Tuesday, December 22, 2015

ஒளிர்வும் கருநிழலும் (வெய்யோன் -1)




“சூரியனின் மைந்தா, இவ்வுலகாளும் விரிகதிர்வேந்தனுக்குரிய தீயூழ் என்னவென்றறிவாயா? அவன் தொட்டதெல்லாம் எதிரியாகி பின்நிழல் கொள்கின்றன. நிழல் கரந்த பொருட்கள் அனைத்தும் அவன் முகம் நோக்கி ஒளி கொள்ளும் விந்தைதான் என்ன? இங்குள அனைத்தையும் ஆக்குபவன் அவனென்றால் இந்நிழல்களையும் ஆக்குபவன் அவனல்லவா?” (-வெய்யோன் -1)

    ஒவ்வொருவரும் ஒளி பெற்றவர்கள். அதனால்தான் அவர்களை மற்றவர்களால் காண முடிகிறது. சிலர் அதிகம் ஒளிர்கிறார்கள். அவர்களை அதிகம் பேர் அதிக தூரத்திலிருந்துகூட பார்க்க முடிகிறது. அதனால அந்த ஒரு சிலரிடம் பலர் அதிகம் கவரபடுகிறார்கள். அதே நேரத்தில் வேறுபலர் அச்சிலரின் ஓளியின் பிரகாசத்தில் கண்கூசி விலகிச் செல்கிறார்கள்.

   ஆனால் ஒருவர் பெற்றிருக்கும் ஒளி அவரிடமிருந்து தோன்றியது அல்ல. அனைத்து ஒளியும் அந்த சூரியனிடமிருந்து பெற்றதுதான். இங்கு சூரியன் என்று சொல்வதை நாம் இயற்கை, ஊழ், நிகழ்தகவு, பரப் பிரம்மம் எனநாம் பெருக்கிக் கொள்ளலாம். அந்தச்  சூரியனின் ஒளியை  அவர்கள் அதிகமாகவோ குறைவாகவோ அடைந்து அதைப் பெருக்கியோ குவித்தோ பிரதிபலிப்பதில்தான் அவர்களின் ஒளிர்வு அமைகிறது. அவர்களின் உடல்(உள) அமைப்பிற்கு ஏற்ப அவர்கள் பல வண்ணங்களை ஒளிர்கின்றனர். ஆக ஒளிரும் ஒவ்வொருவனும் அறிந்திருக்க வேண்டியது  அந்த பேரியற்கை என்ற பெருஞ்சூரியனின் ஒரு சிறு அணுஅளவுக்கான ஒளியை மட்டுமே அவன் அடைந்து பிரதிபலிக்கிறான் என்பதை.  ஆனால் அவனின் அகங்காரம் அந்த ஒளிர்வுக்கு தானே காரணம் என நினைக்கவைக்கிறது.  பிற்காலத்தில்  அக்கதிரவனின் ஒளி அவன்மீது குறைவாக படும்போதோ அதை பிரதிபலித்து ஒளிர முடியாத நிலையடையும்போது தன் ஒளிர்வின் குறைவை அவன் மனம் ஏற்க முடியாமல் உளச்சிக்கல் கொள்கிறான். தன் நிலை தாழ்ந்துபோனதாக எண்ணி மருகுகிறான்.   ஆக நாம் நம்முடைய ஒளிர்வுக்கு அப்பேரியற்கையே காரணம் என அறிந்து அகங்காரத்தை பெருக்கிக்கொள்ளாத மனிதனே உண்மையான மகிழ்ச்சியுடனும் மன அமைதியுடனும் தன் வாழ்நாள் முழுதும் இருக்க முடியும்.


       ஒருவன் அடையும் ஒளி அவனுக்கு ஒளிர்வை தரும் அதே நேரத்தில் கரிய நிழலையும் தருகிறது. எந்த அளவுக்கு அவன் ஓளியை அடைகிறானோ அந்த அளவுக்கு அவனின் நிழலின் அடர்வு அதிகமாகிறது. காலத்திற்கேற்ப அந்த நிழல் அவனுடைய உண்மை அளவைவிட நீண்டு பெருகியோ அல்லது  குறுகி சிறுத்தோ அமைகிறது. ஒருவனின் ஒளிர்வு அவனுக்கு புகழை ஏற்படுத்துகிறது என்றால் அவன் நிழல் அதற்கு ஈடாக ஏளனமாக,  அவச்சொல்லாக, பழியாக  விழுகிறது. மற்றவர்கள்நெஞ்சத்தில்  பொறாமையாக வஞ்சமாக  கோபமாக   விளைகிறது. அவன் ஆதரவாளர்கள் அவன் ஒளிர்வைப் அவனாகப் பார்க்கும்போது அவன் எதிரிகள் அவன் நிழலையே அவன் எனச் சொல்கிறார்கள்.

   ஒவ்வொருவனும் தன் நிழலை தவிர்க்க முடியுமா எனப் பார்க்கிறான்.  தான் அடையும் ஒளியை தனக்கென கொஞ்சமேனும் தக்கவைத்துக்கொள்ளும் எவரும் தன் நிழலை தவிர்க்க முடியாது.  தன் நிழலை பொருட்படுத்தாது ஒளிர்வில் கர்வம் கொள்ளாத விவேகியே வாழ்வில் தடுமாறாமல் செல்ல முடியும்.  

   ஆனால் ஒரு ஞானி ஒருவனின் ஒளிர்வையும்  நிழலையும் தவிர்த்து அவன் உண்மை உணர்வை பார்க்கிறான். அது விருப்பு வெறுப்பற்ற பார்வை.  அதனால் அவனுக்கு அனைத்து மனிதரும்  உயர்வு தாழ்வற்று சமமென ஆகிறார்கள்.


          இன்னும் சிலர் இருக்கின்றனர். அவர்கள் ஒளியை தன்உடல்வழி ஊடுருவ விடுகின்றனர். அவர்கள் தாம் அடையும் புகழை தனதென எண்ணுவதில்லை. அதை தன்னுள் தங்க விடுவதில்லை. அப்போது அவன் அனைத்துப்பக்கமும் பளபளக்கும் ஒரு மணிக்கல்லென ஆகிறான்.  நிழல் என எதுவுமற்ற பெரு நிலை. அப்போதும்கூட சிலர் அந்த  மணிபதிந்திருக்கும் பதக்கத்தின் நிழலை அதன் நிழலெனக் கொண்டு பழிப்பதுண்டு.  புத்தர், யேசு, காந்தி போன்ற மகான்கள் அந்நிலைக்கு ஆளாவதை நாம் பார்த்திருக்கிறோம்.


         கர்ணனின் ஒளிர்வு அவன் பேரரசி குந்தியின் மகன் என்பது. ஆனால் அதுவே அவனுக்கு தாய்தந்தையற்றவன் என்ற கரு நிழலை ஏற்படுத்துகிறது. ஒரு யாதவப் பெண்ணென மட்டும் இருந்திருந்தால்   அவனை அவள் பிரிந்திருக்க மாட்டாள். தாயன்பு கிடைத்திருக்கும். ஆனால் அவள் பேரரசியென இருப்பது அவனை அவள் அருகிருந்து அன்புகாட்டி வளர்க்கும் வாய்ப்பை தவிர்த்துவிடுகிறது. 

          கர்ணனின் வில்லாற்றல் அவன் ஒளிர்வு.  ஆனால் அதனால் அவன் மற்றவர் கண்களில் உறுத்தலாக விழுகிறான். சிலர் பாராட்டினாலும் பாண்டவர்களினால் சந்தேகத்திற்கு உரியவனாக ஆகி அதனால் அவமானப்படுத்தப்பட்டு துரத்தப்படுகிறான்.  இது அவன் அடையும்  நிழல்.


          அவன் செய்நன்றி மறாவா தன்மை, அவனுடைய ஒளிர்வாகும்  ஆனால் அதன் விளைவாக  நீதியின் காரணமாகவா அல்லது அநீதியின் காரணமாகவா எனத் தெரியாது கொலைசெய்யும் மாற்றார் கை ஆயுதமாக அவன் ஆகிறான்.  இதுவே அவன் காணும் கரு நிழல்.

         அவன் நட்பை தன் உயிரினும் மேலாக நினைத்திருப்பது அவன் ஒளிர்வு. அதனால் தன் நண்பன் அறமற்ற செயல் செய்கையிலும் அவனை நீங்காமல் அப்பழிகளை தன் தோளிலும் சேர்ந்து சுமக்க வேண்டி வருவது அவன் அடையும் கரு நிழல். 

     வெய்யோன் கர்ணனின் ஒளிர்வுக்கும் நிழலுக்குமான போராட்டமாக அவன் வாழ்வு விரியப்போவதை உணர்த்துகிறது. ஒருவேளை இறப்பு ஒன்றே அவனை நிழலில் பிடியிலிருந்து தப்பவைக்க முடியும்போலும். கவித்துவம் நிறைந்த காவிய வரிகளில் தொடங்குகிறது வெய்யோன். இன்னொன்றை கவனித்தேன். இதுவரை வந்த தலைப்புகளில் இதுவே ஆண்பால் தலைப்பாக தெரிகிறது.  ஒருவேளை இந்நாவல் ஆண்மையைப் போற்றுவதாக விரியுமோ? மீண்டும் ஒரு காவிய வரியை நினைவுக்கூறுகிறேன். இந்த வரியை ஒரு விதையெனக் கொண்டு வளரப்போகும் வெய்யோன் எனும் விருட்சத்தை போற்றுகிறேன்.  அதை  இன்தமிழ் நீரூற்றி, கற்பனை எருவிட்டு வளர்க்கப்போகும் எழுத்தச்சனை வணங்குகிறேன்.

    “எரிகதிர் மைந்தா! தன்னைத் தொடரும் நிழலிலிருந்தல்லவா அவன் விரைந்தோடிக் கொண்டிருந்தான்? நிழலால் துரத்தப்பட்டவன் எத்தனை விரைவாக ஓடினால் தப்ப முடியும்? எத்தனை அரியணைகளில் அமர்ந்தால் வெல்ல முடியும்?” -(வெய்யோன் -1)

தண்டபாணி துரைவேல்