Sunday, October 12, 2014

வாசிப்பின் எல்லைகள்




ஆசிரியருக்கு,

  வணக்கம். நீலம் யாருக்காக? படித்தேன். நல்ல பாடம்.  முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல் மிக பிடித்தமானது. பீமனும், அர்ஜுனனும், கர்ணனும், ஏகலைவனும்,துரியோதனும் மிக நெருக்கமாக வந்தார்கள். ஆனால் அந்த  அளவுக்கு நீலம் மனம் கவரவில்லை. சிறுவயதில் இருந்தே கிருஷ்ணர் மீதி காதல்  இருந்ததில்லை. ராதை பற்றியெல்லாம் மேலோட்டமாக சில வரிகள் மட்டுமே தெரியும். திருவிளையாடல் புராணம், கந்தபுராணம், தேவாரம் போன்றவை பெற்றோர், சுற்றம் வழியாக காதிலும், காது வழியாக மனத்திலும் வந்து ஒட்டிக் கொள்ள சிவன், முருகன் மீதான ஒட்டுதல் ஒருதலை பட்சமாக இருப்பதாக இப்போது தோன்றுகின்றது. கொற்றவையும், விஷ்ணுபுரமும் மிக பிடித்திருந்தது.ஆனால் நீலம் அந்நியமாகவே இருந்தது. நீலத்தின் மொழி வாசிக்கவும் கூடவில்லை. சூரியனை கொண்டு கர்ணன் தேரோட்ட திருவிழாவில் கலந்து கொண்ட போதும், முடி சூடிய போதும் நீங்கள் சித்தரித்த எழுத்துகள் மிக பிடித்து இருந்தது.  ஆனால் துரோணரின் தர்ப்பை பற்றி நீங்கள் சொன்னது கோனார் நோட்ஸ் படித்த பின்னரே விளங்குகின்றது.

கடலை கையால் அள்ளி அளக்கும் முயற்சியே உங்கள் எழுத்துகளின் மீதான என் வாசிப்பு. முடிந்ததவரை செய்யவே உத்தேசம்.

நன்றி
அன்புடன்
நிர்மல்



அன்புள்ள நிர்மல்,

பொதுவாக எந்த ஒரு செறிவான நூலையும் கூட்டுவாசிப்பின் வழியாகவே நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ளமுடியும். நாம் ஒரு கோணத்தில் ஒருசில விஷயங்களை தீவிரமாகக் கவனிப்பதனாலேயே வேறுகோணத்தையும் வேறுவகை வாசிப்புகளையும் விட்டுவிடுவோம். அதை இன்னொருவாசகர் சொல்வார். மேலைநாட்டின் பெரும்படைப்புகளெல்லாம் பலகோணங்களிலான வாசிப்புகள் வழியாக நமக்கு அறிமுகமாகின்றன. நம்மூர் படைப்புகளை நாம் மிகக்குறைவாகவே வாசித்து விவாதிக்கிறோம். குறைந்தபட்சம் இவ்வகை வாசகர்கடிதங்கள் அதற்கு உதவுகின்றன.

பலசமயம் படைப்புகள் கொஞ்ச காலம் முடிந்தபின் புரிய ஆரம்பிக்கின்றன. அதற்குக் காரணமும் இதுவே. சூழலில் மெல்லமெல்ல ஒரு கூட்டுவாசிப்பு உருவாகி ‘எப்படியோ’ நமக்குக் கிடைத்துவிடுகிறது. விஷ்ணுபுரம் வெளிவந்தகாலத்தில் பெரும்பாலானவர்களுக்குப்புரியாததாகவே இருந்தது. இப்போது கணிசமானவர்கள் அதற்குள் எளிதாகச் செல்லமுடிகிறது

வெண்முரசு விவாதங்கள் தளம் அதற்காகவே. அதிலுள்ள பலகோணங்களிலான வாசிப்புகள் நம் வாசிப்பை முழுமைநோக்கிக் கொண்டுசெல்லும்.

ஜெ



அன்புள்ள ஜெ சார்

இருவகை வாசிப்புகளை தெளிவாக உணரமுடிந்த கட்டுரை. இந்தக்கோணத்தில் நானே யோசித்திருக்கிறேன். படைப்பில் ஒரு நுட்பமான வாழ்க்கைவிஷயத்தை கண்டுகொள்ளக்கூடியவர்கள் கவித்துவத்தை புரிந்துகொள்வதே இல்லை. கவித்துவம்கூட mundane ஆக இருக்கவேண்டுமென எதிர்ப்பார்ப்பார்கள். சமகால வாழ்க்கையை கொண்டு மட்டுமே இலக்கியத்தை வாசிப்பவர்கள் இருக்கிறார்கள். perennial விஷயங்கள் metaphorical ஆகவே வரமுடியும் என்பதை யோசிப்பதில்லை. அதோடு இன்றைய படைப்புகள் வாழ்க்கையை stylize செய்த் சொல்கின்றன நேரடியாக documentation செய்வதில்லை என்பதையும் உணர்வதில்லை. ஆகவே தவறான வாசிப்புகள் நிறைய உள்ளன. போதாத வாசிப்புகள் என்று சொல்லலாம். ஆனால் வேறுபக்கமாக எக்கச்சக்கமாக முறுக்கிக்கொண்டிருப்பதனால் அவர்களுக்கு புரியவும் வாய்ப்பில்லை. அவர்கள் தங்கள் வாசிப்பு சிறந்தது முழுமையானது என்று உறுதியகாவும் இருப்பார்கள். இதுபோன்ற விவாதங்கள் அந்த உறுதி இல்லாமல் கொஞ்சம் யோசிக்கத் தயாராக இருப்பவர்களுக்கு உதவும்

பசவராஜ்

கேசவமணி மழைப்பாடல் பற்றிய பதிவு