வெண்முரசு நாவல்களின் முதல் வரிகள் பல வகையிலும் முக்கியமானவை. பெரும்பாலான வரிகள் நாவல் வளர வளர பேருருக் கொண்டு எழுந்து நாவல் முடிகையில் ஒட்டுமொத்த நாவலையே குறிப்பவையாக முடிபவை. பிரயாகையின் துவக்கம் அத்தகையதே. மற்றொரு மிகச்சிறந்த துவக்க வரி வெய்யோனுடையது – ‘செங்கதிர் மைந்தா, தன் நிழலால் துரத்தப்படுபவனுக்கு இருளன்றி ஒளிவிடம் ஏது?
விழிமுனைகளன்றி பகையேது? ஆடியன்றி கூற்றமேது?’ ஆம், கர்ணன் என்னும் செங்கதிர் மைந்தன் இறுதியில் இருளில் தான் ஒளிகிறான். இந்திர நீலத்தின் முதல் வரியும் அபாரமான ஒன்றே – “தனிமை ஆயிரம் பல்லாயிரம் சுவர்களை எழுப்பிக்கொண்டு தலைவாயிலைத் திறந்திட்டு காத்திருக்கிறது.” இதை ஞானியின், குருவின் தனிமை என வாசித்தால் மொத்த நாவலுமே நம் முன் விரிவதைக் காணலாம். மாறாக மிக இயல்பாகத் துவங்கும் நாவல்களும் உள்ளன. அப்படிப்பட்டவை அவற்றின் முதல் அத்தியாயத்தில் நாவலைக் கொண்டிருக்கும். மழைப்பாடல், சொல்வளர்காடு போன்றவை இதற்கு மிகச் சிறந்த உதாரணங்கள்.
அவ்வகையில் கிராதம் “நீர் நிறைந்த மண்கலத்தின் கரிய பரப்பு பனித்து துளித்து திரள்வதுபோல காட்டை மூடியிருந்த இருளிலிருந்து எழுந்துவந்த பிச்சாண்டவர் ஒவ்வொரு அடிக்கும் தன் உருத்திரட்டி அணுகினார்.” – மீண்டும் ஒரு புதுமையான படிமத்தோடு துவங்கியிருக்கிறது. மண்பானையின் பரப்பு நீர் ஊறுவது உடனே நிகழும் ஒன்று அல்ல. உள்ளே நிரம்பிய நீர் பானையின் நுண்துளைகள் வழியாக ஊடுருவி பானையின் வெளிப்புறம் முழுவதும் பரந்த பிறகே பானையின் நிறம் கருமை கொள்ளும். நன்றாக ஊறிய பானையின் நீர் ஏற்கும் தேக்கப்புள்ளியில் மேலும் மேலும் ஊடுருவும் நீர் துளிர்க்கத் துவங்கும். நுண்துளிகள் ஒன்றிணைந்து திரள்கையில் நம் கண்ணுக்குத் தெரியும் சொட்டு வரும். இந்த படிமத்தின் விளக்கம் கிரதத்தின் இரண்டாம் அத்தியாயத்தின் இறுதியில் வருகிறது. “அக்காட்டுக்குள் செல்பவனுக்கு கண்களில் வாழும் வானம் உதவாது. கால்களில் குடிகொள்ளும் திசைகளும் உதவாது. உடலறிந்த ஒன்றும் உடன்வராது. கருவறைப் புகுவதற்கு முன் கொண்ட கருத்து ஒன்றே கூடவரும். விலக்கி விலக்கி முன்செல்வதே காட்டைக் கடக்கும் ஒரே வழி. அங்கு அவனை வழிமறிப்பவை அவன் அஞ்சுவன அனைத்தும்தான். அச்சம் அழிந்து அவன் நின்றிருக்கையில்தான் மூவிழியும் வெண்நீறும் புலியுரியும் பிறைநிலவும் உடுக்கும் சடையும் கொண்டு கொலைதேர் கொடுஞ்சினக் காட்டாளன் ஒருவன் அவனை எதிர்கொள்கிறான்.”. தான் அறிந்த அனைத்தும் அளிக்கும் அச்சத்தில் இருந்து விடுபடும் ஒருவனை அவனுக்கும் தெரியாமல் கட்டியிருக்கும் ஒரு விழியறியா தளையொன்றை எரித்து நீறாக்கும் கொடுஞ்சினத்தொடு அவனுள் இருக்கும் காட்டில் இருந்து உருத்திரட்டி வரும் உருத்திரனைப் பற்றிய சித்திரமே கிராதத்தின் முதல் வரி. அப்படிப்பட்ட ஒருவனைச் சந்தித்து மீள்வது என்பது மரணமடைந்து புத்துயிர்ப்பது போன்றதே!! அதனால் தான் இவ்வரிகளைச் சொல்லி முடிக்கும், சோர்வும் சலிப்பும் அறியாத, பிச்சாண்டவரே பெருமூச்சு விடுகிறார்.
இவ்வாறு அச்சத்தை அறுத்து, தளைப்பனவற்றை எல்லாம் விலக்கி, விலக்கி தன் முன் வரும் உருத்திரனைச் சந்திந்து பாசுபதத்தை பெற்று மீளும் அர்ச்சுனன் பற்றியது தான் இந்நாவல் என்பது அவ்வரிகளின் கனத்தை மேலும் மேலும் அதிகரிக்கிறது. அட்டகாசமான துவக்கம் ஜெ.
அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்.