நீதியையும் கைவிட மனமில்லை; அரசாட்சியின் ருசியையும் புறந்தள்ள இயலவில்லை. சிறுவயதில் தனக்குச்சொல்லப்பட்ட கதைகளின் அனுபவத்திலிருந்தே அவன் தன்னைக் கட்டமைத்துக் கொண்டிருக்கிறான். அக்கட்டமைவாலேதான் விடிவெள்ளிக் கதை அவனை விடாது துரத்தியபடி இருக்கிறது. அக்கதையே அவனுக்கு அறம்தவறிய நாளின் அடர்இருட்டை ஞாபகமுட்டவும் செய்கிறது. /* என்றோ ஒருநாள் மண்ணில் அறம் முற்றாக அழியும். விடிவெள்ளியாக வந்த தெய்வம் சூரியனுக்கு வரவேண்டியதில்லை என்ற செய்தியை அனுப்பும். அந்தக்காலையில் சூரியன் எழமாட்டான். மண்ணிலுள்ள உயிர்களெல்லாம் பரிதவிக்கும். அஞ்சி அழுது முறையிட்டு இறைஞ்சும். ஆனால் ஒருமுறை பாதை பிழைத்த கதிரவன் பின்னர் பிரம்மத்தின் ஆணையின்றி வரவே முடியாது. மண்ணுலகின் அத்தனை உயிர்களும் ஒருவரோடு ஒருவர் முட்டிக்கொண்டு கதறுவார்கள். அதுவரை பேணிக்கொண்ட பகைமையை முற்றாக மறப்பார்கள். அக்கணம்வரை தேடிய செல்வங்களை எல்லாம் அள்ளி வீசி சூரிய ஒளி மட்டுமே போதுமென்று கூவுவார்கள். ஆனால் அந்தக்குரல்களைக் கேட்க விண்ணில் சூரியன் இருக்கமாட்டான். ஒவ்வொருவரும் தங்கள் குலதெய்வங்களிடம் மன்றாடுவார்கள். அத்தெய்வங்களோ விண்ணளக்கும் சூரியன் இல்லையேல் நாங்களும் இல்லாதவர்களே என்றுதான் பதில் சொல்வார்கள். பூமி அழியும். இருளில் அது அழிவதை அதுகூட பார்க்கமுடியாது */ இருமைகளால் ஊசலாடும் தருமன் தனது அலைபாய்தலை அவற்றைப் பகிர்ந்து கொள்வதன் ஊடாக சமன் செய்ய நினைக்கிறான். அறம் தொடர்பான சிந்தனையே தருமனைத் தொடர்ச்சியாய்க் கலங்க வைக்கிறது. எனினும், அறத்தை முழுமையாய்த் தொடர்ந்துவிடமுடியுமா எனும் குழப்பமும் அவனுக்குள் மறைவாய் இருந்தபடியே இருக்கிறது. உள்ளிருக்கும் தெளிவு, வெளியிலிருக்கும் குழப்பங்களுக்கு விடையாகி விடுவதில்லையே எனும் கடுங்கோபத்தை வார்த்தைகளால் ஈடு செய்வதற்கு தருமன் தொடர்ந்து போராடுகிறான்.
அறத்தை வரையறுக்கச் சொல்லித் தெரிந்து கொண்டுவிட்டால் ஒருவேளை அறம் தரும் பயத்திலிருந்து விலகிவிடலாமோ என்றும் தருமன் நினைக்கிறான். /* எது நிலைபெயராததோ அதுவே அறம் என்றார். ஒன்று இப்போது இச்சூழலுக்குச் சரி என்று தோன்றலாம். அது எப்போதும் எச்சூழலுக்கும் சரியென்று நிலைகொள்ளுமா என்று பார்நிலைகொள்ளுமென்றால் அதுவே அறம் */ அறத்திற்கான தந்தையின் வரையறை துருவனாகக் காட்டப்படுகிறது. நிலைபெயராத அறம் என்று உண்டா எனும் புதிய கேள்வி தருமனுக்கு பெருமூச்சாக வெளிப்படுகிறது. அறக்குழப்பம் வரும்போது கொஞ்ச நேரம் தனித்து வந்து வான்நோக்கினால் துருவன் அதைத்தெளிய வைப்பான் என தருமனின் தந்தை சொல்வதன் ஊடாகச் செல்லும் ஒருவன் அலைபாய்தலுக்குள்ளேயே இருக்கும் நிலைபெயராமையைக் கண்டுகொள்கிறான். கண்டுகொண்டவுடனேயே அவன் அறத்திடம் சரணடைந்துவிடுவதில்லை. தனித்திருக்கும்போது அறமற்ற வாழ்வின் நினைவு சுடுகிறது; கூட்டத்தில் அறம் பொருளற்றதாகத் தெரிகிறது. தனிமனிதனுக்கா, சமூகத்துக்கா.. அறம் யாருக்கானது?
/*இங்கு நாம் மாபெரும் மாயையால் கட்டப்பட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறோம். உறவாகஉணர்ச்சிகளாக நம்மைச் சூழ்ந்திருப்பது மாயையின் அலைகளே. நம் தெய்வங்களும் மாயையின் தோற்றங்களே. மாயை இல்லையேல் நாம் வெட்டவெளியில் நிற்கவேண்டியிருக்கும். தெய்வங்களின் துணைகூட இல்லாமல் தனித்து நிற்கவேண்டியிருக்கும். யோகிகள் மாயையைக் களைந்து வெறும்வெளியில் நிற்கலாம். நம்மைப்போன்ற எளியோர் நிற்கலாகாது.நம்மைச்சூழ்ந்திருக்கும் இந்த மாயையைக் களைந்து உண்மையை நமக்குக் காட்டும் ஒவ்வொன்றும் இந்த வாழ்க்கையில் தீங்கையே அளிக்கும் */  மாயைகளுக்கும், மாயை கடந்து மாயைகளை உள்ளடக்கி இருக்கும் பரம்பொருளுக்குமான ஊசலாட்டத்தைத் தருமன் வழியே கொட்டித்தீர்த்து விடுகிறது பிரயாகை. பரம்பொருள் அறமாக இருக்க, மாயைகள் ருசிகளாக இருக்கின்றன. அறத்திற்கு ருசிகள் பொருட்டில்லை; ருசிகளோ அறமின்றி இல்லை. உடல் மெல்ல நடுங்குகிறது.
முருகவேலன்(சக்திவேல் ஆறுமுகம்)  

பகடியின் திரை

[கலம்காரி கம்பள ஓவியம்]



ஜெ சார்

பயங்கரமான போர், உணர்ச்சிகரமான நாடகத்தருணம், இரண்டும் முடிந்தபின் மிக அமைதியான ஒரு உரையாடல்காட்சி  பிரயாகை 11

ஆச்சரியம் என்னவென்றால் இந்த காட்சியும் அதே அளவுக்கு தீவிரமானதாக மனசைக்கவர்கிறது என்பதுதான். பலமுறை இந்த அத்தியாயர்த்தை வாசித்தேன். இதிலுள்ள நுட்பமான பகடி எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. ஆனால் அந்தப்பகடியை இவர்கள் ஒரு ஆழமான விஷயத்தைச் சொல்ல பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பது ஆச்சரியம் அளித்தது

அதாவது பேசவேண்டியது ஆழமான , உணர்ச்சிகரமான விஷயம். அதை ‘பொதுவா வாழ்க்கைன்னா’ என்று பேச ஆரம்பித்தால் செயற்கையாக ஆகிவிடும். ஆகவே அதை ஜாலியாக வேண்டுமென்றே பேசுவதுபோல ஆக்கிக்கொள்கிறார்கள். பீமன் வாரிக்கொண்டே இருக்கிறான். ஆனால் அவன் பேசுவது ஆழமான உணர்ச்சிகரம்

அந்த நாடகம் மிக அழகாக வந்திருக்கிறது. வாளால் வெட்டிவிட்டு அதே வேகத்துடன் குண்டூசியாலும் குத்துவதுபோல மென்மையான அத்தியயாம். ஆனால் ஆழமான அத்தியாயம்

மூன்றுபேருடைய மனசும் அற்புதமாக வந்துவிட்டது.

சாரங்கன்

பிரயாகை 11 -கடிதம்

 
 
 
பிரயாகை 11, இது தான் உங்களின் தர்க்கம். சகல திசைகளிலும் நின்று அவரவர் பார்வையில் உள்ள உண்மை சொல்லி, இறுதியில் எல்லாவற்றிற்கும் மேலான ஒரு உண்மை அல்லது நெறி சொல்லி செல்வது அத்வைதி ஜெயமோகன் சுவாமிகளின் விசேடம். வேண்டியதற்கு வேண்டிய நியாயம் வேறு. நெறி நியாயம் வேறு. வளைத்து  மதிக்க முடியாத வழுவா நெறி. ஆடினாலும் நிற்பது தருமனின் ஊசி முனை.

வழக்கம் போல் ஒரு உச்சக்கட்ட உணர்ச்சி வெள்ளம் வடிந்து சென்றபின் நெகிழ்ந்த ஓடையாய் இந்த பகுதி. அநேகமாய் தருமன் மத்திம வயது நோக்கி செல்வது போல் தெரிகிறது. 


--> சற்று அதிசயமாக உள்ளது. காசர்கோட்டில் தனிமையில் உறக்கமின்றி திரிந்து படித்து பேயனாய் உக்கிரன் போல்  உணர்ச்சி பிரவாகம் இருந்த மனதில் எப்படி இந்த மெல்லிய கூர் அம்பு சீராக செல்வது போல் rational mind 


--> அறிமுக விழா அழைப்பிதழ் கண்டேன். "உலகின் மிக பெரிய நாவல் வரிசை"  நம்பிக்கைக்கு வாழ்த்துகள். அற்புத கனவு மலர்ந்து முடியும் வரை காத்து நிற்கட்டும் அந்த விவரிக்க முடியா அழகில் உறங்கும் உங்களின் விஷ்ணு 

மீண்டும் மனமார்ந்த வாழ்த்துகள்.  

அன்புடன்,
லிங்கராஜ்

பிரயாகை போர்வெளி




 அன்புள்ள ஜெ,

பிரயாகை தகவல்களின் பிரவாகமாக பொங்கி பெருகிக்கொண்டிருக்கிறது. சொற்கனலின் அத்தியாயங்களில் போர் என்பது களிப்பூட்டும் ஒன்றாகவும், சலிப்பூட்டும் ஒன்றாகவும், அச்சமூட்டும் ஒன்றாகவும் மாறி மாறி வருகிறது.

பாரத யுத்தத்தின் போது பயன்படுத்தப் பட்ட வியூகங்களின் பெயர் மட்டுமே எனக்குத் தெரியும். அர்த்த சந்திர வியூகம் மட்டுமே அவற்றில் எளிதாக கற்பனை செய்ய முடிந்திருந்தது. ஆனால் இதில் வரும் கடக வியூகமாகட்டும், கஜ ராஜ வியூகமாகட்டும், கழுகு மற்றும் ராஜாளி வியூகங்களாகட்டும் விவரணைகளால் துல்லியமாக கண் முன் காண முடிந்தன. 

தங்களின் பூவிடைப்படுதல் உரை நினைவுக்கு வந்தது. குறுந்தொகையில் வரும் பூக்களின் தன்மைகள் எப்படி தலைவியின் அகத்துக்கு உதாரணமாகிறது என்பதைச் சொல்லும் போது பூக்கள், மரங்கள், மிருகங்கள் அனைத்தோடும் நம் முன்னோர்களுக்கு இருந்த புரிதலை, தொடர்பை விளக்கியிருப்பீர்கள். எவ்வளவு தூரம் இயற்கையோடு இயைந்த ஓர் வாழ்வு வாழ்ந்திருந்தால் போருக்கான வியூகங்களைக் கூட அவற்றிலிருந்து பெற்றிருக்க முடியும்? கழுகு வியூகத்தில் துருபதன் வரும் போது தருமன் சொல்கிறான், 'சத்தமில்லாமல் வந்திருக்கிறான்' . அதற்கு அர்ஜுனனின் பதில், 'கழுகு ஓசையிடாது. வியூகத்தில் அந்த உயிரினத்தின் அமைப்பு மட்டும் அல்ல இயல்பும் கருத்தில்கொள்ளப்படும்'. மீண்டும் மீண்டும் அவர்களின் நுண்ணுர்வினைக் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை.


தருமனின் ஆளுமை கொஞ்சம் கொஞ்சமாக எங்களுக்கு தெளிவாகி வருகிறது. சொல்லப்போனால் இன்றைய நடுத்தர வர்க்க மனநிலை என்பதை தருமனிடம் தான் பார்க்க முடிகிறது. தான் அறம் என்று நினைக்கும் ஒன்று மீறப் படும் போது கண்ணீர் விடுகிறான். ஆனால் தன்னவர்கள் என்று வரும் போது அதை மீறவும் சித்தமாக இருக்கிறான். வெகு சீக்கிரம் பதற்றம் கொள்கிறான். அவசரம் கொள்கிறான். 'ஐயோ, அவர்கள் கிளம்பி விட்டார்களே, நாம் இன்னும் கிளம்பவில்லையே', என அங்கலாய்க்கிறான். கௌரவர்களின் போரின் போது பல முறை நாம் செல்ல வேண்டும், அவர்களைக் காக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டேயிருக்கிறான். பிறரைத் துன்புறுத்தாத அதிகாரத்திற்கு ஆசைப் படுகிறான். அவ்வகையில் என் மனதுக்கு நெருக்கமானவனாகத் தருமனைப் பார்க்கிறேன். 


ஆனால் இவற்றுக்கும் அப்பால் தருமன் தன் தந்தையைப் பற்றி சொல்லும் இடங்களில் மனம் நெகிழ்ந்தது. மழைப் பாடலில் பாண்டுவின் மரணத்துக்குப் பிறகு அவனைப் பற்றி ஒவ்வொருவரும் நினைப்பதை ஜெ எழுதி இருந்தார். ஆனால் தருமனின் எண்ணங்கள் வரவே இல்லை. ஒரே ஒரு வரி, அதுவும் குந்தியின் கூற்று. அவன் சிதைக்கு தீயிடும் போது அவன் கண்ணில் தெரியும் தனிமை. இங்கே தருமன் தான் ஒவ்வொரு கணமும் பாண்டுவோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று சொல்லும் போது வாழ்வாங்கு வாழ்வதன் அர்த்தம் புரிகிறது. பாண்டு தெய்வத்துள் வைக்கப்பட்டு விட்டான்.

மீண்டும் குஹ்ய மானசம் பற்றி வருகிறது. அதில் விசித்திர வீரியன் தன்னைப் பார்த்த போது அவனுக்குத் தெரிவது சித்திராங்கதன். உண்மையில் அது நாம் யாராக நம்மை நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதைக் காட்டும் ஓர் ஆடி. நம் மனதின் அடியாழத்தை நமக்கே காட்டுவது. நிச்சயமாக அது நமக்கு உவப்பானதாக இருக்காது. சிலரால் அந்த பிம்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத போது மரணம் தான் நிகழும். அது தான் சித்திராங்கதனுக்கு நிகழ்ந்தது. முதற்கனலில் சித்திராங்கதன் தன் ஆடிப் பிம்பத்தோடு போரிடுவதாக வருவதன் அர்த்தம் இன்று தான் புரிந்தது. அதில் தன்னைப் பார்த்தும் மகிழ்வோடு இருந்தவன் விசித்திர வீரியன் மட்டும் தான். அந்த சுனையின் இட அமைவுக்கு தருமன் தரும் விளக்கம், 'இங்கு நாம் மாபெரும் மாயையால் கட்டப்பட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறோம். உறவாக, உணர்ச்சிகளாக நம்மைச் சூழ்ந்திருப்பது மாயையின் அலைகளே. நம் தெய்வங்களும் மாயையின் தோற்றங்களே. மாயை இல்லையேல் நாம் வெட்டவெளியில் நிற்கவேண்டியிருக்கும். தெய்வங்களின் துணைகூட இல்லாமல் தனித்து நிற்கவேண்டியிருக்கும்.' ஆம் அந்த சுனை யாருமற்ற ஓர் வெட்ட வெளியில் தான் இருக்கிறது. காற்று கூட வராத ஓர் இடம். மாயை விலகிய ஓர் இடம். அதனால் தான் உண்மையான நம்மை அது காட்டுகிறது. ஒருவேளை அதில் தருமன் பார்த்திருந்தால் அதில் கர்ணன் தெரிந்திருப்பானோ?


அன்புடன்,
அருணாச்சலம், நெதர்லாந்து

வண்ணக்கடல் -குருபூர்ணிமை-ராமராஜன் மாணிக்கவேல்



அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

அரசமர நிழலில் அலைகூந்தல் உலர்த்திக்கிடக்கும் குளக்கரையில் உட்கார நேரம் கிடைத்தவன் ஆசிர்வதிக்கப்பட்டவன்.அப்படி ஒரு ஆசிர்வதிக்கப்பட்டவன் கங்கைகரையில் கங்கைகரையில் உட்கார நேரம் அருப்பட்டதைப்போல் உணர்கின்றேன் வெண்முரசு படிக்கும் தருணத்தை.
குளத்தின் அலையோடு விளையாடும் உற்சாகத்தில் அதற்குள் கல்லெறியும் சந்தோஷத்தில் எழுதியவைகள்தான் வெண்முரசுக் கடிதங்கள்.


குளத்திற்குள் எரிந்த கல் குளத்திற்குள் அலையெழுப்பி அமிழ்ந்துப்போவதே ஒரு சுகம் அது அந்தநேரத்தோடு இணைந்தது.


என்ன ஒரு ஆச்சர்யம் குளத்திற்குள் விழுந்த கற்களை எல்லாம் நீரணங்கு மேலெடுத்துவந்து தந்தபோல் இருந்தது விவாததளத்தில் கடிதங்களை மீண்டும் படித்தது.
மனிதன்தந்தால் கல் மீண்டும் கல்லாகத்தான் திரும்பிவரும், தேவதை தந்ததால்  கல்லெல்லாம் பூவாக முத்தாக மணியாக ஆனதுபோல் இருக்கின்றது.
ஆரைக்கீரைக்கு ஒரு தண்டும் நான்கு இதழ் இலையும்தான் இருக்கும் அதைப்பார்க்கும்போது இதற்கு என்ன பெரும்பேறு இருக்கமுடியும் என்று எண்ணுவேன்.அதுவும் தன்னை ஒருதாவரமாகக்காட்டிக்கொள்கின்றதே என்ற வியப்பதுண்டு

வெண்முரசு என்னும் பெரும் கங்கையின் இடையில் அந்த ஆரக்கீரை இருந்தால்  அதைகூட கங்கை தலைதடவி ஆசி அளித்துவிட்டு செல்கின்றது என்பதைக் கண்டுக்கொண்டேன். மீண்டும் உங்கள் தாயுள்ளத்தை வியக்கின்றேன் வணங்குகின்றேன். “சிரஞ்சீவிகள் ராமராஜன்மாணிக்கவேல்”  கடிதத்திற்கு அடியில் என் புகைப்படம். எனது எல்லா கடிதங்களும் பூத்திருக்கும் அழகு.எல்லா கடிதத்தையும் ஒரே மூச்சில் படித்தேன்.தூங்காமல் மீண்டும் கடிதம் எழுத நினைத்தேன்.மூன்றுநாள் ஆறப்போட்டேன்.வண்ணக்கடலில் நீந்தினேன்.


பெரியோர்கள் இந்த உலகத்தை அளவில்லாமல் நேசிக்கிறார்கள், இந்த உலகத்தில் உள்ள எளிய உயிர்கள் இன்பம் அடைவதற்காக என்பதை உங்கள் மூலம் காண்கின்றேன்.
 ”யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்


எல்லோதும் இன்புற்ற இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமேஎன்ற நம்முன்னோர்கள் எல்லாம் வெறும் சொல் சொல்லவில்லை, உலகத்தின் உயிர் எது என்று சொல்லிச் சென்று இருக்கிறார்கள்.
விதிசமைப்பவர்கள் அதை உலகில் நடைமுறைப்படுத்திப்பார்க்கிறார்கள்.நீங்ககள் சொல்லென்னும் அமுது சமைப்பவர்.


சொல்லில்நிற்கும்பொருள்என்பதுஉடலில்நிற்கும்உயிர்போலஒருதற்காலிகலீலை.இங்கேஇப்போதுஇச்சொல்லில்இப்பொருள்நிற்கிறதுஎன்றவகுத்தறிவைநிருக்தம்என்றனர்முன்னோர்.ஒவ்வொருசொல்லும்பொருள்குறித்ததுவேஎனநிருக்தத்தின்முதல்விதியைஅகத்தியமாமுனிவர்சொன்னார்.எங்குஎப்படிசொல்லில்பொருள்தங்குகிறதென்றறிந்தவன்மொழியைஅறிந்தவனாகிறான்.மொழியைஅறிந்தவன்அறிவையும்அறிவைஅறிந்தவன்அகிலத்தையும்அறிந்தவனாகிறான்”-வண்ணக்கடல்-42.


அகிலத்தை அறியத்தான் எல்லா சொல்லும் அது அமுதமாகவும் இருப்பது எத்தனைப்பெரிய இறைகடாச்சம்.
நன்றி

குலதெய்வம் கோயில் குலதெய்வத்தை மறைத்துக்கொண்டு குதிரை நிற்பது தெரிகின்றது.

சின்னதும் பெரிதுமாக மண்குதிரைகள் வாங்கி குலதெய்வம் கோயிலையே குதிரைவனமாக்கவிடும் மக்களின் ஆவல் எதை நோக்கி செல்கின்றது.

தன் வயிற்றில் உதித்த ஒன்றாவது குதிரைவீரனாகி குலம்காக்கும் தெய்வமாகிவிடவேண்டும் என்ற தவிப்பு தெரிகின்றது.

ஸ்ரீமதுரைவீரதுரையும், ஸ்ரீ வாழவைக்கும் வண்டித்துரை கருப்பசாமியும், ஸ்ரீஐயானார் அப்பனும் அன்னையர் வேண்டுதலுக்கு அருள்புரிந்து உலகத்தில் தருமம் தழைக்க பாடுபடும் குலசாமிகளை கொடுக்கட்டும். குருபூர்ணிமாவில் இப்படி ஒரு வேண்டுதல் அமைய வியாசரின் மாகபாரதம் காரணம், திரு.ஜெவின் வெண்முரசு காரணம், துரோணரும் அர்ஜுனனும் காரணம் அவர்கள் அனைவரின் திருவடிக்கும் எனது பணிவான வணக்கம்.


அவனைப்பிரியமுடியாதகுதிரைவீட்டுவாயில்வழியாகபாதிஉடலைஉள்ளேநுழைத்துகுரல்கொடுக்கும்.இரவில்துயின்றுகொண்டிருப்பவனைஎழுப்பமுற்றத்தில்வந்துநின்றுபெருங்குரல்எழுப்பும்”-மழைப்பாடல்-43

பிரயாகை-7-அர்ஜுனன் பார்வையும், அறத்தின் பார்வையும்



அன்புள்ள திரு.ஜெ வணக்கம். இந்த வணக்கம் ஒரு உபச்சாரமான வணக்கம் இல்லை. பிரயாகை-7 எழுதியதற்காக உங்கள் அகத்திற்கான வணக்கம். வெண்முரசை இவ்வளவுநாள் படித்ததற்கான பெரும் நன்மையை இன்று அடைந்தேன்.

அற்புதமான எழுத்து, எழுத்து வழியாக அற்புதம் சொல்லும் படைப்பு. கதையைத்தாண்டி, கதைசொல்லும் சொற்களைத்தாண்டி, சொற்கள் தரும் பொருள்தாண்டி எதற்காக படிக்கவேண்டுமோ அதற்கான எழுத்து. அப்படிப்பட்ட பெரும்பொருள் கொண்ட சொற்களால் ஆனநூல் வெண்முரசு.

அர்ஜுனனின் பார்வை.

அர்ஜுனன் யார்? உடலா? உள்ளமா? அறிவா? என்றால் அவை எல்லாம் இருக்கலாம். திரு.ஜெ எப்படி அர்ஜுனனை படைத்து உள்ளார் என்றால் விழிகாளால் ஆனவன் அர்ஜுனன். உடல் உள்ளம் அறிவு அனைத்தாலும் விழியானவன் அர்ஜுனன். உடல் என்றாலும் புலன்களும் சேர்ந்ததே  புலன்கள் எல்லாம் கண்கள் ஆனவன் அர்ஜுனன். ஜெ ஏன் அர்ஜுனனை  கண்களால் ஆனவானாகப் படைக்கின்றார் என்று என்னும்போதுதான் ஒன்று நினைவில் வருகின்றது. இந்திரன் மகன். இந்திரன் அங்கம் முழுவதும் ஆயிரம் கண்கொண்டவன். ஜெவின் ஞானம் கதையாக வழிந்து தன்னை கதை அலங்காரத்தில் மறைத்துதுக்கொள்கின்றது.  

வண்ணக்கடலில் அர்ஜுனன் இரவில் உணவு உண்ணும்போது அருகில் இருட்டில் பறக்கம் பூச்சியைப்பிடிப்பதை கண்டு துரோணர் திடுக்கிட்டு அன்றுதான் அவன் முன் ஒரு தந்தையாக பணிகின்றார். அப்போது அந்த இடம் அழுத்தம் நிறைந்தது என்று அறிந்தேன் ஆனால் ஆழம் அறியவில்லை. ஆழத்தோடு அறியும் அழுத்தம்தான் எத்தனை சித்ரவதையும், ஞானத்தையும் அளிக்கிறது.
நேற்று பிரயாகை-6ல் அர்ஜுன் ஹரிசேனரைப்பற்றி என்ன நினைக்கிறான் அவன் பார்வை என்ன என்பதை ஜெ கீழ்கண்டவாறு காட்சிப்படுத்துகின்றார்.   

//ஹரிசேனர்தான் முதலில் வந்தார்அவரைப்பார்த்ததும் பீஷ்மர் என்று அர்ஜுனன் சிலகணங்கள்எண்ணிக்கொண்டான்அதே போன்ற உடலசைவுகள் அதே தாடிஅவரது பேச்சும் குரலும்கூடபிதாமகரைப்போன்றே இருக்கும்ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக பிதாமகருடன் இருப்பவர்பிதாமகர்கானேகிவிட்டால் மேலெழுந்து பிதாமகராகவே ஆகி படைக்கலப்பயிற்சிநிலையத்தைநிறைத்துவிடுவார்அங்கே பிதாமகர் இல்லை என்றே தெரியாது//

இன்று பிரதீபன் பற்றி அர்ஜுன் பார்வை எப்படி உள்ளது என்பதை கீழ்கண்டவாறு காட்டுகின்றார்.
//மறைந்த தளகர்த்தர் சத்ருஞ்சயரின் மைந்தன் பிரதீபன்அவனுக்கு அவருடைய உடலசைவுகளும்விழிமொழியும் இருந்தன//

பிரயாகை-5ல் கர்ணன் வரும்போது தருமன் அவனை ஒரு தேவனாகவே காண்கின்றான் ஆனால் அவனை கண்டு அச்சம் கொள்கின்றான். அர்ஜுனன் கர்ணனைக்காணும் பாங்கே முற்றாக மாறாக உள்ளது. அர்ஜுனன் ஒருவனே கண்கொண்டவன் என்று நினைக்கும் அளவுக்கு காண்கின்றான். முழுமையுடைய ஆணை முழுமை உடைய பெண் காணும் கண்களால் காண்கின்றான். அர்ஜுனன் பெண்ணாக இருந்தால் கர்ணனைக்காதலித்து இருப்பான்.
//அவன் கர்ணனையே நோக்கிக்கொண்டிருந்தான்எப்போதும் போல எத்தனை உயரம் என்று முதலில்வியந்தது சிந்தைபின் எவ்வளவு பேரழகன் என்று பிரமித்ததுஅவன் தோள்களைபுயங்களைமார்பை,இடையைகண்களைமென்மீசையை நோக்கிக்கொண்டே நின்றான்//

அர்ஜுனன் தருமனின் அகத்தை அறிந்து அதை உடைத்து வெளிக்காட்டுகின்றான் என்று நினைக்கும்போதிலே அவன் தருமனை தனது தந்தை பாண்டுவின் மறுவடிவம் என்றும் காணுகின்றான் என்பது இதனால் அறியமுடிகின்றது. பாண்டு இல்லாத இடத்தை தருமன் நிரப்பிக்கொண்டும் உள்ளான் என்பதை அறிகின்றான்.

இன்று பிரயாகை-7ல் காலையில் எழுந்தபோது தான் தூங்கப்போகப்போகும்போது போத்திக்கொள்ளாத சால்வையை எழும்போது போத்திக்கொண்டு இருப்பதைக்கண்டு அதை அறிகின்றான். தருமனில் பாண்டுவைக்கண்டு புன்னகைக்கிறான்.
//முகப்பில் சென்ற படகிலிருந்து எழுந்த கொம்பொலி கேட்டு அர்ஜுனன் எழுந்துகொண்டான்.சால்வையை நன்றாக இழுத்துப்போர்த்தியிருந்தான்எழுந்தபோது அது காலைச்சுற்றியதுபடுக்கும்போதுசால்வையுடன் படுக்கவில்லை என்பது நினைவுக்கு வந்ததும் கைகளை விரித்து சோம்பல்முறித்தபடிபுன்னகைசெய்தான்//

அர்ஜுனன் ஏன் கீழ்கண்ட இடத்தில் கங்கையை உயரத்திலும், சமதளத்திலும் ஏன் பார்க்கின்றான்? கங்கையின் வழியாக அர்ஜுன் தருமனையே காண்கின்றான்.
//கங்கையில் இமயம் நோக்கி மேலே செல்லுந்தோறும் கரை நீருக்கு மிக அண்மையானதாகவும்மரங்களடர்ந்ததாகவும் இருக்கையில் கீழ்நோக்கி வர வர விரிந்த கரைச்சதுப்பும் மணற்பரப்பும்கொண்டதாக ஆவதை அர்ஜுனன் கண்டான்//

தருமனின் சுயநலம், அறம் நாடும் உயர்ந்த குணம் இரண்டையும் அர்ஜுனன் காண்பதை கங்கையை படிமமாக்கி ஜெ காட்டுகின்றார். இந்த இடத்தில் தருமனை முழுவதும் அறிகின்றான் அர்ஜுனன். தருமன் உயரத்தில் தருமத்தின் கரையாகவும், கீழே மணல்பரப்பாகவும் இருக்கிறான்.

//“நான் இரண்டு நிலைகளில் உறுதியாக இருக்கிறேன்ஒன்று என் உடன்பிறந்தார்இன்னொன்று அறம்.இரண்டுமே என் தந்தை எனக்குக் காட்டியவைஎன் உடன்பிறந்தாரில் எவர் இறந்தாலும் நான்உயிர்தரிக்கமாட்டேன்அறம் பிழைத்த எதை நாம் செய்ய நேர்ந்தாலும் வாழமாட்டேன்” என்றான்//



தருமன் காட்டும் அறம்

எது அறம்? காலம் காலமாக கேட்கப்படும் கேள்விதான். ஒவ்வொரு முறைக்கேட்கப்படும்போதும் அறம் என்னவென்று சொல்லப்படுகின்றது. சொல்லப்பட்டது மட்டும்தான் அறமா என்றால்? அறம் சொல்லப்படாமலும் இருக்கிறது என்பது தெரிகிறது.

அறம் என்பது ஒன்றுதான் அது பார்க்கும்தோறும் வேறுவேறாக மாறிக்கொண்டே இருக்கிறது மாற்றிச்சொல்லிப்பார்க்கலாம் அறம் என்பது ஒன்றுதான் அது பார்க்கும்தோறும் வேறுவேறு உருவம் காட்டுகின்றது.

வள்ளுவரே அறம் என்பதை ஒரு தனி அதிகாரம் வைத்து சொல்லியும் தீராமல் இடம் கிடைக்கும்போதெல்லாம் சொல்லிக்கொண்டே இருக்கிறார். மனம் மாசு இல்லாதது அறம் என்கிறார். அறம் மறத்தல் கேடு என்கிறார். இன்பம் அறத்தால் வருகிறது என்கிறார். குறிப்பாக அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் தவிர்த்தல் அறம் என்கிறார். வாழும்போது மட்டும் இல்லை சாகும்போதும் அறம்தான் துணை என்கிறார். பிறவி வழியை அடைக்கும் கல் என்கிறார். முயற்சி செய்து செய்யவேண்டியது அறம் என்கிறார். முயற்சி செய்து செய்யாமல் இருக்கவேண்டியது பழி என்கிறார். பழி இல்லாத எல்லாம் அறம் என்றும் சொல்லாமல் சொல்கிறார். அன்பு இல்லாத உயிருக்கு அறம் கூற்று என்று சொல்வதின் மூலம் அறத்தின் வேறு ஒரு முகத்தையும் காட்டுகின்றார். அறம் ஒரு கடல்…போய்கொண்டு இருக்கும்.

ஓளவையார் அறம் செய்ய விரும்பு என்கிறார், அதற்கு கீழே உள்ள அனைத்தையும் விரும்பு அதே அறமாகிவிடும் என்றும் காட்டுகின்றார்.
ஆறுவது சினம்.
இயல்வது கரவேல்…
ஈவது விலக்கேல்

கடல்போல.. வானம்போல.. விரிந்துவிரிந்து போய்கொண்டே இருக்கும் அறத்தை தருமன் பார்வையில் காட்ட வந்த ஜெ விடிவெள்ளியை படிமாக பயன்படுத்துவதும், அதன் வடிவங்கள் மாறிமாறி வேறுவேறாக கண்’டு ரசிக்கப்படுவதும். விடிவெள்ளியைக்காணாதபோது தருமன் கண்ணீர்விடுவதும். பாண்டு அவனுக்கு காட்டிக்கொடுப்பதும் இதன் வழியாக அறத்தின் பலவண்ணமும், அறம் ஒரு மனிதனை எப்படி கவர்கின்றது என்பதும் , அறம் வழிவழியாக காட்டப்படுகின்றது என்பதும். அறம் எங்கோ இருந்தாலும் வாழ்க்கையின் ஒளியும் வெளியும் அதுதான் என்பதும் எத்தனை நேர்த்தியாக வடிக்கப்படுகின்றது.
//விடியற்காலையில் ஏரிக்கரைக்குக் கொண்டுசென்று சுட்டிக்காட்டுவார்ஏன் அது கீழேவிழாமலிருக்கிறது என்று கேட்பேன்அதற்குச் சிறகுகள் இருக்கின்றன என்பார்அது ஒரு ஒளிவிடும்செவ்வைரம் என்று ஒருமுறை சொன்னார்எரிந்துகொண்டிருக்கும் ஒரு கனலுருளை என்றுஇன்னொருநாள் சொன்னார்ஒருமுறை அது விண்ணில் வாழும் தெய்வமொன்றின் விழி என்றுசொன்னார்.”
அது சூரியனின் தூதன் என ஒருநாள் சொன்னார்” என்றான் தருமன்//

நாளைமுதல் குடிக்கமாட்டேன் சத்தியமடித்தங்கம் என்பதுபோல் நாளைக்கு அறத்தோடு இருந்தால் போதும் என்றுநினைப்பதும். கொஞ்சம் அறம் பிழையானால் என்ன? என்று கேட்கும் உள்ளங்கள் மீது அறத்தை சாட்டையாக சொடுக்கு கின்றார் ஜெ.  //ஒருமுறை பாதை பிழைத்த கதிரவன் பின்னர்பிரம்மத்தின் ஆணையின்றி வரவே முடியாதுமண்ணுலகின் அத்தனை உயிர்களும் ஒருவரோடு ஒருவர்முட்டிக்கொண்டு கதறுவார்கள். அதுவரை பேணிக்கொண்ட பகைமையை முற்றாக மறப்பார்கள்.அக்கணம்வரை தேடிய செல்வங்களை எல்லாம் அள்ளி வீசி சூரிய ஒளி மட்டுமே போதுமென்றுகூவுவார்கள்ஆனால் அந்தக்குரல்களைக் கேட்க விண்ணில் சூரியன் இருக்கமாட்டான்//

அறசாட்டையின் சொடுக்கில் அறிந்த குதிரைகள் பாதையில் பாய்கின்றன. அறியாத குதிரைகள் அடிப்பட்டு துடித்து விழுகின்றன.  

தருமன் விழிகளின் வழியாக காணப்படும் பிம்பத்தைத்தாண்டி இன்று அகம் அறியும் ஒரு பிம்பமாக, கங்கையாக பெருகி, விடிவெள்ளியாக மின்னி ஒளிவிடுகின்றான்.  அவன் அவனை அடக்கிக்கொள்கின்றான். அதற்காக கங்கையைப் பார்க்கிறான் ஆனால் கங்கை அவன் பயனம் செய்யும் படகின் விலாவில் அறைந்துக்கொண்டுதான் இருக்கிறது. எண்ணங்களை அடக்கவும் எண்ணங்களால் அறைபடவும் தருமன்போன்றோர் படைக்கப்பட்டு உள்ளார்கள். அர்ஜுனன்போன்றவர்க்கு அதை ஒரு வேடிக்கை மட்டும்தான்.

//தன்னை அடக்கிக்கொள்ள அவன் சற்றுநேரம் கங்கைநீரை நோக்கினான்பாய் அவிழ்ந்த படகுகள்விரைவழிந்து மெதுவாக கரையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தன//

//தருமன் சிறிதுநேரம் அமைதியாக இருந்தான்கங்கையின் நீர் படகின் விலாவைஅறைந்துகொண்டிருந்ததுஅர்ஜுனன் அதை நோக்கி அமர்ந்திருந்தான்//

//சட்டென்று திரும்பி அர்ஜுனனை நோக்கி வெண்பற்கள் தெரிய புன்னகைசெய்து தருமன் சொன்னான்//

பின்னால் சுமையும், முன்னால் பள்ளமும் உள்ளபோது அறையப்பட்டு, நெஞ்சம் அழுத்தப்பட்டு தவித்து நிற்கும் நேரத்தில் வரும் புன்னகையாகப் பார்க்கின்றேன் தருமனை. இந்த தருமன் முழுக்க முழுக்க ஜெவின் அகம் அறிந்தவன். 



 நன்றி
அன்புடன்
ராமராஜன்மாணிக்கவேல்