Monday, December 2, 2019

களிற்றியானை நிரை (நூல் வணக்கம்)


வெண்முரசு என்னும் யானைகளின் நிரை

சொற்பெருவனத்தில் விளைந்த சொற்கள் பலகோடி. 
இன்னும் விளையாது கருக்கொண்டிருப்பவை எண்ணற்றவை.
விளைந்தவற்றில் பொருள் பூத்திருப்பவை பல்லாயிரம்.

அங்கு சிறு  பாறை ஒன்றில் தென்திசை நொக்கி இடக்கால் மடித்து வலக்கால் நிலம் தொட ஊழ்கத்தில் ஆழ்ந்துள்ளான் ஆசான்.
அவன் ஊழ்கத்தில் கருக்கொண்டு வனத்தில் உடல் வளர்த்து உருவாகி  வருகின்றது ஒரு களிற்று நிரை.

முன்னிரு கால்களென தத்துவத்தையும் உளவியலையும்    பின்னிரு கால்களென சமூகவியலையும்  இந்திய புராண மரபையும் கொண்டு   அமைந்துள்ளன அக்களிறுகள்.
தர்க்கம்  ஒளிவீசும் இரு வெண் தந்தங்கள் என  ஆக,  சொற்திறன்  தும்பிக்கையென அமைய,  கவித்துவங்களை  தன்னிரு காதுகளென அசைத்து,  நகைச்சுவை என்ற வால் பின்னாட  ஆன்மீகத்தை ஆன்மாவெனக்கொண்டு அசைந்தாடி வருகின்றன அவை. 

அக்களிறுகள்  ஒவ்வொன்றையும் வாசகர்கள்  தம் வாசிப்பு என்ற  கைகளால் தடவி முழுதறிய முயற்சிக்கின்றனர்.
இப்போது தோன்றி எழும் அக்களிற்று நிரையின்  இருபத்து நான்காவது யானையை,  
இளைய சிறுவனாக உடல் சிலிர்த்து,   உளம் குவித்து,  வணங்கி நிற்கின்றேன் நான்.