இனிய ஜெயம்,
மீண்டும் இன்றைய அத்யாத்தில் மாயையின்
தெளிவு மலைக்க வைக்கிறது. ஒரு வருங்கால சக்கரவர்த்தினி எத்தகைய ஒருவளை
தோழியாகக் கொண்டிருக்கிறாள்? கர்ணன் துவங்கி பீமன் வரை அவள் ஒவ்வொருவரையும்
வகுத்து வைப்பது அவர்களின் ஒட்டு மொத்த ஆளுமையையும் செறிவாக முழுமை
நோக்கில் காட்டி விடுகிறது.
ஒவ்வொரு பெண்ணுக்கும்
தனது கன்னிமை குறித்து எவ்வளவு பெருமிதம் இருக்கும். அந்த பரிசுத்தத்தை
ஒருவன் வசம் ஒப்படைக்கப் போகிறோம். அப்படிப்பட்டவன் எப்படிப்பட்டவனாக
இருக்கவேண்டும் என்று எத்தகைய கனவுகள் இருக்கும்? திரௌபதிக்கு அது ஐந்து
மடங்கு.
கேசினி கதையை கேட்கும்போது திரௌபதி
இதுவரை நிகழ்ந்த 'அனைத்தையும்' கடந்து தனக்குள் நித்தியமாக உறையும்
தாய்மையைக் கண்டு கொள்கிறாள்.இனி காட்டில் அலையப்போகும் பாண்டவருக்கு
அவள்தானே தாய். பாரதப் போரின் இறுதியில் குருதியை அள்ளி பாஞ்சாலி குழலில்
பூசிக் கொள்ளும் சித்திரம் இப்போது முற்றிலும் வேறு ஆழம் கொண்டு விடுகிறது.
ராதா
தேவி கோவிலுக்கு என் நாயகன் வருகிறான். அவன் விழிகள் 'ஒருவரையும்'
நோக்கவில்லை. ஆனால் அவன் சூடிய மயிர்ப் பீலி ஒவ்வொருவரையும் தனித் தனியாக
நோக்குகிறது.
அவனை நோக்கி இருந்தால் , அல்லது அவன் இவளை நோக்கி இருந்தால் திரௌபதி என்னவாகி இருப்பாள்?
கடலூர் சீனு