திருமண உறவு என்பது அதன் மேல் சுமத்தப்பட்டிருக்கும் புனிதங்களையெல்லாம் விலக்கிப்பார்த்தால் அது ஒரு ஒப்பந்தம் மட்டுமே. இருவர் இணைந்து இனிவரும் காலம் முழுவதும் வாழ்தல் என்பது. அப்படி வாழ்கையில் இருவரும் சேர்ந்து காமம் நுகர்ந்து பிள்ளைகள் பெற்று வளர்த்து ஆளாக்குவது அதன் சில ஒப்பந்த விதிகளாகும். ஆனால் இவை அனைத்தையும் விட வெளியாட்களோடு உடலுறவில் ஈடுபடக்கூடாது என்பது மிக முக்கிய விதியாக உள்ளது. பிள்ளைகள் இல்லாத தம்பதிகளைப்பார்த்திருக்கிறோம். வேலை நிமித்தமாக வெவ்வேறு ஊர்களில் வசித்து எப்போதாவது சந்தித்துக்கொள்ளும் தம்பதிகளைப் பார்த்திருக்கிறோம்.
ஆனால் தம்மில் ஒருவர் வெளியாருடன் காமஉறவு கொண்டிருப்பதை ஏற்றுக்கொண்டு வாழும் தம்பதியரைக் காண்பது அரிதிலும் அரிதாக உள்ளது. பாலியல் விஷயத்தில் மிகவும் சுதந்திரமானது எனக் கருதப்படும் மேற்கத்தைய பண்பாட்டிலும் மண உறவு தாண்டி கொள்ளும் ஓர் உறவு ஒன்றே ஒரு விவாகாரத்துக்கு போதுமான காரணமென ஆகிறது. குடும்ப வன்முறைகளில், அது கொலையென ஆகும் அளவுக்கு போவதற்கு இப்படி மாறாக ஒருவர் கொள்ளும் உறவு ஒரு முக்கியமான காரணமாகிறது.
உண்மையில் இப்படியான மாறான உறவின் காரணமாக பெரிய அளவில் பணவிரயம் ஏற்படுவதில்லை. பெரும் சூதில், அல்லது தவறான திட்டமிடலில், அல்லது பொறுப்பற்று வீண் செலவு செய்து குடும்ப சொத்து முழுதையும் இழந்தவர்கள் எளிதாக மன்னிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளபடுகிறார்கள். உயிர்க் கொலை போன்ற பெருங்குற்றம் செய்த ஒருவரை, ஏற்றுக்கொண்டு , அவர் குற்றத்தை வெளித்தெரியாமல் மறைக்க, அவரை எப்படியாவது சமூகத்தின் தண்டனையிலிருந்து காக்க அவரின் துணை முயல்கிறார். போதைப்பழக்கத்தில் வீழ்ந்து தன் மனிதத்தையெல்லாம தொலைத்து குடும்பம் முழுதுக்கும் துன்பத்தை கொணரும் துணைகூட அரவணைக்கப்படுகிறார்கள், இறுதிவரை முயன்று காப்பாற்ற முயலப்படுகிறது. இதைப்போன்று தன் துணை செய்யும் எவ்வித அறமீறல்களையும் சகித்துக்கொள்ளும் ஒருவர் மணவுறவை மீறி நடக்கும் பிழையை சற்றும் பொறுத்துக்கொள்வதில்லை.
அப்படியே மற்றவர் வற்புறுத்தலில் சேர்ந்து வாழும் நிலை ஏற்பட்டாலும் அது ஆறாச்சினமென அவரின் உள்ளத்தில் இருந்துகொண்டே இருக்கிறது. இறக்கும் வரை அந்தத் துரோகம் மறக்கப்படுவதில்லை.
ஆனால் மனித அறத்திற்கு மாறான செயல்களில் இந்தச் செயல் மிகக் குறைவான தீங்கு விளைவிக்கும் ஒன்றாக இருக்கிறது, இப்படியான மாறான உறவு என்பது திருமண ஒப்பந்தத்தை மீறீய தவறு என்ற போதிலும் அது அவ்வளவு பெரிய குற்றமா? ஒருவரின் துணை இப்படி மாறான உறவில் ஈடுபடுவதால் அப்படி என்ன ஒரு பெரிய நஷ்டம் அவருக்கு ஏற்பட்டுவிடுகிறது?
ஆனால் மனித அறத்திற்கு மாறான செயல்களில் இந்தச் செயல் மிகக் குறைவான தீங்கு விளைவிக்கும் ஒன்றாக இருக்கிறது, இப்படியான மாறான உறவு என்பது திருமண ஒப்பந்தத்தை மீறீய தவறு என்ற போதிலும் அது அவ்வளவு பெரிய குற்றமா? ஒருவரின் துணை இப்படி மாறான உறவில் ஈடுபடுவதால் அப்படி என்ன ஒரு பெரிய நஷ்டம் அவருக்கு ஏற்பட்டுவிடுகிறது?
காமம் என்பது இயற்கையாக ஒவ்வொருவருக்கும் ஏற்படும் ஒன்று. அது ஒருவர் உடலில் தானாகத் தோன்றுவது. இதில் ஒருவர் சற்று கட்டுமீறி மாறான உறவில் இன்னொருவருடன் ஈடுபடுவது ஏன் அவ்வளவு பெரிய தவறென ஆகிறது? தன் துணைக்காக எவ்வளவோ தியாகம் செய்ய தயாராயிருக்கும் ஒருவர் இந்த முறைதவறிய உறவின்பத்தை ஏன் பெருங்குற்றமென எடுத்துக்கொள்ளவேண்டும் ? தன் இணை தன் அற்ப ஆசையை தணித்துக்கொண்டு அடையும் இந்த இன்பத்தை ஏன் ஒரு சிறிய கொடையென வழங்கி மன்னித்துவிடக்கூடாது? இந்தத் தவறு சற்று கூட மன்னிக்கப்படாததாக ஏன் இருக்கிறது? இந்தக் குற்றத்துக்காக தன் துணையின் மேல் கடும் வெறுப்பும் கசப்பும் வஞ்சமும் தோன்றுகிறதென்றால் இதுவரை அவர் கொண்டிருந்த காதலுக்கு என்ன பொருள்?
ஆனால் காதல் என்பதே தன் காம வாழ்வு தன் துணை ஒருவருடன் மட்டுமே என ஆக்கிக்கொள்வது. இந்த ஒப்பந்தத்தின்மேல் கட்டப்படுவதுதான் காதலின் மற்ற சிறப்புக்கள் எல்லாம். ஆகவே மணத் துரோகத்தில் இந்த அடிப்படை ஒப்பந்தம் உடைக்கப்பட்டுவிடுகிறது. அதனால் அதன் மீது கட்டப்பட்டிருந்த காதல் உடைந்து விழுந்துவிடுகின்றது. மண ஒப்பந்தம் என்பது தன் ஆயுட்காலம் வரைக்குமான ஒன்று அதை நடுவிலேயே தன் துணை முறித்துவிடுவது என்பது ஒருவர் உளவியலில் ஏற்படுத்தப்படும் பெரும் தாக்குதல். அதில் தாக்கப்படும் அனைவரும் பெரும் பாதிப்பை அடைகின்றனர். அந்த பாதிப்பில் பெருந் துயரத்தையும் வாழ்க்கை முடிந்துவிட்டதான உணர்வையும் தாம் பெரிதாக வஞ்சிக்கப்பட்டுவிட்டோம் என்ற ஏமாற்றத்தையும் உணர்கிறார்கள். இதை வைத்து இப்படி ஏமாற்றப்பட்டவர்கள் கொள்ளும் பெருஞ்சினத்தையும் துயரையும் நாம் புரிந்துகொள்ளலாம்.
வெண்முரசு தேவயானி, யயாதி சர்மிஷ்டையிடம் கொள்ளும் உறவு காரணமாக அடையும் கடும் கோபம் , பெரும் வெறுப்பு, தீரா வஞ்சம், ஆகியவற்றை காட்சிப்படுத்தியிருக்கிறது. தேவயானியின் ஆளுமைக்கேற்ப இவை வெளிப்படுகின்றன. முதலில் அவனை முற்றிலுமாக உதாசீனப்படுத்துகிறாள். அவனிடம் சென்று அவள் நியாயம் கேட்கக் கூட விழையவில்லை. மனம் வஞ்சம் கொள்ளும்போது சிந்தனைக்கேற்ப சொற்கள் மாறுகின்றன.
இழந்ததை பறிகொடுத்தது என்றும் பழிசூடியதை சிறுமைசெய்யப்பட்டது என்றும் சொல்மாற்றம் செய்துகொண்டால் அது அவ்வண்ணமே ஆகிவிடுகிறது. மானுடனுக்கு உளமென்ற ஒன்றை அளித்த தெய்வங்கள் பயந்தது நற்கொடையா தீச்சொல்லா? தனிமையை கைவிடப்படுதல் என்றும் இயலாமையை வெறுமை என்றும் சினத்தை அறச்சீற்றம் என்றும் வஞ்சத்தை நெறியுணர்வு என்றும் மாற்றி அங்கே சேர்த்து வைத்திருக்கிறேன். நான் என நானுணரும் அனைத்தும் சொல் சொல்லென தேர்ந்து நான் அடுக்கிப் பின்னி படைத்தெடுத்தவை.
இந்த வஞ்சத்தை மனம் அனுபவிக்கத் தொடங்கியபின் அவ்வளவு எளிதாக அவ்வஞ்சத்தை மனதிலிருந்து விலக்கிவிட முடியாது. அவ்வஞ்சத்தை தீர்க்கும்பொருட்டு சொல்லப்படும் சொற்கள், செய்யப்படும் செயல்கள் எல்லாம் அந்த வஞ்ச நெருப்பை வளர்க்கும் ஆகுதிகளாக மாறுகின்றன.
அவன் கைகூப்பி “நான் பிறிதொன்றும் சொல்வதற்கு இல்லாதவன். என்னை வெறுமொரு உடல் மட்டுமே என்று இப்போது உணர்கிறேன். குருதி விந்து சீழ் மலம் இவையே நான். அரசி, நான் விழிநீரும்கூட. உடலின் விசைகளால் இயக்கப்பட்டவன். நிகழ்ந்தவை அனைத்திற்கும் என் விழைவன்றி பிறிதெதையும் விளக்கமென சொல்லமாட்டேன்” என்றான். அவள் கண்களைத் தாழ்த்தி நீரோடையை பார்த்துக்கொண்டிருந்தாள். “அறியா இளமைந்தனாக பிழைசெய்து மீண்டு அன்னையின் முன் வந்ததுபோல் இங்கு நின்றிருக்கிறேன்” என்று யயாதி சொன்னான்.
யயாதி கேட்கும் மன்னிப்பினை புறங்கையால் விலக்கி விடுகிறாள். அவனைக் காண்கையில் இன்னும் இன்னும் என சினமும் வஞ்சமும் அவளிடம் பெருகுகிறது எரிமலையிலிருந்து பீறிட்டுக் கிளம்பும் அனல்குழம்பென அவள் சீற்றம் வெளிப்படுகிறது. தீராமல் பெருகும் சீற்றத்துக்கு தன்னை ஆட்படுத்திக்கொள்கிறாள்.
அவள் உதடுகள் கோணலாயின. பற்களைக் கடித்து முறுக்கிய கைகளை தொடைமேல் அடித்த பின் அங்கிருந்து செல்வதற்கு திரும்பினாள். அவ்வசைவு அவள் உடலில் கூடிய அக்கணமே காற்றிலிருந்து பிறிதொரு தெய்வம் அவள்மேல் ஏறியதுபோல கழுத்துத்தசைகள் இழுத்துக்கொள்ள வலிப்பெழுந்த அசைவுகள் உடலில் கூட திரும்பினாள். தன் இடக்காலால் யயாதியின் தலையில் ஓங்கி மிதித்தாள். இறந்த உடலென அவன் தலை அந்த உதையை ஏற்று அசைந்தது. முகத்தை தரையிலிருந்து அகற்றாமல் அவன் அவ்வாறே கிடந்தான். முதல் உதையால் வெறிகொண்டு நிலையழிந்த அவள் அவன் தலையை எட்டி எட்டி உதைத்தாள். “இழிமகனே! இழிமகனே!” என்று மூச்சென்றே ஒலித்தபடி உதைத்து பின்பு நிலைத்தாள்.
இந்தக் கோபம் நாம் இக்காலத்திலும் காணக்கிடைக்காத ஒன்றல்ல. பலரால் இப்படி தன் சீற்றத்தை வெளிப்படுத்திக்கொள்ள முடியாமல் போகலாம். ஆனால் தன் துணை செய்யும் மணத்துரோகத்திற்கு ஒவ்வொருவரும் இதேயளவு சீற்றம் கொள்கின்றனர். வெகு சிலருக்கு இச்சீற்றம் இன்னும் வலுத்து தன் துணையை கொல்லும் அளவுக்கு வீறுகொண்டு எழுகிறது. தேவயானி தான் மட்டுமல்ல தன் குருதியில் பிறந்த அனைவரும் அவனை மறுதலிக்க தீச்சொல்லிடுகிறாள். அதாவது அவள் பிள்ளைகளுக்கு அவன் தந்தை என்ற உறவை அறுத்தெறிகிறாள். இது ஒருவரைக் கொல்லும் செயலுக்கு சற்றும் குறைந்ததல்ல.
கைகளை இடையில் ஊன்றி இடைதளர்ந்து உலைவாய் என மூச்சு சீற நின்றாள். சீறும் ஓநாய் என வெண்பற்கள் தெரிய “இழிமகனே…” என கூவினாள். அவன் தலைமேல் எச்சிலை காறி உமிழ்ந்து “உன்மேல் தீச்சொல்லிட்டு என் மீட்பை அழிக்க நான் விரும்பவில்லை. இனி உன் எண்ணத்தில் என் முகமோ பெயரோ எழாதொழியட்டும். என் குருதியில் பிறந்த கொடிவழிகள் தந்தையென உன் பெயரை ஒருபோதும் சொல்லாது அமையட்டும்.
ஒவ்வொருவரும் தான் உழன்றுகொண்டிருக்கும் பிறவிச்சுழல் என்பதிலிருந்து விடுபடல் என்பது இறுதி இலட்சியமென இருக்கிறது. ஆனால் அவன் மேல் கொண்ட வஞ்சத்தின் காரணமாக தான் அடுத்த பிறவி தேவையில்லை எனக் கூறுகிறாள். இதன் பொருள் அவனை எதிர்காலத்தில் மட்டுமல்லாமல் எதிர் வரும் பிறவிகளில்கூட மன்னிக்கமாட்டேன் என்பதாகும். இப்படியாக முற்றிலுமாக அவனை தன் வாழ்விலிருந்து, தன் சிந்தையிலிருந்து, திருமணம் மூலம் அவனிடம் அவள் கொண்டிருந்த பிணைப்பை அறுத்து வீசி எறிகிறாள்.
இப்பிறப்பிலேயே என் ஊழ்ச்சுழலை அழிப்பேன். எனவே இனி ஒரு பிறவியிலும் உன் துணையென அமரமாட்டேன். நீ என்னை தொட்டாய் எனும் நினைவை தவத்தால் வெட்டி அறுப்பேன். இனி மறுகணம் முதல் நீ இருந்ததும் மறைவதும் எனக்கொரு பொருட்டில்லை” என்றபின் திரும்பி குழலை இடக்கையால் சுற்றிச் சுழற்றி பற்றினாள். விழிகள் அலைய குடிலோரத்தில் சுவரில் மாட்டப்பட்டிருந்த உடைவாளை நோக்கி சென்று அதை எடுத்து தன் நீள் குழலை அறுத்தாள். அந்தக் கரகரப்பு ஓசை யயாதியின் உடலை உலுக்கவைத்தது. குழல்தொகையை ஓங்கி நிலத்திட்டு மூச்சு வாங்கி ஒருகணம் நின்றபின் கதவை இழுத்துத் திறந்து காலடிகள் மிதியோசை கொள்ள வெளியே சென்றாள்.
ஆனால் இதுபோன்று நடக்கும் என யயாதி எதிர்பார்க்காத ஒன்றல்ல. உலகிலிருக்கும் யார் ஒருவருக்கும் இத்தகைய மணத்துரோகத்தை தன் துணை சகித்து ஏற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கமாட்டார்கள். ஆனாலும் மனிதர்கள் ஏன் இந்தத் தவறைச் செய்கிறார்கள்? தன் துணை மேல் கொன்ட ஏதோ ஒரு வெறுப்பு அல்லது கோபம் காரணமாக இருக்குமோ? ஆனால் அப்படி ஏதுவும் இல்லை. மிக அழகான, மிகுந்த அன்புகாட்டும் வாழ்க்கைத்துணையைக் கொன்டிருபந்தவர்கள்கூட இதுபோன்ற முறைதவறிய உறவில் ஈடுபட்டிருக்க்கிறார்கள். யயாதியும் தேவயானியிடம் தான் எவ்வித வஞ்சம் கொண்டிருக்கவில்லை எனக் கூறுகிறான்.
“நீ செய்தது வஞ்சம்” என்றார் சுக்ரர். யயாதி “அல்ல, அதை நான் எந்த தெய்வத்தின் முன்னும் சொல்வேன். வஞ்சனை செய்பவன் அதை தன் திறனென எண்ணிக்கொள்வான். அதன்பொருட்டு அவன் ஆழத்தில் ஒரு துளி மகிழ்ந்துகொண்டிருக்கும். நான் இதை பிழையென அறிந்திருந்தேன். ஒவ்வொரு கணமும் அதன்பொருட்டு இவளிடம் பொறுத்தருளக் கோரிக்கொண்டிருந்தேன்.
இந்தத் தவறைச் செய்ததற்கு ஒருவர் ஏதேதோ காரணங்களைக் கற்பித்துச் சொல்லலாம். ஆனால் அடிப்படைக் காரணமாக இருப்பது ஒருவருள் உறையும் காமமே.
இக்கணம்வரை உனை ஆட்டிவைத்தது உன் காமம். தசைகளிலெரியும் அனல் அது. அதை காதல் என்றும் கவிதை என்றும் கலை என்றும் பெருக்கிக் கொண்டாய்” என்றார் சுக்ரர்.
ஒரு துணையின் மூலம் ஏன் ஒருவர் தன் காமத்தில் நிறைவடைய முடியாமல் போகிறது? காம இன்பத்தை ஒருவரின் மனம் பெருக்கி தன்னுள் நிறைத்துக்கொண்டிருக்கிறது. உடல் காமத்தை நுகர்வதைவிட ஒருவர் மனம் நூறு மடங்கு காமத்தின் பால் இன்பத்தை ஏற்றி வைத்திருக்கிறது. அதன் காரணமாக தன் துணையிடம் அடைந்த இன்பத்தைவிட இன்னும் அடைவதற்கு ஏதும் உள்ளதாக மனம் நினைத்துக்கொள்கிறது. அதை பலவழிகளில் தன் துணையிடம் தேடும் அம்மனம் ஒரு கட்டத்தில் வெளியில் தேடிப்பார்க்க முயல்கிறது. அது ஒரு மாயமான் வேட்டை. அது மனம் அருந்தத் துடிக்கும் கானல் நீர். அந்த தேடலில் புதிதாக ஏதும் கிடைக்கப்போவதில்லை என்ற எளிய உண்மையை மறக்கும்படி அவரின் அறிவு காம மாயையால் மறைக்கப்படுகிறது. அறிவு மயக்கத்தால் ஒருவர் தவறு செய்து விடுகிறார். இதுதான் காமம் என முழுமை அறிவு இல்லாத ஒருவரே இத்தகைய அலைகழிப்புக்கு ஆளாகிறார். வெண்முரசின் மற்றொரு ஆத்ம வாக்கியமான இது மிகச் சிறப்பானது. அனைத்து தவறுகளுக்கும் அடிப்படையாக இருக்கும் ஒரு அறியாமையை சுக்ரர் வாயிலாக அது பேசுகிறது.
தவத்தார் தவறுவது தாங்கள் விட்டு விலகுவதை முற்றறிந்துள்ளோமா என்னும் ஐயத்தால். உலகத்தோர் தவறுவது அடைந்ததை முற்றும் அடைந்தோமா என்னும் கலக்கத்தால்.”
தான் என்ன தவறு செய்திருக்கிறோம் என ஒருவர் முழுதறிய அவர் அகங்காரம் எப்போதும் இடம்கொடுப்பதில்லை. ஆனால் தள்ளாத முதுமையில் குறைந்தது அவர் உடல் மூலமாக அடைந்த அகங்காரமாவது அவரை விட்டு சென்றிருக்கும். அப்போது ஒருவேளை தான் செய்த சில தவறுகளை முழுமையாக அறிந்துகொள்ளமுடியும். யயாதி இப்போது மனம் வருந்தினாலும் இன்னு சில கணத்தில் அவன் அந்தத் தவற்றை பெரிதென நினக்காமல் மீண்டும் தன் முந்தைய நிலைக்கு திரும்பிவிடுவான். ஆகவே அவன் தன் தவறை முழுமையாக உணர்ந்துகொள்ள தள்ளாத முதுமையை சுக்ரர் அவனுக்கு அளிக்கிறார்.
“முதுமை எய்தி குருதி வற்றி தசை சுருங்கி எலும்புகள் தளர்ந்தபின்னரே நீ உன்னை கடப்பாய். எண்ணமென்றால் இறந்தவையே என்று மாற, இருப்பென்றால் எஞ்சுதலென்றாக, ஒவ்வொன்றும் அசையும் அமையும் காலமென்றே தெரியும் ஒரு நிலையிலேயே காமம் என்றால் என்னவென்று நீ அறியலாகும். இது என் தீச்சொல். நீ முதுமை அடைக!” என்றார் சுக்ரர்.
ஒன்றில் நிறைவடியாதவன் எப்போதும் அந்த ஒன்றால் ஆட்கொள்ளப்பட்டவனாக, அவன் இருக்கிறான். அந்த ஒன்று கிடைக்கமல் போவதால் அவன் அதிலிருந்து விடுபட்டுவிடுதில்லை. யயாதி இன்னும் காமத்தில் நிறை வடையாதவன். அதனை முழுதறிந்து நிறைவடையாத வரை அவன் காமத்திலிருந்து விடுபட முடியாது. ஆகவே முதுமை வெறும் நோயெனவே அவன் கொள்வான். ஒரு குருவெனவாகி அவன் காமத்தில் நிறைவடைவதற்கான வாய்ப்பையும் சுக்ரர் அவனுக்கு அளிக்கிறார்.
“நீ இத்தீச்சொல்லுக்கு மாற்று கேட்கவில்லை” என்றார் அவர். “ஆம், மாணவனாகிய எனக்கு எது தேவை என்று நீங்கள் அறிவீர்கள்” என்றான் யயாதி. “நீ விழைந்தால் இம்முதுமையை பிறருக்கு அளிக்கலாம். ஆனால் உன் பொருட்டு அதை அவர் விரும்பி பெற்றுக்கொள்ள வேண்டும்” என்றார் சுக்ரர்.
யயாதி தான் பெற்ற இச்சாபத்தை வரமென ஆக்கிக்கொள்வது அவன்கையில்தான் உள்ளது. ஏனென்றால் ஞானியென நின்றிருக்கும் சுக்ரர் வாயிலிருந்து தீச்சொல்லென ஒன்று எப்படி வரும்? அவர் அவன் மேல் விட்டெறிந்தது வெறும் கல்லல்ல அது அருமணிஎன என அவன் அறிவானா எனத் தெரியவில்லை. வெண்முரசு இப்பகுதியில் மண உறவுத் துரோகம் மனதில் ஏற்படுத்தும் துயரம், சீற்றம், வஞ்சம் என அனைத்து பரிமாணங்களையும் விளக்கிச் செல்கிறது.
தண்டபாணி துரைவேல்