Saturday, November 8, 2014

பிரயாகை-13- வியப்பு



அர்ஜுனனின் வியப்பு
அன்புள்ள திரு.ஜெ வணக்கம். பிரயாகை-13 மேலும் கூர்மையாக உணர்கின்றேன். கூர்மையாக உணரும் தருணத்திலே அந்த அந்த இதழ்கள் அதற்கு உரிய நேர்த்தியுடன் செதுக்கப்படுகின்றது என்பதும் தெரிகின்றது.

வெண்முரசின் அற்புதமே அதன் பாத்திரங்கள் அனைத்தும் அதற்கு உரிய முழுமையுடன் இருப்பதுதான். ஒவ்வொரு பாத்திரமும் உருவும் உள்ளமும் முழுமையுடன் இருக்கின்றது அதனால் ஒவ்வொரு பாத்திரமும் தன்னை வெளிக்காட்ட முன்னோக்கி வரும்போது அந்த பாத்திரம் பெரிதாகி பிரமிக்கவைக்கிறது. ஒரு பாத்திரம் பெரிதாகும் போது மற்றது சிறியதாகிவிடவில்லை தெளிவாக தெரிகின்றது. க்ளோஸப் ஷாட் என்பதுபோல துள்ளியமாக்கப்படுகின்றது.

அர்ஜுனன், பீமன், தருமன் என ஒவ்வொருவரும் அவர்களுக்கு உரிய உயரத்தில் அவர்கள் வல்லமையோடு நிற்கும்போது வரும் விதுரர் வந்தவேகத்தில் பெரிதாகி, பெரியதாகியதே தெரியாதவண்ணம் சென்றுவிடுகின்றார். ஜெவின் எழுத்தைப்பார்த்து மலைப்பதை தவிர வேறு வழியில்லை எனக்கு. வாசகன்தான் இந்த பாத்திரங்களைக் கண்டு மலைக்கிறான் என்பது இல்லை அந்த அந்த காட்சியில் தோன்றும் பாத்திரங்கள் தங்களுக்குள்ளேயே மலைக்கும் அதிசயம் நடக்கின்றது.

அர்ஜுனன் ஒவ்வொருவரையும்  யார்போல் இருக்கின்றார் என்று கணிக்கக்கூடியவானக இருந்தான். அவன் கணிப்புப்படி ஒவ்வொருவரும் ஏதோ ஒருவித்தில் வேறு ஒருவரை ஒத்து இருக்கிறார்கள் என்பதை அறிந்து அவர்களின் பிம்பம் என்று பதிந்துக்கொள்கின்றான். அந்த பதிவே அவனுக்கு ஒரு அங்கதம். மற்றவரைப்பற்றி நாம் அறிந்துக்கொண்டால் அவர் எத்தனை பெரியவராக இருந்தாலும் வியப்பது இல்லை. நாம் அறிந்ததைவிட அவர் உயர்ந்து வரும்போது வியப்பதைதவிர வேறு வழியில்லை. அந்த வியப்பே ஒரு அறிந்துக்கொள்வது போன்றதுதான்.  விதுரர்மீது அவனுக்கு ஒருவித கோபம் இருந்தாலும், முதன் முறையாக அவரைக்கண்டு வியக்கிறான். முதன்முறையாக அறிவின் வெளி என்ன என்பதை அறிகின்றான். //அர்ஜுனன் வியப்புடன் விதுரரை நோக்கினான்//

இன்று சூதர்களின் தெற்குதெருவிற்கு செல்லும் அர்ஜுனன், விதுரர் தருமனைக்காணவரும்போது அவர் எப்போதாவது தெற்கு தெருவிற்கு சென்று இருப்பாரா? என்ற சந்தேகம் ஏற்படுகின்றது. ஒரு பெரியவரை பெரியவர் என்று ஏற்பதற்கு முன் அவரின் பலகீனம் என்ன என்று நினைக்கும் மானிட மனத்தை வெளிப்படுத்தும் விதம் அற்புதம் ஜெ. பலகீனத்திலிருந்தே பலம் அளந்து கணக்கிடப்படுகின்றது. //அர்ஜுனன் வியப்புடன் விதுரதை நோக்கினான்// என்ற ஒற்றைத்தொடரில் விதுரர் அர்ஜுனன் அகத்திற்கு முன் உயர்ந்து நிற்கின்றார்.


பிரபஞ்ச ஆடலின் வியப்பு
பிரபஞ்ச ஆடலின் நிகழ்வுகள் யாருக்காகவும் நிகழ்வதில்லை. அநத நிகழ்வுகளின் ஈர்ப்பில் மனிதனின் அறிவும் ஆசையும் ஓடி ஒட்டிக்கொள்கின்றன. அறிவும் ஆசையும் உணர்ச்சிகளை உண்டாக்குகின்றது. உணர்ச்சிகளில் இணைந்துக்கொள்ளும் காலம் இக்கட்டுகளை உருவாக்குகின்றது.

இக்கட்டுகளை வெல்ல காத்திருத்தல், பொருத்திருத்தல் பயன்படுகின்றது. காத்திருத்தல், பொருத்திருத்தல் காரணமாக உணர்ச்சிகள் மீது உள்ள காலம் நகர்ந்து சென்ற விடுகின்றது. காலமற்ற உணர்ச்சிகள் சிக்கு எடுக்கப்பட்ட கூந்தல்போல பிரிப்பதற்கு எளிதாகிவிடுகின்றது.  சிக்கல் இல்லாத நூல்போல பயன்பாட்டு உரியதாகி விடுகின்றது. முடிச்சுக்கள் அவிழ்க்கப்பட்ட ஓலைச்சுவடிபோல வாசிக்க முடிகின்றது.
இக்கட்டில் மாட்டிக்கொள்ளும் மனிதனின் அகத்துன்பத்தை அகற்ற வழி காத்திருத்தல், பொருத்திருத்தல் என்று  பீமன் சொன்னாலும், விதுரன் சொல்லும்போது இருக்கும் அந்த தெளிவு ஏன் பீமன் சொல்லும்போது இல்லை. பீமன் இலக்கை சொல்கின்றான், விதுரர் இலக்கையும் அதற்கான வழியையும் சொல்கின்றார். இலக்கை சொல்பவன் மீண்டும் ஒரு சிக்கலை உருவாக்குகின்றான். வழியை சொல்பவன் சிக்கலை உடைத்துவிடுகின்றான்.

//இக்கணம் அனைவரும் செய்யக்கூடுவது ஒன்றே, காத்திருப்பதுஎன்றார் விதுரர். பீமன் தன்னையறியாமல் நகைக்க விதுரர் அவனை திரும்பி நோக்கியபின் புன்னகையுடன்இளையவர் அவ்வழியையே சொல்லியிருப்பார் போலும்என்றார். அர்ஜுனன்ஆம்என்றான். “எந்த ஒரு ஆடலிலும் நிகழ்வுகளை நாம் நமக்குகந்த வகையிலேயே புரிந்துகொள்கிறோம். அதையொட்டி உணர்வுக்கொந்தளிப்பை அடைகிறோம். அக்கொந்தளிப்புகள் சற்று தணிவதற்காகக் காத்திருந்தபின் சிந்திப்போம் என்றால் மாற்றுவழிகள் தென்படும். ஆகவே, அரசு சூழ்தலின் முதல் விதியே பொறுத்திருத்தல், காத்திருத்தல்தான்.”//

விதுரரின் இந்த நீதி அரசாள்வதற்கு மட்டும் இல்லை, இக்கட்டுகளை உணரும் ஒவ்வொருவருக்கும் ஆனதே!

மனிதர்கள் ஒவ்வொருவரும் விரும்பியதை செய்ய விரும்புவதுபோலவே எதுவும் செய்யாமல் ஒய்வெடுக்கும்போதும் விரும்பியதிலேயே ஓய்வெடுக்க விரும்புகின்றார்கள். ஒருவன் கட்டத்தில், ஒருவன் காட்டில், ஒருவன் கட்டிலில். ஓய்வுகூட ஓயமுடியாத ஒன்றுதான் என்று இன்று அர்ஜுனன் காட்டுகின்றான். இதுகூட பிரபஞ்ச ஆடலின் வியப்புதான்.

நன்றி
அன்புடன்
ராமராஜன்மாணிக்கவேல்.