Wednesday, March 11, 2015

ஆடிப் பாவைகளும் நிழல்களும்



அன்புள்ள ஜெ,

பூரிசிரவஸ் இவ்வளவு பெரிய பாத்திரமாகும் போதே சாத்யகி வர வேண்டுமே என்று எதிர்பார்த்தேன். இதோ இன்று அவனும் வந்துவிட்டான். பாரதப் போரை நன்கறிந்த எவருக்கும் அர்ஜுனனுக்குப் பிறகு நினைவுக்கு வரும் பாண்டவரல்லாத பெருவீரன் சாத்யகி தான். குறிப்பாக அவனுக்கும் பூரிசிரவசுக்குமான யுத்தம். ஆனால் எந்த பாரதத்திலும் (நான் சுருக்கப்பட்ட வடிவையே குறிப்பிடுகிறேன்) இவர்கள் இருவரும் போரின் போதே வருவார்கள். 

வெண்முரசில் பூரிசிரவஸ் ஏற்கனவே பெரிய பாத்திரம் ஆகிவிட்டான். காலம் சம்பந்தமே இல்லாத இருவருக்கிடையே ஏன் இவ்வளவு உக்கிரமான வெறுப்பைத் தோற்றுவிக்கிறது? பூரிசிரவசை முதன் முதல் பார்த்த போதே வெறுப்படைந்ததாக சாத்யகி சொல்கிறான். இருவருக்கும் ஓர் ஆடிப்பிம்பத் தொடர்பு. தன்னைத் தானே வெறுக்கும் உணர்வு. அதனால் தான் பூரிசிரவஸ் திரௌபதியைப் பார்த்து வாயைப் பிளந்த போது அவனுக்காக இவன் நாணுகிறான். இவன் வெளிநோக்கில் கன்றுகளை மேய விட்டு காலத்தில் நிலைத்திருக்கும் யாதவன். அவனோ மலை விட்டிறங்கும் காட்டருவி. இலை நுனி நீர் போல் தளும்புகிறான் என்பது எவ்வளவு சிறந்த உவமானம். இலை நுனி நீர் ஒவ்வோர் அசைவுக்கும் சிந்தும். சிந்த சிந்த அந்த நுனியில் மீண்டும் நீர் அரும்பும். பூரிசிரவசும் ஒவ்வோர் பெண்ணிற்கும், ஒவ்வோர் ஆளுமைக்கும் சிந்தி சிந்தி மீள்பவன் தானே!! எப்போதும் ததும்பிக் கொண்டேயிருக்கிறான். இவனின் நிலைத்தன்மைக்கு நேரெதிர் அவன். அதுவே அவனை வெறுக்கச் செய்கிறது. அந்த வெறுப்பே சாத்யகியை இயல்பாகவே பாண்டவர்களைத் தேர்ந்தெடுக்க வைக்கிறது. பூரிசிரவஸ் துரியனையும் கர்ணனையும் பார்த்து பிரமிக்கும் போதே சாத்யகி அவர்களையும் வேண்டாம் என்று முடிவு செய்திருப்பான். 

இன்னும் நுணுக்கமாக இருவரும் அவரவர் மரணங்களைக் கனவு காண்கிறார்கள். அதுவும் தங்கள் எதிர்காலம் இவர்களுடன் தான் என்று முடிவெடுத்து அவர்களைச் சென்று சேரும் சமயத்தில். அதிலும் பூரிசிரவசின் கனவு மிகத் துல்லியம். ஆடிப் பிம்பத்துக்குத் தெரியாது யார் தனது மூலம் என. மூலத்துக்கும் தான் எங்கெல்லாம் எவ்வாறு எதிரொளிக்கப்பட்டிருக்கிறோம் என்பதும் தெரியாது. இது தெரியாமல் பிம்பம் மூலத்தை அழித்தால் இறுதியில் பிம்பத்தின் கதி என்ன? அது தானே சாத்யகிக்கும் நிகழப் போகிறது.

பூரிசிரவஸ் பாத்திரம் வளரும் போதே அதில் நான் உணர்ந்த ஒன்று அவன் பார்த்தனின் வார்ப்பு என்பது. ஒரு வகையில் பார்த்தனின் நிழல். காமம் அல்லாமல் காதலை உணர்ந்த நிழல். கர்ணனோடு ஒட்டி உறவாட வேண்டுமென்று ஏங்கிய அவன் நிழல். அன்னை மட்டுமல்லாமல் தான் விரும்பும் அனைத்துப் பெண்களாலும் விரும்பப்பட வேண்டுமென்று விழைந்த நிழல். துரியோதனனை மூத்தவனாகக் கண்டு அவன் அணைப்பில் இழைய வேண்டுமென்று ஏங்கிய நிழல். 

இங்கே சாத்யகி அப்படியே கர்ணனின் வார்ப்பாகத் தோன்றுகிறான். அவனின் அடையாளச் சிக்கலின் மட்டுப்படுத்தப் பட்ட ஓர்நிழலாகத் தான் இருக்கிறான். வளை ஏந்துவதா வாளை ஏந்துவதா என்ற குழப்பத்தில் துவங்கி வாள் என்று முடிவெடுத்த நிழல். தனக்காக வாழ்வதை விடத் தன் தலைவனுக்காக வாழ வேண்டும் என்று முடிவெடுத்த நிழல். அனைத்துக்கும் மேல் அர்ஜுனனோடு இருக்க வேண்டும் என்று விரும்பிய நிழல். 

அர்ஜுனன் கையால் கர்ணனை கொன்றதை, கர்ணனின் நிழல் கையால் பார்த்தனின் நிழலைக் கொல்லச் செய்வதால் சமன் செய்கிறதா காலம்?! கொல்பவர்இருவரையும் ஒரே அணியில் அமைத்து ஆடிக்குள் தள்ளி விட்டது யார்?!

அன்புடன்,