Monday, December 16, 2019

களிற்றியானைநிரை-01 நீரா? நெருப்பா?




அன்புள்ள ஜெ வணக்கம்.

வெண்முரசு களிற்றியானை நிரை நாவல் கொடுக்க தொடங்கியமைக்கு வாழ்த்தும் நன்றியும்.
களிற்றியானை நிரை நதியோட்டம்போல மென்மையாக நகர்ந்து போகிறது.  ஆனால் அதிவேகமாய் இழுத்து உள்ளுக்குள் அழுத்தி புரட்டி மூச்சு முட்டவைக்கிறது.  தீபத்தின் ஒளிபோல எங்கும் பரவுகிறது, ஆனால் கண்ணில் காட்சியை விரியவைத்து விரியவைத்து உள்ளத்தின் இருளை தீயின்நா என விழுங்குகிறது. 
ஆதிசங்கரர், சைதன்ய மகாபிரபு.  ஸ்ரீராமகிருஷ்ணபரமஹம்சர், ஸ்ரீரமணர் இந்த  ஞானயானைகள்போல்    எத்தனையோ மகான்கள் அன்னை என்னும் சங்கிலியால் கட்டப்பட்டவர்கள். அவர்களுக்கு தொலைவு தெரிந்துவிட்டது. ஆனால் அந்த சங்கிலியை அறுக்காமல் மெல்ல மெல்ல அந்த சங்கிலிக்கு வலிக்காமல் கழட்டிவிட்டு தொலைவுக்கு சென்றுவிட்டார்கள். இவர்கள் நெருப்பு போன்றவர்கள்.
குருராகவேந்திரர், ஸ்ரீலாகிரிமகாசயர், அன்னை சாரதாதேவி, ஆத்மானந்தர் யோகிராம்சுரத்குமார் இ்ந்த ஞானசிம்மங்கள்போல்  எத்தனையோ மகான்கள் குடும்பம் என்னும் வனத்தை நீருற்றி வளர்த்தபடியே அலைகளுக்கு அப்பால் உள்ள தொலைவை கண்டவர்கள். இவர்கள் நீர் போன்றவர்கள்.  
தொலைவுக்கு  சென்றதாலேயே அவர்கள் இன்னும் இங்கு இருக்கிறார்கள். இங்கு மட்டும் இருந்தால் போதும் என்று இங்கு இருந்தவர்கள் இங்குகூட இல்லாமல் போய்விட்டவர்கள்தான். உலகம் எத்தனை அற்புதமானது.

அன்பு உள்ள ஜெ. ஆதன் வழியாக மானிட உள்ளத்தின் அலைதலை, தொலைதலை, தேடுதலை, நிலைபெறுதலை மிக அற்புதமாக விளக்கி உள்ளீர்கள். மாபெரும்  மெய்யியல் மெய்மை பூத்து ஒளிர்கிறது. கதை சொல்லவில்லை கதையின் வழியாக உள்ளமும் உணர்வும் ஞானமும் சொல்கிறீர்கள். கதைவழியாக வாழ்க்கை, வாழ்க்கைவழியாக பாடம்.
கதை என்ன? விழிநாகன் மகன் ஆதன். தந்தையில்லா பிள்ளை. தனிமனுசி வளர்க்கும் வாயில்லாபிள்ளை. ஊருக்கு முன்னால் ஒன்றுக்கும் உதவாத ஆகாத பிள்ளை. அவ்வளவுதான் கதை.
கதை அவ்வளவுதான் என்று இருந்துவிடக்கூடிய கதை இல்லை இது. மண்ணில் பிறக்கின்ற குழந்தைகள் ஒவ்வொன்றும் இந்த கதைபோல அவ்வளவுதான் என்று இருந்துவிடப்போகின்றார்களா? அல்லது கதையின் ஆழத்தில் ஒளிரும் வைரம்போல   ஆகபோகின்றார்களா?
ஒரு உயிர் மண்ணில் பிறந்ததும் ஊரோடு ஊராக ஒன்று கலந்து நீர்போல தங்களுக்குள்ளேயே கலக்கிக்கொண்டு இருக்கலாம். அதிகபடியான மானிடகூட்டம் அதைத்தான் செய்கிறது. அதனால் அவைகள் சரியாக வாழ்வதுபோல் தெரிகிறது.  ஆதன் பிறந்த ஊர் அவனை தங்களுக்குள் கலந்து கலக்கத்தான் முயற்சிக்கிறது. சரியாக வாழவைக்க முயற்சிக்கிது. ஆதன் கண் என்னும் ஒரு புலனை மட்டும் திறந்து வைத்து மற்ற நான்கு புலன்களையும் ஊருக்கு முன்னால் மூடிவைத்துவிடுகிறான். திரவமாக இருந்தாலும் நீரும் எண்ணெயும் ஒட்டுவது இல்லை என்பபோல அவன் ஊரில் ஒட்டாமல் ஆகிவிடுகிறான்.  ஊரின் மொழியில் சரியாக வாழ்வது என்பது சராசரியாக வாழ்வதுதான். ஆதன் வேறாக வாழ்கிறான் அதனால்வெறுமனே வாழ்கிறான் என்று ஊர்நினைக்கிறது. வேறாக வாழ்வது என்பது வேள்வியாக வாழ்வது என்பதாகும் என்பதை ஆதன் காட்டுகிறான்.

ஆதன் ஒரு அழகான படிமம், உலகில் உள்ள அனைத்து உயிருக்குமான படிமம்.  அது பொருள் உலகில் பொருளாக இருக்கிறது. இருக்கிறது என்பதை தவிர அதன் இருப்பு பெரியதில்லை. பொருளாக இருப்பதாலேயே களவாடப்படக்கூடியது. பொருளாக இருப்பதாலேயே காணடியக்கூடியது. களவாடப்பட்டால் தேடி கண்டுபிடிக்கவேண்டியதாக உள்ளது. காணடிந்துவிட்டாலும் அலையவைக்கக்கூடியது.  தேடி கண்டபிடித்தல் அன்றி அதுவாக பேசி தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாதது.   
மண்ணில் பிறக்கும் ஒரு உயிர் ஒரு பொருள் மட்டும்தானா? அதை பொருளாக்கத்தான் உலகம் இத்தனை பேச்சும், சிரிப்பும், நடிப்பும், மணமும், குணமும் கொள்ளப் பழக்குகின்றதா? 
ஒரு உயிர் தன்னை பொருள் என்று ஆக்கிக்கொள்ளமல் உயிரென்று ஆக்கிக்கொள்ள தன் புலன்களை உலகம் பயன்படுத்தும் வகையில் பயன்படுத்தாமல் வேறு வகையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். ஆதன் அதைத்தான் செய்கிறான்.
பொருள் உலகை கடந்து அந்த உயிர் அருள் உலகை அடைய, அருள் உலகில் அது நீராகவும் ஆகலாம், நெருப்பாகவும் ஆகலாம். இரண்டு வழிகளில் அது தனது வாழ்க்கையை அமைத்துக்கொள்ள இங்கு சுதம்திரம் உள்ளது. அது என்னவாகபோகின்றது என்பது அதன் சுயதர்மத்தை சேர்ந்தது. நெருப்புபோல எல்லாவற்றையும் உண்டு, மேலே எழுந்து அருள்மழை பொழிந்து, விண்ணென்று ஆகலாம் அல்லது நீரென்று ஆகி மண்ணில் கலந்து வேர்விட்டு கிளைவிட்டு பூவிட்டு மணம்விட்டு கனிவிட்டு வனமென்றாகி வான்தொடலாம் அல்லது அலையும் கடலும் என்பதெல்லாம் நீரன்றி வேறல்ல என்று அலைகளுக்கு அப்பால் அலைதல் அற்ற நீராகலாம்.
உயிர்கள் நீரால் ஆனவை. நீராலான உயிர்கள் அனைத்தும், ஒரு உயிர் நெருப்பாவதை வெறுகின்றன. அல்லது அலைகள் இல்லாத படிகமாவதை துறக்கின்றன.
இந்த கதை ஏன் சொல்லப்படுகிறது? ஆதன் வாழ்க்கையை சொல்வதற்காக, வாழ்க்கையில் ஆதன் மனம்படும் பாட்டை சொல்வதற்காக, மனம்படும்பாட்டால் ஆதன் உணர்வுபெறும் நிலையை விளக்க, உணர்வால் ஆதன் உணரும் உண்மையை அடைய.
ஒரு உயிர் மண்ணில் பிறந்ததும் அது ஒன்றுபட்டு வாழபோகிறதா? அல்லது தனித்துவாழ போகிறதா? என்ற கேள்வி அதற்கு முன் வைக்கப்படுகிறது. ஒன்று பட்டு வாழ்ந்தால் நீ இங்கு இருப்பாய். நீர் மண்ணில் கலந்து இருப்பதுபோல நீயும் மனிதரில் கலந்து இருப்பாய். நீர்போல் இருப்பதாலேயே நீயும் ஐம்புலன்களுக்கும் ஆகக்கூடிய அரும்பொருளாய் இருப்பாய், தனித்து வாழ்ந்தால் இருந்தும் இல்லாமல் இருப்பாய். எனவே ஒன்று பட்டு வாழப்போகிறாயா? தனித்து வாழப்போகிறாயா? என்று கேள்வியை கதைமூலம் வாழ்க்கை கேட்டுக்கொண்டே இருக்கிறது.  
இந்த கேள்வியின் சத்தம் சிலருக்கு கேட்காமல் இருக்கலாம். சிலருக்கு கேட்டாலும் புரியாமல் இருக்கலாம். சிலரை எழுப்பும் வரை அது ஓயாமல் ஒலிக்கும் படுக்கையறை அலாரம்போல, சிலர் அதை அனைத்துவிட்டு தூங்கலாம். சிலர் மட்டுமே அது ஒலிப்பதற்குமுன்பே எழுந்து உலவ தொடங்கிவிடுகிறார்கள். ஆதன் அலாரம் ஒலிப்பதற்கு முன்பே உலாவ தொடங்கியவன். 
கதைக்குள் ஆதனுக்கு என்று ஒரு மனம், அந்த மனம் மலர்த்தும் எண்ணம், அந்த எண்ணம் கொண்டுவரும் சொற்கள், அந்த சொற்கள் கொண்டு வரும் உணர்வு, அந்த உணர்வு தரும் அறிவு, அந்த அறிவு நிலைகொள்ளும் தொலைவு.
ஆதன் போன்று ஒரு உயிர் மண்ணில் பிறக்கும்போது அந்த உயிர் ஊரை கடக்கவேண்டும், அன்னையை கடக்கவேண்டும், மிளையனை கடக்கவேண்டும், சித்தன்மேட்டில் உள்ள சித்தனையும் கடக்கவேண்டும். இத்தனைக்கு பின்புதான் அந்த உயிர் தனக்குள் முட்டும் எண்ணங்கள் கனிந்து சிந்தனையாவதையும், அந்த சிந்தனை தரும் சொல்லை அறியமுடியும் என்பதையும் காட்டுகிறது. 
அன்புள்ள ஜெ. கதையில் சில குழந்தைகள் தாயிடம் இருந்தும், சில குழந்தைகள் தந்தையிடமிருந்தும் சொற்களை பெறுகின்றன என்ற குழந்தைகள் உளவியல் உண்மையை எளிதாக வெளிப்படுத்துகிறீர்கள். இந்த உண்மையை அறிந்துக்கொண்டு குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள் அருளார்கள் அந்த குழந்தைகள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்.
ஊர் ஒரு ரகம் அது ஊரைதாண்டி எங்கேயும் போகாது அதன் வண்ணமும் வடிவமும் ஊருக்காகவே ஆக்கப்பட்டது, சித்தனமேடு நோக்கி வந்துகொண்டே இருக்கும் சித்தர்கள் ஒரு ரகம், அவர்களுக்காக சித்தன்மேடு காத்திருக்கும் அவர்கள் சித்தன்மேட்டுக்காக காத்திருப்பவர்கள். அவர்கள் பேரற்றவர்கள் அவர்களுக்கு ஊர் பேர்கொடுக்கும் அந்த பேரும் ஊர் பயன்படுத்தி தூக்கி எறியும் பொருள் பெயர்தான்.  அவர்கள் ஊருக்குள் வருவார்கள் ஆனால் அவர்களுக்குள் ஊர் வருவதில்லை. மிளையன் வேறு ஒரு ரகம். அவர்கள் ஊரிலும் இருப்பார்கள், சித்தன் மேட்டிலும் இருப்பார்கள் ஆனால் அவர்கள் தீமையின் துணையோடு  இருப்பார்கள். எத்தனை பெரிய ஆழமான உண்மை. மரமாகவும் இல்லாமல் வைரமாகவும் ஆகமுடியாமல் கரியாக இருக்கும் காலம் அது.
ஆதன் போன்ற ஒரு உயிர் அதன் தொலைவை ஊரைத்தாண்டி, அன்னையைதாண்டி, தந்தையின் தொழிலைத்தாண்டி, மிளையனைத்தாண்டி, சித்தன் துணையோடு சித்தனையும் தாண்டிதான் அதன் தொலைவை அடையமுடியும்.
களிற்றியானை நிரை-01 நீரா? நெருப்பா? என்கின்றது.

அன்பும் நன்றியும்
ராமராஜன் மாணிக்கவேல்.