Thursday, November 1, 2018

காவியம் கடிதம்





அன்புள்ள ஜெ

சுசித்ரா எழுதிய காவியம் என்ற கடிதக்கட்டுரை வெண்முரசு பற்றி வந்தவற்றில் மிக முக்கியமான ஒன்று. நாம் வாசித்துக்கொண்டிருக்கும் இந்தப்படைப்பை எப்படிப் புரிந்துகொள்கிறோம் என்ற கேள்வியை அது முன்வைக்கிறது. இத்தகைய நவீன வடிவங்களை வாசிக்கையில் நமக்கு பலவகையான இடர்கள் உள்ளன. நாமறிந்த வழக்கமான நவீனக்கதைகளுக்குள் வைத்து சம்பிரதாயமான வரிகளை சொல்வோம். அல்லது பழைய வடிவங்களில் ஒன்றாக நினைத்துக்கொள்வோம். இது காவியம். ஆனால் காவியங்கள் போன்றது அல்ல. இது உடைத்து உடைத்துச் செல்கிறது. எதையும் பெரிதாக நிறுவிக்கொண்டே செல்வதில்லை. அதேசமயம் நவீனப்படைப்பும் ஆகும். ஆனால் நவீனப்படைப்புகளிலிருக்கும் பல இலக்கணங்கள் இதில் மீறப்பட்டுள்ளன. இதில் நவீனப்படைப்புகளுக்குரிய யூனிட்டி இல்லை. அதற்குப்பதிலாக பரவிக்கொண்டே இருக்கிறது

இதிலுள்ள காவிய அம்சம் என்றால் நான் இதிலுள்ள grand generalization களையேதான் சொல்வேன். வாழ்க்கையைப்பற்றி குணாதிசயங்களைப்பற்றி பிரபஞ்சம் பற்றி ஒரு பொதுவான vision வந்துகொண்டே இருக்கிறது. அது பெரும்பாலும் கவிதையின் வழியாக வெளிப்படுகிறது. கதாபாத்திரங்களின் எண்ணங்கள் வழியாகச் சொல்லப்படுகிறது. உதாரணம் யானையைப்பற்றி சுசித்ரா சுட்டிக்காட்டியிருக்கும் இடம். இந்த vision கு காவியங்களில்தான் இடமிருக்கிறது. இதை வெவ்வேறு உத்திகள் வழியாக இந்நாவல் சொல்லிக்கொண்டு செல்கிறது. ஆகவேதான் இது காவியத்தன்மையை அடைந்திருக்கிறது

ஸ்ரீனிவாஸ்