Thursday, November 6, 2014

பிரயாகை 12



அன்பு ஜெயமோகன்,
          நாம் இருமைகளால் அலைவுறுவதற்கும், மனருசியில் மாட்டிக்கொண்டிருப்பதற்கும் அடிப்படைக் காரணியான ஆசையை நோக்கி குந்தியின் உரையாடல் நகர்கிறது. ஆசையின் உண்மையான வடிவத்தைக் கண்டவர் இதுகாறும் அவனியில் இல்லை. ஆசையே துன்பத்திற்குக் காரணம் எனச் சொன்ன புத்தனுக்கு அதைச் சொல்லத் தூண்டியதும் ஆசைதானே? இவ்வுலக ஆசையைத் துறந்து விட்டதாய்ச் சொல்பவனுக்கு அவ்வுலக ஆசை வந்துவிடுகிறது. ஏதாவது ஒரு உலகைப் பற்றிக்கொள்ளாமல் மானுடன் திருப்தியடைவதில்லை. இவ்வுலகு, அவ்வுலகு எனும் பகுப்பு கூட நம் வசதி கருதி நாம் கட்டமைத்திருக்கும் கருத்தாங்களே. நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்ளும் மன உருவகங்களே. இவ்வுலகைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பவர் ஆசையால் துன்புறுகிறார் என்பது போலவும், அவ்வுலகை நோக்கி மனதை நகர்த்துபவர் ஆசையால் பாதிக்கப்படிவதில்லை என்பதாகவும் பொதுவாக ஒரு கருத்து மானுடகுலத்தால் நம்பப்பட்டு வருகிறது. நம்பிக்கையளவில் கூட இக்கருத்தை நாம் ஒப்புக்கொண்டுவிட முடியாது.
ஆசையை முதலில் என்னவென்று பார்ப்போம். அடிப்படை வாழ்வாதாரம் நிறைவடைந்து பிறகு வரும் கூடுதல்விருப்பத்தை ஆசை எனக் கொள்ளலாம். மனிதனின் ஒரே அடிப்படைத் தேவை உணவு மட்டுமே. உடை, உறைவிடம் என்பவை அறிவின் இயக்கத்தால் நாம் கண்டறியும் மேற்படி தேவைகளே. அவையில்லாமலும் ஒரு மனிதனால் வாழ்ந்துவிட முடியும். உணவின்றி வாழவே முடியாது. ஆக, அவசிய அடிப்படைத் தேவையான உணவைத் தேடுதல் ஆசையாகா. அது இயற்கையின் இயல்பு. வேட்டைச்சமூகத்தில் ஆசை, சூது, வஞ்சம், போர் போன்ற வார்த்தைகள் அர்த்தமற்றவையாகவே இருந்தன. எளிமயாகச் சொல்வதாயின், அச்சமூகத்தில் மனிதன் ஒரு விலங்கைப்போன்றே இருக்கிறான். பகல்பொழுதை உணவின் பொருட்டு அவன் வேட்டையிலேயே கழித்தாக வேண்டும். இரவுப்பொழுதை பிற மிருகங்களிடமிருந்து காத்துக்கொள்ளும் பொருட்டு குகைகளிலோ, மரப்பொந்துகளிலோ மறைந்திருந்து போக்கியாக வேண்டும். பகலில் இரைதேடுவது, இரவில் தற்காத்துக்கொள்வது என விலங்குகளின் வாழ்வாகவே அவன் வாழ்வும். மேலும், அச்சமூகக் காலகட்டத்தில் மனிதன் ஓரிடத்தில் தங்காது இடம்பெயர்ந்து கொண்டே இருக்கிறான். ஓரிடத்தில் தங்காது நாடோடியாக அலைந்தபடியே இருக்கவும் நேரிடுகிறது.   அதனால் ’ஆசை’யின் மாயக்கரங்களை அவன் காணும் வாய்ப்பேயில்லை. காலங்கள் உருண்டோடுகின்றன. அறிவின் தொடரியக்கத்தால் தன்னைச் சிறப்பு உயிராகக்  கருதத் துவங்கும் மனிதன் கொஞ்சம் கொஞ்சமாக உடை, உறைவிடம் குறித்து யோசிக்கத் துவங்குகிறான். வேளாண் சமூகத்தில் அது சாத்தியப்படுகிறது. வேட்டை, மேய்ச்சல் சமூகக்காலகட்டத்தில் அலைந்து திரிந்து கொண்டிருந்த மனிதன் வேளாண் சமூகத்தில் நிலைத்தகுடி வாழ்வுக்குத் தயாராகிறான். அங்குதான் அடிப்படைத்தேவைகளுக்காக புலம்பெயரும் தேவையில்லாத நிலை வருகிறது. ஓரிடத்தில் வசிக்கத்துவங்கும் மனிதனுக்கு நேரம் நிறைய கிடைக்கிறது.  வேட்டைச்சமூகத்தின் இனக்குழுக்களாக வாழ்ந்த காலத்தில் ஒருநாளின் பெரும்பான்மையான நேரத்தை உணவுத்தேடலுக்காகவே ஒதுக்க வேண்டி நேர்ந்தது. வேளாண்சமூகத்தின் குலங்களாக மாறிவிட்ட காலத்தில் நேரம் நிறையக் கிடைத்தது. அங்குதான் தன்னைப் பற்றியும், தன் வாழ்வைப் பற்றியும் அவன் சிந்திக்கத் துவங்குகிறான். மேலும், அடிப்படைத் தேவைகளைக் கடந்த விருப்பங்கள் அவனைச் சூழத் துவங்குகின்றன. அவையே ஆசைகளாகவும் உரு கொள்கின்றன. இதை இன்னும் விரிவான தளத்தில் பேசினால்தான் தர்க்க அறிவு திருப்தியாகும். என்றாலும், வாசிப்பாளர்கள் மேம்பட்டவர்கள் எனக்கருதிச் சுருக்கமாகச் சொல்லி இருக்கிறேன்.
ஆசைகளின் மூலவிதையாய் உடமைகளை உரிமை கொண்டாடும் மனப்பாங்கு இருக்கிறது. மேய்ச்சல் சமூகத்தில் அதன்பொருட்டே ஆநிரை கவர்தல் எனும் போர்முறை தோன்றியது. அக்காலத்தில் மாடுகளே செல்வமாக, சொத்தாக மதிக்கப்பட்டன. அவற்றைக் கவர்ந்து வந்துவிட்டால் ஒருவரை வென்றதாக அர்த்தம். எனது, உனது என நாம் அங்கிருந்து அடித்துக்கொள்ளத் துவங்குகிறோம்.  ’எனது’வைத் தாண்டி இன்னொருவருடையதை என்னுடையதாக்கும் நிலை வருகிறது. மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை எனும் மூன்று சொற்களால் அப்போதைய நம் மனநிலையைப் புரிந்து கொள்ளலாம். ஒரு குழுவிலிருந்து பிரியும் பலகுழுக்கள் தங்களுக்குள் போரிட்டுக்கொள்கின்றன. வெற்றிபெறும் குழுவில் தோல்விக்குழுவினர் இணைந்துகொள்ள வேண்டும். ஒருகுழுவின் நாட்டையோ, வளத்தையோ மற்ற குழுவினர் தங்கள் உடமையாக்கிக் கொள்ளப் போர்கள் நடைபெற்றுக் கொண்டே இருந்தன. பலகுழுக்கள் தனித்தனியே தங்கள் தகவமைப்புக்குத் தகுந்தாற்போல வாழாமல் தங்களுக்குள் போரிட்டுக் கொண்டதன் காரணம் தங்களுக்குள் யார் பெரியவன் என்பதைச் சொல்லத் துடிக்கும் ஆசையாக இருக்கலாம். அவ்வாசையின் ஊற்றுக்கண்தான் விளங்காத விசித்திரமாக இருக்கிறது. ஒருவேளை, ஆறாவது அறிவின் துணிந்த அகங்காரமோ? காலங்கள் உருண்டோட அவ்வாசையின் வேர்கள் வடிவங்களை மாற்றித் தன்னைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டு வருகின்றன அல்லது நாம் அவற்றுக்கு நீருற்றி வளர்த்தபடியே இருந்தோம்.
உணவு மட்டுமே முதன்மையாய் இருந்த காலத்தில் தன்னைப் பின்நகர்த்தி தனக்கு உதவும் இயற்கையின் ஆற்றலை முதன்மைப்படுத்திப் போற்றினான் மனிதன். காலப்போக்கில் இயற்கையைப் பின்னுக்கு நகர்த்தி தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளத் துவங்கிவிட்டான். அதனால்தான் இயற்கையை நேசிக்கச் சொன்ன வழிபாடுகள் கூட இன்று பொருளாதாரக் கிடங்குகளாக மாறிப்போயின. ஆண்டி முருகனைக் கும்பிட்டால் செல்வம் போய்விடும் எனும் மனநிலையே அதற்கு சாட்சி.மலையும், முருகனும் அனைத்துக்கும் அடிப்படையான மூலஆற்றலை நமக்குத் தொடர்ந்து ஞாபமூட்டிவரும் குறியீடுகள். குறியைக் குறியாது குறித்தறியும் எனும் அருணகிரி வாக்கை பாராயணமாகச் சொல்லிவிட்டுக் கடந்துவிடும் நமக்கு அவ்வரியின் தீட்சண்யம் எங்கே புரியப்போகிறது? நாம் பழனிமுருகனுக்கு இராஜஅலங்காரம் செய்வித்து நம் ஆசைகளுக்கு நியாயம் கற்பிக்கிறோம். முருகனுக்காக நாம் என்பதை மறந்து, நமக்காக முருகன் என்பதான நிலைக்குத் தயக்கமின்றி நகர்கிறோம். பழங்குடி மரபின் வழிபாட்டிலும், வாழ்விலும் இன்றும் இயற்கைக்கே முதலிடம்; மானுடனுக்குப் பிறகுதான். நவீனத்தொழில்நுட்பம் கோலோச்சிக்கொண்டிருக்கும் தற்காலத்திலும் பழங்குடிகள் இயற்கையோடு இணைந்த வாழ்வை விட்டுத்தரத் தயாரயில்லை. அதுவே உண்மையான் வழிபாடு. வழிபாடு என்பது வழிபடுதலாகும். எதன் வழிப்படல்? இயற்கையின் வழிப்படல். எளிமையாகச் சொல்வதாயின், நம் மூலஇயல்புக்கு இணங்கிநிற்றல். நாமோ வழிபாட்டையும், சமயங்களையும் அவற்றின் மையத்திலிருந்து பிரிந்து நம் பொருளாதார வாழ்வுக்குத் துணை நிற்கும் ஏவல்பிண்டங்களாக்கி இருக்கிறோம். அந்தோ கொடுமை! கடவுள், ஊழ், முற்பிறவி, வருபிறவி, பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம், நல்லநேரம், கெட்டநேரம், நவகோள்களின் கிரகபலன் போன்ற சொற்களுக்குப் பின்னிருப்பது நம் ஆசையின் மறைமுக சிலாகிப்புகளே.  
  /* மக்கள் என்றால் யார்இங்குள்ள மானுடத்திரள். எளிய உலகியல் ஆசைகளாலும் அச்சங்களாலும் மாறி மாறி அலைக்கழிக்கப்பட்டு வாழ்ந்து முடியும் வெறும் உடல்கள். அவர்களுக்கு வாழ்வது மட்டுமே முக்கியம். இங்கு இதுவரை சொல்லப்பட்ட அத்தனை நீதிகளையும் நாம் அடித்து உடைத்து ஆட்சியைக் கைப்பற்றி ஐந்துவருடம் அவர்கள் மகிழும் ஆட்சியை அளித்தால் நம்மை நீதிமான்கள் என்பார்கள். கணவன் திருடிக்கொண்டுவரும் நகைகளை வேண்டாமென்று சொன்ன எத்தனை பெண்களை நீ அறிந்திருக்கிறாய்அதைப்போலத்தான் மக்களும். மன்னர்களை படைகொண்டுசென்று பக்கத்து நாடுகளை சூறையாடச்செய்யும் பெரும் விசை எதுமக்களின் ஆசைதான். அப்படி கொன்று குவித்து சூறையாடிக் கொண்டுவந்து மக்களுக்குக் கொடுப்பவனையே மக்கள் மாமன்னன் என்று புகழ்கிறார்கள் என்றுதான் நீ கற்ற நூல்களும் சொல்லியிருக்கும்.*/ குந்தியின் வார்த்தைகள் புறயதார்த்தத்தையே நம்முன் வைக்கின்றன. புறயதார்த்தத்தை நாம் மறுக்க முடியாது என்றாலும், அதுவே யதார்த்தமில்லை என்பதை அறிவுகொண்டு விளங்கிக்கொள்ள முடியுமல்லவா? காலந்தோறும் வாய்மொழி புராணங்களும், காதலாகிக்கசிந்து கண்ணீர் மல்கிய தோத்திரங்களும், மெய்ப்பொருள் காணவிழையும் சாத்திரங்களும், இன்னும் பிற நூல்களும் அதையே நமக்குச் சொல்ல முனைகின்றன. எவன் ஒருவன் புறயதார்த்தத்தின் ஒழுங்குபோல் தோன்றும் மாய உலகின் ஆசைச்சுழலைப் புரிந்து கொள்கிறானோ, அவனுக்கு பிரபஞ்சப்பெருவெளியின் சிறுதுகளாகத் தன்னைக் காணும் மனநிலை வாய்க்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. அப்படி சிறுதுகளாகத் தன்னை உருவகித்துக்கொள்ள முயலும் ஒருவனுக்கு மன வாக்கு செயலாலே அடைதற்கரிதாக அருவுருவாகி ஒன்றுபோலே இருக்கும் பொருளைப் புகலும் அருணகிரிநாதரின் மனநிலை புரியத்துவங்கும்.
முருகவேலன்,
படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,
கோபிசெட்டிபாளையம்.