Sunday, October 12, 2014

இருவகைவாசிப்புகள்




அன்புள்ள ஜெ

நீலம் வாசித்து முடித்தேன். எனக்கு அது நெகிழ்ச்சியை உருவாக்கவில்லை. பரவசமும் ஏற்படவில்லை. எனக்கு கிருஷ்ணன் ராதை எல்லாமே வெறும் குறியீடுகள் தான்.அவ்ற்றில் பிறர் உணரும் cultural load ஐ நான் உணரவில்லை. சின்னவயதுமுதலே நான் வளர்ந்ததும் வாழ்வதும் எல்லாம் வேறு ஒரு சூழலில் என்பதனால் இருக்கலாம்

ஆனால் நாவல் எனக்கு ஒரு சௌந்தரிய அனுபவமாக இருந்தது. லா.ச.ரா பயன்படுத்திய வார்த்தை அது. மொழியைக்கொண்டு அழகை உருவாக்குவது என்ற அளவில் நீலம் ஒரு சாதனை. மொழியின் ஒலியழகும் சரி, visual images வழியாக உருவாகும் evocation னும் சரி மிகச்சிறப்பாக இருந்தன

அதற்காகவே நீலத்தை பலமுறை வாசித்தேன். பல வரிகளை சொல்லிச்சொல்லிப்பார்த்தேன். கச்சிதமாகவும் சுருக்கமாகவும் சொல்லியே இத்தனை அணிகளை உருவாக்கமுடியும் என்பது ஒரு பெரியவிஷயம்தான்

ராகவேந்தர்






சார்,

நீலம் நிறைவுற கண்ணில் நிறமில்லாத  நீர் நிறை கொண்டது. மனதிற்கு இமையும் விழியும் முளைக்க கண்டேன்.. விம்மி விம்மி அழும் ஒலியை ஓயாது உணர்கின்றன செவி முளைத்த இதயங்கள். கண்ணனாக ராதையாக மாறி மாறி நான் அலைந்து வருகிறேன். வாசித்த எனக்கு இத்தகைய அனுபவம் என்றால் படைத்த உங்களுக்கு எப்படி இருக்கும் என்று உணர முடியவில்லை. ஏனெனில் அறிய முடியாத ஆழத்தில் அமைந்திருக்கிறது உங்களுக்குள் உயிர்கொண்ட அந்த அனுபவம்.

மீண்டும் நீலத்தை முதலில் இருந்து துவங்க இருக்கிறேன் மீள முடியாத புதைகுழியில் மனமுவந்து என்னை ஒப்புக் கொடுக்க இருக்கிறேன். 

நன்றி 

- வி.வெங்கட பிரசாத் 



அன்புள்ள ஜெ சார்

நீலம் வாசித்தேன். நான் சைவன். கிருஷ்ணன் ராதை போன்றவர்கள் எனக்கு பெயர்கள்தான். எங்கள்வீட்டில் பெருமாள் பெயரே சொல்லக்கூடாது என்று சட்டம் [உங்கள் தளத்தில் நீலத்தை புகழ்ந்து எழுதியவர்களெல்லாருமே வைணவர்கள் என்பதை பார்த்தேன்]

நான் நீலம் நாவலை ஒரு காதல்நாவலாகவே பார்த்தேன். குழந்தையாகவும் காதலனாகவும் ராதை கண்ணனைப்பார்க்கிறாள். பெண்ணாக நின்று ஆணை அறிவதன் எல்லா நிலைகளையும் ராதை வெளிப்படுத்துகிறாள். அதைவாசித்தது நிறைவூட்டியது. 

காதலின் வேதனையையும் பரிதவிப்பையும் களிப்பையும் சொன்ன இடங்கள் அற்புதமாக இருந்தன. இந்த புராண அர்த்தங்கள் இல்லாமலெயே நாவல் முழுமையாகத்தான் இருக்கிறது