அன்புள்ள ஜெ,
உங்களின் நீலம் மலர்ந்த நாட்கள் உண்மையில் பரவசத்துக்குப் பதில் ஒருவித அச்சத்தை தந்தது. கிட்டத்தட்ட மனப்பிறள்வின் விளிம்பு வரை சென்றிருக்கிறீர்கள். நல்லவேளை ஒரு பறவை பழம் தின்றாலும் பார்த்திருந்த பறவையால் தப்பியிருக்கிறீர்கள். இருந்தாலும் நீங்கள் முழுவதுமாக மீண்டுவிட்டீர்கள் என்பதை 'தோழர் கிருஷ்ணனில்' உணர்ந்தேன். தோழர்கள் எடுக்கும் பயிற்சியை நினைத்து நகைத்துக் கொண்டிருக்கிறேன்.
உண்மையில் என் நன்றியைத் தெரிவிக்கத் தான் இக்கடிதத்தை எழுதினேன். நீலம் என்னை எனக்கே காட்டிய ஓர் நாவல். நானெல்லாம் உங்களுக்கு கடிதம் எழுதுவேனென்றோ, உங்களிடம் ஓர் தொடர்பினை ஏற்படுத்துவேனென்றோ, இவையிரண்டையும் என் குடும்பத்திற்கான நேரத்திலிருந்து செலவிடாமல் ஒரு சிறப்பான கால மேலாண்மையைச் செய்வேனென்றோ கனவிலும் நினைக்கவில்லை. ஆனால் இவையனைத்தும் நீலத்தினால் சாத்தியப்பட்டது. எப்படி என்று விளக்கமுடியவில்லை. ஆனால் நீலமும் ஒரு முக்கிய காரணம் என்பது உண்மை.
என் கேள்விகளுக்கான பதில்களும், எங்களைப் போன்றவர்களின் கடிதங்களை வெளியிடும் போது தரும் படங்களும் , அவற்றுக்கு நீங்கள் தரும் பொருத்தமான் தலைப்புகளும் உங்களின் சோர்வறியா உழைப்பைக் காட்டுகின்றன. வாசிப்பது என்பது எழுதுவதைப் போலவே முக்கியமானது என்பதை நீங்கள் மீண்டும் மீண்டும் நிருபித்து வருகிறீர்கள்.
மீண்டும் மீண்டும் நன்றி ஜெ.
அன்புடன்,
அருணாச்சலம், நெதர்லாந்து
அருணாச்சலம், நெதர்லாந்து
அன்புள்ள அருணாச்சலம்
மீண்டு வந்துவிட்டேன். அதற்கு உதவியவை சில நூல்கள். அரசியல் நிகழ்ச்சிகள். ஒரு சிறு பயணம்.
கடிதங்கள் தான் இப்போது நீலத்துடன் என்னை தொடர்புபடுத்துகின்றன. இதுவரை இல்லாத அளவுக்கு ஏராளமான கடிதங்கள். பலகோணங்களில் நீலத்தை கூர்ந்து வாசித்து எழுதப்படுபவை.
நான் எழுத எழுத நாவலில் முன்னால் நகர்ந்துவிடுவேன். பின்னால் திரும்பிப்பார்க்கவைப்பவை இந்த கடிதங்கள். ஆகவே அனைத்துக்கடிதங்களுக்கும் பதிலிடுகிறேன். எவை ஏதேனும் வகையில் முக்கியமோ, தமிழில் எழுதப்பட்டனவோ அவற்றை பிரசுரிக்கிறேன்
இவை வாசகர்களுக்கு நீலத்தை அணுக உதவிபுரிந்துள்ளன. நல்ல கடிதங்களை எழுதிய நீங்களும் நன்றிக்குரியவர்