Monday, December 2, 2019

நீர்ச்சுடர் - 57 நாணயத்தைச் சுண்டி முடிவெடுத்தல்



       நாம் இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கட்டாயம் வரும்போது மிகவும் குழம்பிப்போகிறோம்.  எந்த உடையை இன்று  அணிந்துகொள்வது என்ற எளிய ஒன்றிலிருந்து எந்த வகைக் கல்வியை படிப்பது, எந்த வேலைக்கு போவது,  யாரை வாழ்க்கைத்துணையாகத் தேர்ந்தெடுப்பது என்பது வரை எல்லாமும் சிக்கலாக இருக்கிறது.  இயல்பாக, இரண்டில் எது சிறந்ததோ அதையே நாம் தேர்ந்தெடுக்க விழைகிறோம். ஆனால் அந்த இரண்டில் எது சிறந்தது என்பதை எப்படிக்காண்பது?   அதைக் கணிப்பதில் நம் அறிவைப் பயன்படுத்துகிறோம். அதே நேரத்தில் நம் அறிவின்மீது எப்போதும் நமக்கு ஐயமிருக்கிறது.  அதன் எல்லை குறுகியது. மேலும் அது நம் விருப்பு வெறுப்புகளால்,  முன்முடிவுகளால், பழுதுபட்டதாக உள்ளது.  இதில் மற்றொருவர் ஆலோசனையைக் கேட்டால், அவரின் சொல்லை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பது இன்னொரு சிக்கலான தேர்வாக ஆகிவிடுகிறது. 

     நம் அறிவால் பிறர் ஆலோசனையால் பல முன்மாதிரிகளை பரிசீலித்து எடுக்கும் முடிவு நமக்கு உகந்ததாக இருக்கும் என்பது நிச்சயமில்லை.  காலம் நமக்காக பின்னர் சமைத்துவைத்திருக்கும் சூழல் என்னவென்பது நமக்குத் தெரியாது. அந்தச் சூழலுக்கு இப்போது எடுத்திருக்கும் முடிவு சரியானதாக இருக்குமா என்பது நமக்குத் தெரியாது. எது நன்மை பயக்கும் எது தீமையை விளைவிக்கும் என்பதை காலம் நம் கண்களுக்கு காட்டுவதில்லை.  நிச்சயமின்மை என்ற புகையால் சூழ்ந்திருக்கும்  எதிர்காலத்தை ஊடுருவி பார்த்து ஊகிக்கும் திறன் நமக்கு இருப்பதில்லை.       ஆகவே ஒன்றை தேர்ந்தெடுப்பது என்பது பெரும்பாலும்  கடினமான ஒன்றாக இருக்கிறது.

  சுகோத்ரன் இரு வழிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவேண்டும் பாண்டவர்களின் வாரிசென ஆகி அஸ்தினாபுரத்தை அரசாளவேண்டும்.  அல்லது இனியும் ஒரு நிமித்திகனாக தன் வாழ்வை நடத்திச்செல்ல வேண்டும்.   சிறு வயதிலேயே அவன் தன் வாழ்வை நிமித்ததிகம் பயில்வதற்கு என்று அர்ப்பணித்துக்கொண்டவன். அவன் தந்தை அந்த முடிவை எடுத்து அவனை இளம் வயதிலேயே கல்விச் சாலைக்கு அனுப்பிவிட்டார்.  அவனுடைய தன்னறம் நிமித்திகத்தின் வழியாக நிகழ்வது என்றிருப்பதாக கருதி வந்திருக்கிறான்.  ஆனால் காலம் சூழலை வெகுவாக கலைத்துப்போட்டு விட்டது,  பாண்டவர்களின் ஒரே மைந்தனென அவன் எஞ்சி இருக்கிறான்.  வாரிசுவரிசை அவன் மூலம் தொடர வேண்டும். உத்தரைக்கு இன்னும்  மகன் பிறக்கவில்லை.  ஆகவே அவன் திரும்பவும் அஸ்தினாபுரத்தின் இளவரசனென ஆகி பின்னர் மணிமுடி சூழ வேண்டிய தேவை எழுந்துள்ளது.  அவன் நிமித்திகனாக தன் வாழ்வை தொடரவேண்டும் என்று சகதேவன் கூறுகிறான். அவன் அன்னையோ மீண்டும் அரச வாழ்வுக்கு வந்து இளவரசனாகி அஸ்தினாபுரத்தின் அரியணைக்கு உரியவனாக ஆகுக என்று பணிக்கிறாள்.  அதையே தருமரும் கூறுகிறார்.    இப்போது அவன் முன் இரு வழிகள் உள்ளன. எதைத்  தேர்ந்தெடுப்பது என்ற சிக்கல் இப்போது அவனுக்கு எழுந்துள்ளது.  இது அவன் இனி வாழும் முறையைத்  தீர்மாணிப்பது.  அவன் முன் இருக்கும் இருவழிகளுக்குமான தர்க்கம் சமமாக இருக்கிறது. அவனுக்கு ஆணையிட வேண்டிய இருவரான தந்தையும் தாயும் இரு வெவ்வேறு வழிகளைக் கூறுகிறார்கள். எப்படி அவன் தன் முடிவை எடுப்பது?

        இறைவன்  எப்போதும் நம்மை பகடி செய்யும் வழக்கமுடையவன். சில சமயம் நாம் கேட்டதையே கொடுத்து அதன்மூலமே நம்மை சிக்கலில் ஆழ்த்தி சிரித்து விளையாடும் குறும்பன்.   ஆகவேதான் நான் கடவுளிடம் எதையும் வேண்டிக்கொள்வது இல்லை. ஐயா நீயே பார்த்து எதையாவது செய்துகொள் என்று அவனிடமே விட்டுவிடவேண்டும்.  இல்லையென்றால் பின்னர் நம்மிடம் நீதானே இதைக்கேட்டாய் என சொல்லிச் சிரிப்பான்.   இதைப்போன்ற முடிவெடுக்கும் வேளையில்,   எது சரியென்று தர்க்க பூர்வமாக அறிய முடியாத நிலையில், அதை அவனிடமே விட்டுவிடுவது நல்லது. அதை அவன் நேரடியாகச் சொல்ல மாட்டான்.  இது போன்ற சமயங்களில்  நாம் என்ன செய்கிறோம் என எண்ணிப்பார்க்கிறேன்.  முடிந்தவரை முடிவெடுப்பதை தள்ளிப்போடப்பார்க்கிறோம்.  முடிவெடுத்தே ஆகவேண்டிய நிலைவரும்போது  வீட்டுப் பெரியவர் அல்லது நாம் மதிப்பு வைத்திருக்கும் யாராவது ஒருவர் சொல்லை தர்க்கம் ஏதுமின்றி  ஏற்றுக்கொள்கிறோம்.    அல்லது கடவுளின் முன் திருவுளச்சீட்டு போட்டுப்பார்க்கிறோம்.  இவை அனைத்தும் ஒரு நாணயத்தை சுண்டி பூவா தலையா பார்த்து முடிவெடுப்பதற்கு சமமானதாகும்.  இப்படியாக முடிவெடுக்கும் வேலையை கடவுளிடம் தள்ளிவிடுகிறோம்.  இரு வழிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் சிக்கலிலிருந்து நாம் இவ்வாறு விடுபட்டு விட ஒரு வழி இருக்கிறது.  

    சுகோத்ரன் சுண்டுவது இயற்கை என்ற நாணயத்தை.  விழுவது  பூவா தலையா என்பதை இயற்கையின் குறியின் மூலம் அறிய நினைக்கிறான்.  அவன் நிமித்திக இயல் படித்தவன்.  இயற்கை அளிக்கும் ஏதாவது நிமித்தத்தை தனக்கான பதிலாக கொள்ளலாம் என்று நினைக்கிறான்.    அதற்காக அவன் காத்திருக்கிறான்.  தருமர் பக்கத்தில் வந்து அமரும்படி அழைக்கிறார். இயற்கை வேறு குறியெதுவும் அதுவரை காட்டவில்லை. தருமரின் அழைப்பை இளவரசனாவதற்கான  குறியெனக் கொண்டு அவன் அமரநினைக்கிறான். 
சுகோத்ரன் யுதிஷ்டிரன் அருகே சென்று நின்றான். அவர் அவனிடம் அமரும்படி கைகாட்டினார். அவன் கைகூப்பியபடி நின்றான். அவர் அமர்க என மீண்டும் கைகாட்டினார். சகதேவன் அவனை வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தான். அவன் அமரப்போகிறவன்போல கால்களை சற்றே மடித்தான்.
அக்கணத்தில் வாளை உரசி உருவும் ஓசையுடன் ஒரு சிறு பறவை ஊடாகச் சீறிப்பறந்தது. திடுக்கிட்டு சுகோத்ரன் திரும்பி நோக்கினான். அப்பறவையை நோக்க முடியவில்லை. அவன் திரும்பி நோக்கியபோது கரையில் ஒரு கலைவைக் கண்டான். அங்கே மீண்டும் ஒரு கொம்பின் ஒலி எழுந்தது. அனைவரும் திகைப்புடன் திரும்பி நோக்க ஒற்றைக்குதிரை பூட்டப்பட்ட தேர் வந்து நின்றது.

அச்சமயத்தில்  இயற்கை தன் தேர்வை அவனுக்கு ஒரு  பறவையின் ஓசையின் மூலம் உணர்த்துகிறது. குந்தியின் வருகையால் அவன் அமர்வதற்கு தடங்கல் நிகழ்கிறது. சுகோத்ரன் இதை ஒரு நிமித்தக்குறியெனக் கொண்டு  தான் தேர்ந்தெடுக்க வேண்டிய வாழ்வுமுறை ஒரு  நிமித்திகனாக இருப்பதே என்பதை முடிவு செய்கிறான்.  
சுகோத்ரனிடம் அமர்க என்று கைகாட்டினார். சுகோத்ரன் “இல்லை, தந்தையே” என்றான். “நான் நீர்க்கடன்கள் செய்யப்போவதில்லை” என்றான். யுதிஷ்டிரன் திகைப்புடன் “நீ அதற்காகவே வந்தாய்” என்றார். “ஆம், ஆனால் இப்போது வேண்டாம் என முடிவெடுத்தேன். எனக்கான ஆணை இப்போது வந்தது.

     ஆனால் அதற்காக ஏன்அவன் நீர்க்கடன்கள் செய்யாதிருக்க வேண்டும்?  ஏனென்றால் அவ்வாறு செய்தால் அவன் பாண்டவ்ர்களின் வாரிசு என்று  நிலைத்துவிடுவான்.   பாண்டவர்களின் வாரிசாக இருந்துகொண்டே இளவரசப் பட்டத்தை துறந்து  அவன் ஒரு வேளை இருக்கலாம்.  ஆனால் அவன் குருதியினால் அஸ்தினாபுரத்தின் இளவரசன் என ஆனவன்.  அவனைவிட இளையவனுக்கு அரசுரிமை போவது என்பது பின்னாட்களில் எத்தகைய சிக்கல்களை உருவாக்கும் என்பதை  நாம் அறிவோம்.   குரு வம்சம் சந்தித்திருக்கும்  குருஷேத்திரப்போர்  என்ற பேரழிவுக்கு காரணமாக நின்றது இந்தவகையான சிக்கல்தான் அல்லவா?  ஆகவே   அவன் பிறப்புரிமையை விட்டுக்கொடுக்க அவன் தன் பெற்றோரை குடும்பத்தை முற்றாக துறந்து செல்வது ஒன்றே வழி.    அதற்கு பாண்டவர்களை இணங்க வைக்க அவன் சொல்லும் வெறும் வார்த்தைகள் தான் இவை.
 இந்தப் பொறுப்பை நான் எடுத்துக்கொண்டால் இப்பழிக்கும் இத்துயருக்கும் நான் பொறுப்பாகிறேன். இவற்றை நான் துளியும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இவை எவையும் என்னுடையவை அல்ல” என்றான்.

    இப்படி முற்றாக தன் நாடு மக்கள் சுற்றம் பெற்றோர் ஆகியோரை   துறந்து ஊழின் ஆளுகைக்கு முற்றாக ஒப்புக்கொடுப்பவன் அல்லவா ஒரு உண்மையான நிமித்திகனாக இருப்பான்.  அவன் சகதேவனை  குற்ற உணர்விலிருந்து விடுவிக்கிறான்.  பாண்டவ குடும்பத்திற்கு பின்னாளில் எவ்வித வாரிசுரிமை  சிக்கல்கள்  எழாது போகச் செய்கிறான்.  வெண்முரசில்  சில பக்கங்களே வந்தாலும்  அதன் உன்னத கதா பாத்திரங்களில் ஒன்றாக சுகோத்ரன் மிளிர்கிறான்.

தண்டபாணி துரைவேல்