பகுதி ஒன்று : செந்தழல் வளையம் - 3
இனிய ஜெயம்,
அழகான அத்யாயங்கள். முன்பு துரியன் வசம் கர்ணன் சொல்லும் நிகழ்வில் பரசுராமர் வசம் தான் பொய் சொல்லி அதன் பயனாக அவர் தன்னை சீடனாக ஏற்றுக் கொண்டதாக சொல்லவில்லை. நண்பன் பொருட்டே ஆனாலும் அத்தகு குரு முன் யாராலும் பொய் சொல்ல இயலாது. அது போக அந்த குரு ஏற்றுக் கொள்ளாமல் சீடனாகவும் முடியாது. என் ராதேயன் சிரியன சிந்தியாதான்.
பாணன் பாடலில் வழக்கில் உறைந்து போன கர்ணன் தன்னை பிராமணன் என பொய் சொல்லி பரசுராமர் வசம் சீடனாக சேர்ந்தான் எனும் கதையையும் சேர்த்தது அழகு.
வண்டுக்குத்தான் எத்தனை அழகான கதை. முன்பே உமை மைந்தன் உமை தனது தாய் என்பதை அறியாமல் மூவுலகும் வெற்றி கொண்ட மமதையில் மேன்மையெல்லாம் தனதாக்கும் ஆணவத்தில் உமையை தேடி வருகிறான். சமரில் உமை தனதன்னை என்பதை அறிந்து அழுகிறான். அன்னை சொல்கிறாள் ''என் முலை அமுது அருந்தாதவன் அல்லவா, அங்கு நிகழ்ந்த பிழை'' என்று கருணை கொண்டு மன்னிக்கிறாள். [ நிகழ்வு எப்படியும் இருக்கலாம் என் நினைவு அடுக்கில் இவ்வாறுதான் பதிந்துள்ளது]
பிருகு வசம் அளர்க்கன் சொல்கிறான்
“மைந்தனென்றே நடந்து கொண்டேன். அன்னை முலைஅருந்தாத மகவு நான்”
திரௌபதி கணவர்கள் வசம் உரைக்கப் படுகிறது ''அன்னையர் மேல் காமம் கொள்ளாத புத்திரர்கள் இல்லை''
துரியனுக்கு திரௌபதி அவன் அவனிலிருந்து கொன்று நீக்கிய பெண்ணின் ஸ்தூலம். அவனேதான் அவள். எனில் கர்ணனுக்கு துரியன் எதுவோ அதன் மறுதலைதான் கர்ணனுக்கு திரௌபதி. ஆக கர்ணன் துரியன் இருவருமே திரௌபதிக்கு ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்.
ஒரு நாட்டார் கதை உண்டு. தந்தை சொல் கேட்டு பரசுராமர் தாய் மனைவி இருவரது தலையையும் கொய்து விடுகிறார். தனது வரம் கொண்டு,மீண்டும் இருவர் சிரத்தையும் பொருத்துகிறார். அகம் எங்கோ பிழைக்க இருவர் சிரத்தையும் மாற்றி பொருத்தி விடுகிறார்.
அந்த மாபெரும் மனத் தடுமாற்றத்திலிருந்து அவர் என்ன அடைந்தார் அறியேன். ஒருக்கால் அதே தடுமாற்றத்தில் இருக்கும் தன் சீடன் கர்ணனுக்கு அதை உணர்த்தக் கூடும்.
பெண்மகளை முலை அமுதம் அருந்தி அன்னையாகக் கொள்ளலாம், முத்தங்கள் ஈந்து மகளாகக் கொஞ்சலாம். எப்போது? அவளது உள்ளும் புறமும் அணுவிடை இன்றி அந்த ஆண்மகனுடயதே என்றாகும் போது மட்டுமே.
கர்ணன் பிழை பட்டது இங்குதான். ஆயிரம் தர்மங்கள் நியாங்கள் கர்ணன் பால் இருந்தாலும், அவன் தொடை தட்டி திரௌபதியை அழைத்த அக் கணம், அந்த ஒரே ஒரு கணம், தனது இச்சைக்காக நீதியைக் கொன்றான்.
விதி வேறென்ன ,விதி அவ்வளவுதான் அதைத்தவிர்த்து வேறு வார்த்தை இல்லை.
இனிய ஜெயம்,
ஒரு எல்லையில் இந்த இரு அத்யாங்களும் பகிற இயலா பாரத்தை உள்ளே நிறைத்து விட்டது.