Thursday, October 9, 2014

நீலமும் கேரளமும்



ஒரு நல்ல திரைப்படம்  பார்த்த உணர்வு. கதை என்றபடி சொல்லாமல் , நிகழ்வுகளையும் மாந்தர்களையும் காட்டியபடி செல்லும் பிதா மகன் போல .....


அலைந்தபடியும், சொருகியபடியும், சிலிர்த்தபடியும், தாவியபடியும், கிறங்கி தள்ளாடியபடியும் செல்கிறது கடைசி பல அத்தியாங்கள். ரசித்தபடி, தன்னுள் ஆழ்ந்தபடி செல்கிறாள் ராதை.  புறவுலகம் ஒரு பொய் என்றாகி தன் கண்ணனின் உலகம் மட்டுமே என்று வாழ்தல் .முடியுமா? இரவுகளில் வானம் பார்த்து நிற்பதும், அனல் மூச்சுகளுடன் நதி கரைகளில் தன் காதல் உலகில் மிதந்தபடி இருப்பது பார்த்து ஒரு வெறுமையான சோர்வு அப்புகிறது. ஒன்றை நினைத்து அதிலே கரைந்து அதுவும் மறைந்து தானும் உதிர்ந்து ... எப்படிப்பட்ட உன்னதம் அல்லது ஒரு சாபம் - உருகி உருகி கொதித்து கொதித்து நீராவி போல் கடைசியில் காணமல் போவது. அவளின் இறுதி நாட்களில் கண்ணன் இல்லாவிடினும் அவளே கண்ணனாகி வாழ்ந்து இருப்பாள்.


இங்கே மொழியின் போதை அல்லது கவி வரியின் வருடல் பற்றி சொல்லி மாளாது.


34 குமிழ்தல் தரும் பரவசம் ஒரு தவிப்பு. ஊடலும் கூடலும் பின் சாடலும் என செல்வது தீயை தொட்டு குளிர் கொண்ட அனுபவம். ஒரு முறையாவது நனவில் நடக்காதா ? நடந்தால் அன்றே உயிர் துறக்க சரி என்பேன்



36 அழிதல் அதை விட உச்சம்...தாபத்தின் காமத்தின் வீச்சு போல் உக்கிரமாக பரவியது…. இல்லை ..அது  வெறும் உணர்ச்சி திருவிழா அல்ல....வேறு ஒன்று. நீலபசு வரும் பத்தி ..எருதுவும் பசுவும் ஒன்றாதல் வெறும் காமமா என்ன? தன்னைத்தான் புணர்ந்தது பசுக்காளை என்பதின் "கலத்தல் " வெகு நேர்த்தியாக வார்த்தைகளில் வர்ண ஜாலங்களை காட்டியது …படிக்கும் போது உள்ளே ஒன்று பரவியபடி படி போவது தான் இந்த மாயமான எழுத்துகளின் வெற்றி....அங்கு நடந்ததின் மிச்சமாக அணி பொருக்கி, சிலம்பு இட்டு, மேகலை அணிவித்து என நடந்த நிகழ்வு ... எதை சொல்ல எதை விட ?




நீங்கள் கம்ப ராமாயணத்தை எதாவது ஒரு பக்கத்தில் தொட்டு ஒரு வரியில் வான் போதல் போல தான் தோன்றி தனமாக இஷ்டத்திற்கு ஒரு அத்தியாயம் என்று படித்து , எந்த பகுதியை எடுத்து இறங்கினாலும் சற்று நேரத்தில் வெளிச்சம் மங்கி, மங்கிய இருளில் பயணம் செய்ய ஆரம்பித்து  மூச்சு முட்ட வைக்கும் குளிர் கிணறு போல உள்ளது. அவ்வபோது வரும் கிருஷ்ணன் நிகழ்வுகள் மட்டுமே மேலே வந்து வானம் பார்த்து சூரியனை நோக்கி மூச்சு இழுத்து கொண்டு மிதக்க வைக்க ….. அடுத்த பகுதி மீண்டும் சரக்கென்று உள்ளே இழுத்து போகும் மிதத்தல் போக்கு ... மொழியின் வருடல், கவிதையின் தீண்டல், இயற்கையின் கூர்  வர்ணனை, போதுமடா சாமி என்ற திணறல்... நீலம் முடிவு ஒரு முத்தாய்ப்பு. 





மது போன்ற எந்த விதமான தூண்டுதல் இன்றி, கிளற வைக்கும் இளமையின் வயதுமின்றி, தக்கென்று உலகில் இல்லாத ஒரு உலகில்  நீலம் எனும் ஒரு pupa நாட்களில்  பிதுங்கி அனத்தி வாழ்ந்து வெளியே வந்து பட்டாம்பூச்சி ஆனீர்கள் .... அதை உணரவும் வைத்தீர்கள் - சிறிதளவாவது ..... இது ஒரு வரம். 



பூ ஒன்றை எடுத்து சட்டை பையில் வைப்பது போல மீண்டும் இப்படி ஒரு நாட்கள் உங்கள் வாழ்வில் வந்தால் , கூடுதலாக என்னையும் உங்கள் உள்ளே இருத்தி கொண்டால் எப்படி இருக்கும் இந்த தேன் வதை போதை.

                                                         



நீங்கள் சொன்னது நிஜம். சுந்தர கேரளத்தின் ஒரு வரம் தான் கிருஷ்ணன். அழகு  - இயற்கையில், பெண்களில், கலைகளில் என எல்லா இடங்களிலும் தெறித்து கிடக்கும் ஸ்வப்ன கேரளம். இப்போது நினைத்து பார்கிறேன். கிருஷ்ண ப்ரேமை அங்குள்ள பெண்களிடமும் ஆண்களிடமும் பொங்கி கிடந்ததை.... சற்று இழந்து விட்டேன் ஒரு வாய்ப்பை.... மழை ரசித்த நாட்கள், மேகம் ஏறி வாழ்ந்த நாட்கள், இரவு பெய்த மழையின் குளுமையை நாள் கணக்கில் சேர்த்து வைக்காமல் சற்றென்று உறிஞ்சி கொண்டு வெம்மை வர, பசுமை பொங்கி பொங்கி அடித்த மண்ணில் மிதந்து வாழ்ந்த நாட்கள், தீப வெளிச்சம் தெரிய அதி காலையில் மனதோடு பேசுவது போல் சிலையாகி நின்ற தெய்வத்தோடு பேச ஏதுவான அம்பலங்கள், காவுகள், காயல் என்றும் குளம் என்றும் மழை என்றும் ஆறு என்றும் நீரின் நீர் மற்றும்  பச்சையின் ஆட்சி உச்சம் பெற்ற ஸ்தலம். தரையில் இறங்க விடாமல் பறக்கடித்த பொற்காலம். கனவை ஊன்றி விளைய வைக்கும் மண்...சற்று தொட எத்தனிப்பு செய்து இருக்கலாம் கண்ணனின் கைகளை... சுடலை ஆண்டியே போதும் என்று கிடந்து விட்டேன்.



மீண்டும் சந்திப்போம் 


அன்புடன்

லிங்கராஜ் 

மழைப்பாடல் பற்றி கேசவமணி- மழையின் இசையும் மழையின் ஓவியமும்